`பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஆகம விதிமுறையின்படியும், நீதிமன்ற உத்தரவுப்படியும், தமிழில் வேத மந்திரங்கள் பயன்படுத்தப்படும்’ என்று உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதை தமிழ் ஆர்வலர்லர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்த வழக்கில், ``தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வருகிற 27-ம் தேதி குடமுழுக்கு விமர்சையாக நடைபெறவிருக்கிறது.
இந்தக் குடமுழுக்கு விழாவில், வேத மந்திரங்களைத் தமிழில் ஓதுவதுதான் முறை. தமிழில் வேத மந்திரங்கள் ஏராளம் இருக்கின்றன. ஏற்கெனவே, தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடந்தபோது தமிழில் வேத மந்திரங்கள் ஓத வேண்டும் என்றும், அதே நடைமுறையை அனைத்துக் கோயில்களிலும் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கும் பொருந்தும். ஆனால், பல கோயில் குடமுழுக்கு விழாக்களில் வேத மந்திரங்கள் சம்ஸ்கிருதத்தில்தான் ஓதப்படுகின்றன. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் தமிழ் ஓதுவார்கள் ஒரு பகுதியில் மட்டுமே மந்திரம் ஓத அனுமதிக்கப்பட்டார்கள். எனவே, பழநி முருகன் கோயில் குடமுழுக்கில் அனைத்து பூஜைகளிலும் வேத மந்திரங்கள் சம்ஸ்கிருத்துக்கு இணையாகத் தமிழில் ஓதப்பட உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் விசாரித்தபோது, அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, ``குடமுழுக்கு விழாவில் திருப்புகழ், திருமறைகள் உள்ளிட்ட தமிழ் வேத மந்திரங்கள், பாடல்கள் பாடுவதற்கு ஓதுவார்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கோயில் ஆகம விதிமுறையின்படியும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும் குடமுழுக்கு விழா நடைபெறும்" என்றார்.
தமிழ் மொழியை சிறப்பாகப் பயன்படுத்தப்போவதாக உறுதி அளித்து, குடமுழுக்கு அழைப்பிதழ் இந்து சமய அறநிலையத்துறையினர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
``நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி பழநி தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கில் தமிழ் எந்த அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்த நிலை அறிக்கையை கோயில் நிர்வாகத்தினர் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வருகிற 30-ம் தேதிக்கு வழக்கைத் தள்ளிவைத்தனர்.
இது குறித்து வழக்கு தாக்கல் செய்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரனிடம் பேசினேன். ``எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று தொடர்ந்து போராடிவருகிறோம். அந்த அடிப்படையில்தான் தமிழகத்தின் முதன்மையான தமிழ்க் கடவுள் முருகனின் கோயிலான பழநி கோயில் குடமுழுக்கில் தமிழில் வேத மந்திரங்கள் ஓத வேண்டும் என்று தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்தோம். ஆரம்பகாலத்தில் அங்கு தமிழில்தான் வழிபாடு நடந்திருக்கிறது. இடைப்பட்ட காலத்தில்தான் மாறியிருக்கிறது.

தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற, தொடர்ந்து வலியுறுத்தினோம். அறநிலையத்துறை அமைச்சரைச் சந்தித்தும் முறையிட்டோம். அதைத் தொடர்ந்துதான் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உத்தரவுகளைப் பெற்றிருக்கிறோம்.
இதற்காக, பலரும் பாராட்டிவருகிறார்கள். அதிலும் குறிப்பாக புதுச்சேரியில் வசிக்கும் பாவேந்தர் பாரதிதாசனாருடைய பேரன் கோ.செல்வம் என்னை அழைத்துப் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே தஞ்சை பெருவுடையார் கோயில், கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்றேன். தற்போது பழநி கோயிலிலும் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது” என்றார்.
இந்தத் தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், `` `தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ் ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விவகாரத்திலும், கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவிலும் இது தமிழில் முறையாக நடத்தப்படவில்லை.

இந்தச் சூழலில், `பழநி முருகன் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும்’ என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனவே, பழநி முருகன் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக்கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்களும், சம்ஸ்கிருத மந்திரங்களும் சம அளவில் அர்ச்சிக்கப்படும் என்பதைப் பொத்தாம் பொதுவாக கூறாமல், அறிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
நீதிமன்ற உத்தரவை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.