
கடல் என்பது மீனவர்களின் சொத்து. படகு பழுதாகிக் காற்றின் திசையில் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டினால் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்பது சர்வதேச விதி.
குரலற்றவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மீனவர்கள். அவர்களின் குமுறலும் துயரமும் நீண்டுகொண்டே போகிறது. அவர்கள் எந்தப்பக்கம் போனாலும் அணைகட்டி அடிக்கிறது காலம். ஒரு பக்கம் இலங்கைக் கடற்படையின் அராஜகத்தில், கிழக்குக் கடலில் இருந்து அந்நியமாகிக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மீனவர்கள். தமிழகமே வேண்டாம் என்று வேறு பகுதிக்குப் போனாலும் அடியும் மரணமுமே அவர்களுக்குப் பரிசாகக் கிடைக்கிறது.
கடந்த மார்ச் மாதம் அந்தமானின் போர்ட்பிளேயரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற எட்டுத் தமிழக மீனவர்களை தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கைது செய்தது இந்தோனேசியக் கடற்படை. படகு உரிமையாளரும் ஓட்டுநருமான குமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த மரிய ஜெசின்தாஸ், மே 20-ம் தேதி இந்தோனேசியாவில் மரணமடைந்தார். ‘சிறையில் அவரைச் சித்திரவதை செய்து கொன்றார்கள்’ என்று கதறுகிறார்கள் உடன் சிறையில் இருந்த சக மீனவர்கள்.

மரிய ஜெசின்தாஸுடன் இந்தோனேசியச் சிறையில் இருந்த, பூத்துறை இம்மானுவேல் ஜோஸ் இந்தியத் தூதரகத்தின் முயற்சியால் நவம்பர் 22-ம் தேதி விடுவிக்கப்பட்டார். கலங்கிய கண்களோடும் மிரட்சியோடும் தான் பட்டு மீண்டுவந்த மரண வலியைப் பகிர்ந்துகொண்டார் ஜோஸ்.
‘‘போர்ட்பிளேயர்ல இருந்து கிளம்பி லிட்டில் நிக்கோபர் தீவுப்பகுதியில மீன் பிடிப்போம். அந்தத் தீவுக்கும், இந்தோனேசிய எல்லைக்கும் 20 நாட்டிக்கல் தூரம். வழக்கமா கடலுக்குள்ள போனா, மீன் கிடைக்கிறதைப் பொறுத்து ஒரு மாசம் வரைக்கும் தங்கியிருப்போம். அன்னைக்கு எட்டுப் பேர் போயிருந்தோம். ஓரளவுக்கு மீன் கிடைச்சுச்சு. 15-ம் நாளு கிளம்பலாம்னு திட்டமிட்டப்ப, இஞ்சின்ல பிரச்னையாயிருச்சு. ரெண்டு நாள் போராடி அதைச் சரி செஞ்சோம். பயங்கரமான காற்று, மழை. நீரோட்டமும் கூடுதலா இருந்துச்சு. என்ஜின் கட்டுப்பாட்டுல இல்லாததால இந்திய எல்லையைத் தாண்டி இந்தோனேசிய எல்லைக்குள்ள போயிருச்சு. ஜி.பி.எஸ் கருவி மூலமா அது எங்களுக்குத் தெரிஞ்சுச்சு. கரைக்குத் தொடர்பு கொள்ள முயற்சி செஞ்சப்போ சாட்டிலைட் போன்ல சிக்னல் கிடைக்கல. படகை சரி பண்ணி இந்திய எல்லை நோக்கி ஓட்டிட்டு வரும்போது இந்தோனேசியக் கடற்படை துப்பாக்கி முனையில சுத்தி வளைச்சுட்டாங்க. ‘என்ஜின் பழுதானதால, தெரியாம வந்திட்டோம்'னு எங்களுக்குத் தெரிஞ்ச இங்கிலீஷ்ல சொன்னோம். ஆனா அவங்க கேட்கலே. கரைக்குக் கொண்டுபோய் ஒரு இடத்தில ரெண்டு நாள் வச்சிருந்தாங்க. பிறகு இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோய் நாலு பேரை மட்டும் விட்டுட்டாங்க. எங்க நாலுபேரையும் கொஞ்சநாள் கழிச்சு விட்டுடுவோம்னு சொன்னாங்க. ஓட்டுநர்ங்கிறதால ஜெசின்தாஸை தனி செல்லுல அடைச்சிருந்தாங்க.
