தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஊருவிட்டு ஊருவந்து!

 வசந்தன் - மெகுமி,
பிரீமியம் ஸ்டோரி
News
வசந்தன் - மெகுமி,

மேல்நாட்டு மருமகள்

ங்கள் மகன்களின் கடல் கடந்த காதலை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பெற்றோர். எப்படி நடந்தது இந்தக் காதல் மேஜிக்?

காரைக்குடி அருகே உள்ள தட்டடிபுதூரைச் சேர்ந்தவர் செல்லையா. இவர் மகன் கந்தசாமி அமேசான் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அமெரிக்கப் பெண்ணான எலிசபெத்தைக் காதலித்த கந்தசாமி, குடும்பத்தினர் சம்மதத்துடன் சொந்த கிராமத்திலேயே திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

``எனக்கு ரெண்டு பொண்ணு, ஒரு பையன். மனைவி தவமணி 17 வருஷம் முன்னாடி தவறிட்டாங்க. கந்தசாமி கடைக்குட்டி. படிப்பில் கெட்டிக்காரன். அமெரிக்காவுல படிச்சான். அங்கேயே வேலை. அவனுக்குக் கல்யாணம் முடிக்கணும்னு நானும் என் மகள்களும் பொண்ணுங்க போட்டோக்களை அனுப்பினா... `பிடிக்கலைப்பா'ன்னு சொல்லிடுவான்.

ஒருநாள், ‘நான் அமெரிக்காவிலேயே ஒரு பொண்ணு பார்த்திருக்கேன்ப்பா’னு சொன்னான். ஆரம்பத்துல யோசனையா இருந்துச்சு. பொண்ணை எங்களுக்குப் பிடிக்கிறதைவிட, கூட வாழப்போற என் மகனுக்குத்தானே பிடிக்கணும்? அதனால, உடனே கல்யாணத் தேதியைக் குறிச்சுட்டேன் '' என்கிறவரின் பேச்சில் மகன் மீதான பாசம் வெளிப்படுகிறது.

 வசந்தன் - மெகுமி,  கந்தசாமி - எலிசபெத்
வசந்தன் - மெகுமி, கந்தசாமி - எலிசபெத்

மாமனாரின் தமிழ் புரியாவிட்டாலும் சிரித்த முகத்துடன் பேச ஆரம்பித்தார் எலிசபெத், ‘`எனக்கு கந்தசாமியை ரொம்பப் பிடிக்கும். அதனால அவரை நம்பி நாடுவிட்டு நாடுவந்து கல்யாணம் பண்ணிக் கிட்டேன். எனக்கு தமிழ்க் கலாசாரம் பிடித்திருக்கிறது. திருமணத்தின்போது செய்த சடங்குகளைப் புரிஞ்சுக்க முடியலை. ஆனால், எல்லாமே எங்களுடைய நன்மைக்குத்தான் என்பது மட்டும் தெரிந்தது. என் கணவர் சிகாகோவில் இருக்கும்போதே எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பார். இப்போது இங்கு எல்லோரும் தமிழ்ல பேசுவதால், சில வார்த்தைகளைப் தெரிந்துகொள்ள முடிகிறது. இப்போதைக்கு ஆடு, மாடு, கோழி, நாய், கொசு மாதிரியான குட்டிக் குட்டி வார்த்தைகளைப் பேச முடியும். கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழைக் கற்றுக்கொள்வேன்” என்கிறார் கணவர் கந்தசாமியை ஆசையாகப் பார்த்தபடி.

