அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

தொடரும் வீழ்ச்சி... நிலுவை பாக்கி. தடங்கலுக்கு வருந்துமா அரசு கேபிள் டி.வி?

தடங்கலுக்கு வருந்துமா அரசு கேபிள் டி.வி?
பிரீமியம் ஸ்டோரி
News
தடங்கலுக்கு வருந்துமா அரசு கேபிள் டி.வி?

அதிகபட்சமாக டி.சி.சி.எல் 28 லட்சமும், அதற்கடுத்த இடத்தில் 24 லட்சம் இணைப்புகளோடு அரசு கேபிள் டி.வி-யும் இருக்கின்றன

தமிழ்நாடு கேபிள் டி.வி நிறுவனத்தின் தலைவர் மாற்றம், ஒரு வாரமாக அரசு கேபிள் டி.வி ஒளிபரப்பு முடக்கம், தனியார் நிறுவனத்தின் ‘நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை’ என்கிற குற்றச்சாட்டு, ஒப்பந்த நிறுவனத்தின்மீது வழக்கு பதிவு என அரசு கேபிள் டி.வி நிறுவனத்தைச் சுற்றி அடுத்தடுத்து சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன. இதற்கிடையே, மாநில அரசுகள் கேபிள் மூலம் சேவை வழங்கவும், தனியாகத் தொலைக்காட்சி நடத்தவும் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடைவிதித்திருக்கிறது. அரசு கேபிள் டி.வி நிறுவனத்தில் என்னதான் பிரச்னை, என்ன நடக்கிறது என்பதை அறிய களமிறங்கினோம்.

நம்மிடம் பேசிய அரசு கேபிள் டி.வி நிறுவன அதிகாரி ஒருவர், “அரசு கேபிள் டி.வி மூலம் பொதுமக்களுக்கு சேவை வழங்குவதற்காக, கடந்த 2017-ம் ஆண்டு, 37.4 லட்சம் செட்டாப் பாக்ஸுகள் கொள்முதல் செய்யப்பட்டன. தூத்துக்குடியைச் சேர்ந்த வி.எஸ்.ராஜன் என்பவரின் ‘மந்த்ரா’ நிறுவனம்தான், 614 கோடி மதிப்பிலான இந்த செட்டாப் பாக்ஸ் டெண்டரை எடுத்தது. இந்த செட்டாப் பாக்ஸுகளைப் பராமரிக்கும் பொறுப்பை, அந்த நிறுவனத்தின் இணை நிறுவனங்கள் கவனித்துவந்தன. ஆனால், ஒப்பந்த ஷரத்துகள் அடிப்படையில் பராமரிப்புச் செலவை அரசு கொடுக்கவில்லை. அதேபோல, செட்டாப் பாக்ஸுகளுக்கான நிதியை, ஏழு ஆண்டுகளுக்குள் தவணையாகக் கொடுப்பதாகக் கூறியும், அந்தத் தவணைக்கான தொகையை விடுவிக்கவில்லை. டெண்டர் விதிகளின்படி, பாக்ஸுகளுக்கான பணத்தை தவணையின் அடிப்படையில் கொடுப்பதாக இருந்தால், வட்டித் தொகையுடன் கொடுக்க வேண்டும். இந்த அசல்-வட்டித் தொகை, பராமரிப்புக்கான செலவு, எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால், மந்த்ரா நிறுவனத்துக்குக் கொடுக்கவேண்டிய நிலுவை பாக்கி மட்டுமே 200 கோடி ரூபாய் அளவில் வருகிறது.

தொடரும் வீழ்ச்சி... நிலுவை பாக்கி. தடங்கலுக்கு வருந்துமா அரசு கேபிள் டி.வி?