60 நாளுக்கு மேல ஆயிடுச்சு. ஒருநாள் ஜெசின்தாஸ் செல்லுக்குள்ள இருந்து கடுமையா சத்தம் போட்டார். ‘கடுமையான காய்ச்சல் இருக்கு. காதுக்குள்ள இருந்து ரத்தம் வருது'ன்னு பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்க. ஆனா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போகலே. நாங்க எங்க செல்லுக்குள்ள இருந்து சத்தம் போட்டோம். நாலாவது நாள் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனாங்க. என்னை அவர் பக்கத்துல இருக்க அனுமதிச்சாங்க. அவர் சுயநினைவோடு இல்லை. சம்பந்தமே இல்லாம என்னன்னவோ பேசினார். கிட்டத்தட்ட மனநலம் பாதிக்கப்பட்டது மாதிரி. அவரைக் கடுமையா சித்திரவதை செஞ்சது அவரோட உடலையும் செயல்பாடுகளையும் பார்க்கும்போது தெரிஞ்சது. கொஞ்ச நேரத்துல, என்னை வெளியே அனுப்பிட்டு ஐ.சி.யு-க்குள்ள கொண்டு போனாங்க. மூணாவது நாள் இறந்துட்டார்னு சொல்லிட்டாங்க. உண்மையைச் சொல்லணும்னா இந்தோனேசிய அதிகாரிகள் அவரைக் கொலை செஞ்சுட்டாங்க. உரிய நேரத்துல மருத்துவமனையில சேர்ந்திருந்தாகூட பிழைச்சிருப்பார். அதையும் செய்யலே. அந்த உயிரை ஒரு பொருட்டாவே அவங்க மதிக்கலே...’’ கலங்கும் ஜோஸை மனைவி செல்வி ஆறுதல் படுத்துகிறார்.
‘‘ஜெசின்தாஸ் இறந்தபிறகு, அவர் மேல போட்ட கேஸை எங்க மூணுபேர் மேல போட முயற்சி பண்ணினாங்க. அதுக்காகக் கையெழுத்து கேட்டப்போ நான் மறுத்தேன். குடிக்கத் தண்ணி தராம, சாப்பாடு தராம ரொம்பக் கொடுமைப்படுத்தினாங்க. ‘உங்க அதிகாரிங்க யாரும் ஜெயில் காம்பவுண்டுக்குள்ள கூட வரமுடியாது. கையெழுத்துப் போட லேன்னா உங்க டிரைவர் செத்தமாதிரி நீங்களும் செத்துடுவீங்க'ன்னு ஒரு அதிகாரி சொன்னார். கடைசியா வேற வழியில்லாம, ‘நான் கையெழுத்துப் போடுறேன், மத்த ரெண்டு பேரை விட்டுடுங்க'ன்னு சொன்னேன். எல்லா கேசையும் என்மேல போட்டாங்க. இந்தியத் தூதரகம் தலையிட்டபிறகு மூணு பேரையும் கோர்ட்டுல நிறுத்தி ரிலீஸ் பண்ணினாங்க.

ரெண்டு வேளை கொஞ்சம் போல சாப்பாடு தருவாங்க. கேப்டன் இறந்தபிறகு அதுவும் இல்ல. அவங்களுக்கா தோணும்போது தருவாங்க. எப்படா வரும்னு வாசல் பாத்துக்கிட்டு உக்காந்திருப்போம். அவங்க மொழியும் தெரியாததால நரகத்துக்குள்ள இருக்கிறமாதிரிதான் இருந்துச்சு. இந்தியத் தூதரகம் கடவுள் மாதிரி வந்து எங்களைக் காப்பாத்துச்சு. இன்னும் ஒன்னு ரெண்டு வாரம் அங்கே இருந்திருந்தா ஜெசின்தாஸ் மாதிரி எங்களுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும். தாகம், பசின்னு உடம்பு வலுவிழந்துபோச்சு. இதுல இருந்து இந்த ஜென்மத்துல மீளமுடியாது...’’ இமைகளை அழுத்தமாக மூடிக் கண்ணீரைக் கட்டுப்படுத்துகிறார் ஜோஸ்.
