
- நிலாந்தன்
இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவடைந்து உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது இலங்கையில் நடந்த மிக நீண்டதொரு மக்கள் பேரணி. ராஜபக்சேவின் அரசாங்கம், ‘ஒரே நாடு; ஒரே தேசம்; ஒரே சட்டம்’ என்று அதிகாரப் பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் அதேவேளையில் இந்தச் சிறிய தீவில் மூன்று இன மக்களும் ‘ஒரே நாடாக... ஒரே தேசமாக இலங்கை இல்லை’ என்பதை பேரணி மூலம் நிரூபித்திருக்கிறார்கள்!

பிப்ரவரி 4-ம் தேதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று கொழும்பில் கோத்தபய ராஜபக்சே தன்னை சிங்கள பௌத்தர்களின் காவலனாக பிரகடனப்படுத்திக்கொண்டிருந்த அதே நேரத்தில், வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துக்கொண்டிருந்தார்கள். பிப்ரவரி 3-ம் தேதி பொத்துவில் தொடங்கி பிப்ரவரி 7-ம் தேதி பொலிகண்டியில் நிறைவடைந்த இந்தப் பேரணியை `P2P’ என்று அழைக்கிறார்கள். இந்தச் சொற்றொடர் கடைசிகட்ட போரில் காணாம ல்போன கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை வரியிலிருந்து எடுக்கப்பட்டது. சுமார் 780 கிலோமீட்டர் நீளப்பேரணியை `வடக்கு கிழக்கு சிவில் சமூகம்’ என்றழைக்கப்பட்ட ஓரமைப்பு ஒழுங்குபடுத்தியது. புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பக்கபலம் இதற்கிருந்தது. தமிழகம் ஆதரவாக இருந்தது. தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள எல்லாக் கட்சிகளும் இந்தப் பேரணியை ஆதரித்தன. முஸ்லிம் தலைவர்களும் ஆதரித்தார்கள். மனோ கணேசன் மன்னாரில் வந்து இணைந்துகொண்டார். இவ்வாறு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைந்து தமது எதிர்ப்பை கூர்மையானவிதத்தில் ஐந்து நாள்கள் வெளிப்படுத்தின. கடந்த பத்தாண்டுகளில் இவ்வாறு தொடராக ஐந்து நாள்கள் ஒரு பேரணி நடந்ததில்லை.

ராஜபக்சேக்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடந்த ஓராண்டுக்காலப் பகுதிக்குள், கிழக்கில் தமிழ் மக்களின் மேய்ச்சல் தரைகளை அரசாங்கத்தின் ஆதரவோடு சிங்கள விவசாயிகள் அபகரிக்க முற்படுகிறார்கள். மேய்ச்சல் தரைகளை இழந்தால், லட்சக்கணக்கான கால்நடைகளுக்கு உணவிருக்காது. கால்நடைகளைப் பராமரிக்க முடியாவிட்டால் விவசாயிகள் அவற்றை விற்பார்கள் அல்லது இறைச்சிக்கு வெட்டுவார்கள். கால்நடைகள் இல்லையென்றால் வேளாண்மையும் இருக்காது. இது கிழக்குத் தமிழ் மக்களின் முதுகெலும்பை உடைக்கக்கூடியது. வேளாண் மையைக் கைவிடும் தமிழ் மக்கள், பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போகிறார்கள். இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு குடும்பத் தலைவர்கள் அல்லது குடும்பத் தலைவிகள் செல்வதால் குடும்பங்கள் சீரழிகின்றன. பிள்ளைகளுக்குப் போதிய பராமரிப்பு இல்லை. இனவிருத்தி குறைகிறது. எனவே, கிழக்கின் பொருளாதார முதுகெலும்பை உடைப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கம்.
அதோடு கிழக்கில் சிங்களவர்களை மட்டும் உறுப்பினர்களாகக்கொண்ட ஒரு தொல்லியல் செயலணி உருவாக்கப்பட்டிருக்கிறது. இது, கிழக்கை சிங்கள பௌத்தமயப்படுத்தும் மரபுரிமை ஆக்கிரமிப்புத் திட்டத்தின் ஒரு பகுதி. கிழக்கை பலவீனப்படுத்தினால் வடக்கு - கிழக்கு இணைப்பு பலவீனமடைந்துவிடும். வடக்கு - கிழக்கு இணைப்பு இல்லையென்றால் தமிழ் மக்களின் தாயகக் கோரிக்கை தோற்கடிக்கப்பட்டுவிடும். இதுதான் அரசாங்கம் கிழக்கைக் குறிவைப்பதன் நோக்கம். அதனாலேயே போராட்டம் கிழக்கில்... அதுவும் அதிகம் சிங்கள மயப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் கிராமத்தில் தொடங்கியது.