``நான் அமெரிக்காவுல பிஹெச்.டி படிக்கும்போது நண்பர்கள் சிலர் ஒரு குழுவா இருந்தோம். அதில் எலிசபெத்தும் ஒருவர். ஒரு கட்டத்தில் அவருடைய இனிமையான குணத்துக்காகவே திருமணம் செய்துக் கணும்னு தோணுச்சு. என் விருப்பத்தை எலிசபெத்கிட்ட சொன்னேன். ரெண்டு வீட்டுப் பெற்றோர் சம்மதம் கிடைச்சது. முதல்ல அமெரிக்காவில் அங்குள்ள கலாசார முறைப்படி திருமணம் செய்தோம். பிறகு என் சொந்த ஊர்ல தமிழ்க் கலாசார அடிப்படையிலும் திருமணம் செய்துகிட்டோம். நம்ம ஊர்ல சுதந்திரமா உணர்வதா சொல்றாங்க எலிசபெத். நம்ம ஊர் வெயிலுதான் கொஞ்சம் சிரமமா இருக்கு. கொசுக்கடிக்கும் பயப்படுறாங்க. ரெண்டு பேருமே சிகாகோவில் வேலை பார்ப்பதால கூடிய விரைவில் அமெரிக்கா கிளம்பிடுவோம். சாதி, மதங்களை ஒழிக்க காதல் திருமணங்கள்தாம் நல்ல தீர்வா இருக்கும்’' என்று ஃபைனல் பாயின்ட் வைக்கிறார் கந்தசாமி.

 குடும்பத்தினருடன் கந்தசாமி - எலிசபெத்...
குடும்பத்தினருடன் கந்தசாமி - எலிசபெத்...

கும்பகோணம் விவேகானந்தர் தெருவில் வசிக்கிற ஜெயக்குமார் - கிருஷ்ணவேணி தம்பதியின் மருமகள் ஜப்பானைச் சேர்ந்தவர். ``நாங்க ரெண்டு பேரும் அரசு வேலையிலிருந்து ஓய்வுபெற்றவங்க. மூத்தவன் வசந்தன் ஜப்பான்லயும், இளையவன் பிரதீப் மலேசியாவிலும் வேலை பார்க்கிறாங்க. ஏழு வருஷமா ஜப்பான்ல வேலைபார்த்துட்டு வர்ற வசந்தனுக்கு முதலில் உள்ளூரில்தான் பெண் பார்த்தோம். எதுவும் அமையலை. ஒருநாள் வசந்தன், ‘அம்மா... நான் ஜப்பானிலேயே பெண் பார்க்கவா’னு கேட்டான். நம்ம பழக்கவழக்கம் மாதிரி இருக்காதேங்கிற யோசனையில் அரை மனசோடுதான் சம்மதிச்சோம். சில நாள்கள் கழிச்சு, வாட்ஸ்அப் வீடியோவில் எங்க வருங் கால மருமகளை அறிமுகப்படுத்தினான். ‘மெகுமி’யிடம் முதன்முறையா பேசும்போதே எங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. தேதியைக் குறிச்சுட்டோம்’’ என்கிறார் கிருஷ்ணவேணி.

மருமகளுடனான ஜாலி எபிசோடுகளை பகிர்ந்துகொண்ட கிருஷ்ணவேணி, ‘`சொந்தக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தப்போ, அவங்க முகத்தில் தெரிஞ்ச அதிர்ச்சியைப் பார்க்கணுமே! கல்யாணம்வரை இந்தக் காமெடி தொடர்ந்தது. சிலர், எங்களுக்குப் பிடிக்காமதான் இந்தக் கல்யாணம் நடக்குதுனு நினைச்சுக் கிட்டு, என் கணவரின் கையைப் பிடிச்சுக்கிட்டு, ‘கவலைப்படாதீங்க... நடப்பது தானே நடக்கும். நம்ம கையில என்ன இருக்கு’ன்னு ஆறுதல் சொல்ல, ‘அட, பொண்ணை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க’ன்னு சத்தமா சிரிச்சுக்கிட்டே பதில் சொல்வோம்.

குடும்பத்தினருடன் வசந்தன் - மெகுமி...
குடும்பத்தினருடன் வசந்தன் - மெகுமி...