இந்தோனேசியாவில் இறந்த ஜெசின்தாஸோடு பிறந்தவர்கள் ஆறு பேர். ஜெசின்தாஸ்தான் குடும்பத்தைச் சுமந்தார். ‘‘அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால தொழிலுக்குப் போகமுடியலே. எங்க எல்லாருக்கும் அப்பாவா இருந்து வளர்த்தது அண்ணன்தான். ‘ரெண்டு தங்கச்சிகளுக்குக் கல்யாணம் கட்டிக்கொடுக்கணும். இனிமேயும் கூலிக்குப் போய்க்கிட்டிருந்தா சரியா வராது'ன்னு பத்து லட்சம் கடன் வங்கிப் படகு வாங்கினார் அண்ணன். இங்க தொழில் சரியா இல்லை. அதுக்காக அந்தமான் போய்த் தொழில் செஞ்சார். போய் ஒரு வருஷம் கூட ஆகல. அதுக்குள்ள அவரைக் கொன்னுட்டாங்க. இங்கே கலெக்டர் ஆபீஸ் மூலமா அவங்களுக்கு எந்தக் குற்ற சம்பந்தமும் இல்லேன்னு வெரிபிகேஷன் அனுப்பிக் கொடுத்தோம். அதனாலதான் நாலு பேரை விட்டாங்க. அவங்ககிட்ட கேட்டப்ப, ‘மத்தவங்கெல்லாம் நல்லாத்தான் இருக்காங்க. சீக்கிரமே வந்திடுவாங்க'ன்னு சொன்னாங்க. அண்ணன் இறந்தபிறகுதான் வழக்கே போட்டிருக்காங்க. எந்தக் கெட்டபழக்கமும் இல்லாத, 33 வயசு ஆளு முழு ஆரோக்கியத்தோடு இருந்தார். அவரைப் பொணமாப் பாக்கத்தான் நாங்கெல்லாம் உயிரோட இருக்கோமா..? தலைமுறையா நாங்க பிழைக்கிற கடலு... இப்படியே போற மீனவர்களையெல்லாம் பிணமாக்கிட்டா நாங்க எங்கே போய்ப் பிழைக்கிறது..?’’ கண்கள் தளும்புகின்றன ஜெசின்தாஸின் தம்பி ஜெனிதாஸுக்கு.

ஜெஸின்தாஸின் உடல் நவம்பர் 23-ம் தேதி குமரிக்கு வந்து, அடக்கம் செய்யப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கையில் அவரது உடலில் பல இடங்களில் காயம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. காயங்களால்தான் மரணமடைந்தார் என்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
‘‘இதைத் தீவிர மனித உரிமை மீறலாக எடுத்துக்கொண்டு இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இங்கிருக்கும் இந்தோ னேசியத் தூதர் இந்தக் குற்றத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு இந்திய மீனவரின் குடும்பத்தி னருக்கு 5 கோடி ரூபாயை இத்தாலி அரசிடம் இருந்து பெற்றுக்கொடுத்தது மத்திய அரசு. அதுபோல இந்தோ னேசியச் சிறையில் கொல்லப்பட்ட மீனவருக்கு நீதியும், குடும்பத்துக்கு இழப்பீடும் பெற்றுத்தரவேண்டும். எல்லை தாண்டியதாகச் சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் சிறையில் அடைக்கப் படுவார்கள். நீதிமன்றத்தில் நிறுத்தப் படுவார்கள். சிறையில் இறப்பது இதுதான் முதல் முறை. எனவே அரசு இதைத் தீவிரமாக கவனத்தில் கொள்ளவேண்டும்’’ என்று கோரிக்கை விடுக்கிறார் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில்.
கடல் என்பது மீனவர்களின் சொத்து. படகு பழுதாகிக் காற்றின் திசையில் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டினால் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்பது சர்வதேச விதி. சிறையில் அடித்துச் சித்திரவதை செய்து கொல்வதெல்லாம் குரூர வன்மம். இறப்பது தமிழ் மீனவன் என்பதாலோ என்னவோ இந்திய அரசு மயிலிறகால் வருடிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டவேண்டும். வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் தமிழ் மீனவர்களின் ரத்தத்தால் கடல் நிறம் மாறிவிடும்.