இது தொடர்பாக, அரசு கேபிள் டி.வி நிறுவனத்துக்கு ‘மந்த்ரா’ நிறுவனம் அனுப்பிய கடிதத்தில், ‘இந்தப் பணத்தை உரிய தேதிக்குள் தருவதாக உறுதி அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு மாறாக, ‘மந்த்ரா நிறுவனம் சேவைகளை வழங்குவதில் காலதாமதம் செய்கிறது’ எனக் கூறி 56 கோடி ரூபாய் அபராதம் விதித்தது அரசு கேபிள் டி.வி நிறுவனம். டென்ஷனான மந்த்ரா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜன், ‘டெண்டர் விதிப்படி, செட்டாப் பாக்ஸுகளுக்கான பராமரிப்புச் செலவில் 5 சதவிகிதம்தான் அபராதமாக விதிக்க வேண்டும். ஆனால், 10 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. எனக்குச் சேரவேண்டிய தொகையை வழங்கவில்லையென்றால், சேவையை நிறுத்துவேன்’ என்று துறையின் மேலிட அதிகாரிகளுக்குக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில், ராஜன் வாங்கிய கடனைச் செலுத்தாததால், மும்பையிலுள்ள அவரது வீட்டில் வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டனர். அந்தக் கோபத்தில்தான், தனது கட்டுப்பாட்டிலுள்ள 21 லட்சம் அரசு செட்டாப் பாக்ஸுகளுக்கான சேவையை ராஜன் நிறுத்தியிருக்கிறார்” என்றார் விரிவாக.

நம்மிடம் பேசிய கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் சிலர், “தமிழ்நாட்டில் மொத்தம் 1.13 கோடி கேபிள் இணைப்புகள் இருக்கின்றன. இவற்றை 33 கேபிள் நிறுவனங்கள் பங்கிட்டுக் கொண்டிருக்கின்றன. அதிகபட்சமாக டி.சி.சி.எல் 28 லட்சமும், அதற்கடுத்த இடத்தில் 24 லட்சம் இணைப்புகளோடு அரசு கேபிள் டி.வி-யும் இருக்கின்றன. செட்டாப் பாக்ஸுகளை இலவசமாகத் தந்த அரசு, அவை பழுதானால் சரிசெய்வதில்லை. அதற்கான சர்வீஸ் மையங்களையும், ஆட்களையும் உருவாக்குவதும் இல்லை. இதனால்தான், சமீப ஆண்டுகளில் 15 லட்சம் வாடிக்கையாளர்களை அரசு கேபிள் டி.வி நிறுவனம் பறிகொடுத்திருக்கிறது. கடந்த காலங்களில், உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பு, இணைப்புக்கான கட்டணம், ஆபரேட்டர்கள் செலுத்தும் மாதச் சந்தாவில் FTA எனும் இலவச பேக்கேஜ் கட்டணம் எனப் பல வழிகளில் மாதம்தோறும் பல நூறு கோடி ரூபாய் வருமானம் அரசு கேபிள் டி.வி நிறுவனத்துக்கு வந்தது. தற்போது அந்த நிலை இல்லை. தொடக்கத்தில் 2,500 ஆபரேட்டர்களுடன் இயங்கிய அரசு கேபிள் டி.வி நிறுவனத்தில், தற்போது 1,000-க்கும் குறைவான ஆபரேட்டர்களே இருக்கிறார்கள். இதனால் வருமானத்திலும் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது” எனக் குழப்பங்களை அடுக்கினார்கள்.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

இந்தக் குழப்பங்கள் குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் விளக்கம் கேட்டோம். “செட்டாப் பாக்ஸ் கொள்முதல் என்பது கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்டது. அதன்படி, துறைக்கும் சப்ளையருக்கும் பணப் பிரச்னை இருக்கிறது. அதைக் காரணமாக வைத்து, சேவையை அந்த தனியார் நிறுவனம் நிறுத்தியிருக்கிறது. தற்போது நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. நிறுவனத்துக்கான பணம் விரைவில் வழங்கப்படவிருக்கிறது” என்றார்.

பிரச்னையை வளர்த்துக்கொண்டிருக்காமல், ஒரு முடிவை எட்டினால் சரி!