வைரஸ் தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைப்பதற்கு அரசாங்கம் மறுக்கிறது. இது முஸ்லிம்களின் உணர்வுகளைக் கொந்தளிக்கச்செய்திருக்கிறது. பேரணியில் முஸ்லிம்களுக்காகவும் மலையகத் தமிழர்களுக்காகவும் கோஷங்கள் ஒலித்தன. தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தெருவில் இறங்கி தமது எதிர்ப்பைக் காட்டின. பேரணியின் தொடக்கத்தில் சில பத்து ஆர்ப்பாட்டக்காரர்களே காணப் பட்டார்கள். மழை பெய்துகொண்டிருந்தது. எல்லா மாவட்டங்களிலும் போலீஸார் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கிவைத்திருந்தார்கள். எனினும், தடைகளை உடைத்துக்கொண்டு பேரணி முன் சென்றது. போலீஸார் முதலில் பேரணியைத் தடுக்க முயன்றார்கள். ஒருகட்டத்தில் பேரணி அவர் களுடைய கையை மீறி வளரத் தொடங்கிவிட்டது.
ஊர்வலம் வடமராட்சியில் முடிவடைந்தபோது பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்தப் பகுதியில் காணப்பட்டார்கள். இளைஞர்கள் சிவப்பு மஞ்சள் கொடியை அசைத்தபடி ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்களில் தெருவில் இறங்கினார்கள். அவர்கள் தங்கள் தலைகளில் `P2P’ எழுத்துகள் பொறிக்கப்பட்ட பட்டிகளை, முகக்கவசங்களை அணிந்திருந்தார்கள். தமிழ்ப் பகுதிகளில் சிவில் சமூகங்கள் பெருமளவுக்கு கிறிஸ்தவ மற்றும் இந்துமத குருமார்களை உள்ளடக்கியவைதான். சமயத் தலைவர்களை முன்னிறுத்துவதால் போலீஸ் மற்றும் படைத்தரப்பி டமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களைச் சமாளிக் கலாம் என்று சிவில் சமூகங்கள் நம்புகின்றன. அதனால் இந்தமுறை பேரணியில் சமயத் தலைவர்களே முன்னுக்கு வந்தார்கள். அரசியல் தலைவர்கள் பின்னணியில் நின்றார்கள். பேரணி யின் வெற்றிக்கு அரசியல் கட்சிகளும் காரணம்.


சில மக்கள் பிரதிநிதிகள் பேரணியைத் தத்தெடுக்க முயன்றதாகவும் விமர்சனங்கள் உண்டு. பேரணியின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை சர்ச்சைகள் இருந்தன. எனினும், எல்லாவிதமான சர்ச்சைகளுக்கும் அப்பால் இந்த ஐந்து நாள்கள் பேரணி பின்வரும் விடயங்களை உணர்த்தியிருக்கிறது.
முதலாவது, வடக்கு கிழக்கு பகுதிகள் தமிழ் மக் களின் தாயகம். அது உணர்வுபூர்வமாக இப்போதும் ஓருடலாகவே இணைந்திருக்கிறது. இரண்டாவது, கடந்த சில தசாப்தங்களாக பிளவுபட்டிருந்த தமிழ் - முஸ்லிம் மக்களை சில விடயங்களிலாவது ஒற்றுமைப்படுத்தலாம் என்ற நம்பிக்கையை இந்தப் பேரணி ஏற்படுத்தியிருக்கிறது. மூன்றாவது, தமிழ் மக்கள் பொருத்தமான அறவழிப் போராட்டங் களுக்காக எப்போதும் வீதியில் இறங்கத் தயாராக இருக்கிறார்கள்.
பேரணியின் ஏற்பாட்டாளர்களே கற்பனை செய்திராத ஒரு வெற்றியை உலகமே கவனிக்கத் தொடங்கியிருப்பது நம்பிக்கையை விதைத்திருக்கிறது!