மெகுமி, தமிழ் முறைப்படி சடங்கு, சம்பிரதாயங்கள் நடக்க தாலிகட்டிக்க ஆசைப் பட்டா. அதனால, எங்க மருமகளுக்கு ஏத்த நிறத்தில் தேடித்தேடி பட்டுப்புடவை எடுத்தோம். என் மருமகளோட தங்கை மற்றும் தோழிகளுக்கும் பட்டுப்புடவை எடுத்தோம். ஆண் நண்பர்களுக்குப் பட்டு வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்தோம்.

திருமணத்துக்கு முதல் நாள்தான் எல்லாரும் ஜப்பான்ல இருந்து வந்தாங்க. அவங்களை நம்ம முறைப்படி ஆரத்தி எடுத்து வரவேற்று, மருதாணி வெச்சு விட்டோம். அவங்களுக்கு சந்தோஷம் தாங்கலை. மெகுமியின் பெற்றோரால கல்யாணத்துக்கு வர முடியலை. அதனால கண்கலங்கின மெகுமிட்ட, ‘எங்களுக்கு மகளே இல்லை, நீதான் இனி எங்க பொண்ணு’னு சொன்னதும், அவ முகம் மலர்ந்துடுச்சு.

கல்யாணம் முடிஞ்சு பொண்ணு, மாப்பிள்ளை இங்கதான் பத்து நாள் இருந்தாங்க. அந்த பத்து நாளும் பூ வைச்சு ஜடை பின்னிவிடச் சொன்னா மெகுமி. மல்லிகைப்பூனா அவளுக்கு அவ்ளோ இஷ்டம். ‘உங்க சமையல் வசந்தனுக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதை எனக்கும் கத்துக்கொடுங்க’னு கேட்டு, கொஞ்சம் நம்ம ஊர் சமையலைக் கத்துக்கிட்டுதான் ஜப்பானுக்கு ஃப்ளைட் ஏறியிருக்கா. கிளம்பும்போது என்கிட்ட ஒரு லெட்டர் கொடுத்து, ‘நான் போனதும்தான் படிக்கணும்’னு சொன்னா.

அதில், ‘புது நாடு, புது உறவுகள்னு பயந்துட்டேதான் வந்தேன். அம்மா அப்பாவா இருந்து என்னைப் பார்த்துக்கிட்டீங்க. நான் ரொம்ப கொடுத்து வெச்சவள்’னு நெகிழ்ச்சியோடு எழுதியிருந்தா. தினமும் போன்ல பேசும்போது, அவ எங்களை அத்தை மாமான்னு கூப்பிடுறதே அவ்வளவு அழகா இருக்கு'' என்கிறார் கிருஷ்ணவேணி பரவசத்துடன்.

மணமகன் வசந்தனிடம் தொலைபேசியில் பேசினோம். ‘`நாங்க டோக்கியோவில் இருக்கோம். திருமணத்தின்போது நேரம் இல்லாததால புரோகிதர் சில சடங்குகளைச் செய்யலை. மெகுமி மணமேடையிலேயே, ‘நான் வீடியோவில் தமிழ்க் கல்யாணத்தில நிறைய சடங்குகளைப் பார்த்தேனே... நீங்கள் ஏன் அதையெல்லாம் செய்யலை’னு புரோகிதர்கிட்ட கேட்க, மண்டபமே சிரிப்பில் அதிர்ந்துடுச்சு. அந்த அளவுக்கு மெகுமிக்கு நம்ம கலாசாரம் மேல காதல்’’ என்கிறவர், தன் மனைவியிடம் போனை கொடுத்தார். ‘`வணக்கம்... தமிழ்நாட்டையும் என் அத்தை மாமாவையும் ரொம்பவே மிஸ் செய்கிறேன்’’ என்கிறார் ஜப்பான் புதுப்பொண்ணு, மழலைத் தமிழில்.

அட!