சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“அந்த வார்த்தைகளே எனக்குப் பிடிக்கலை!” - சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு

அப்பாவு
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பாவு

நான் சபாநாயகரானதும் முதல்வர் என்னை அழைச்சுப் பேசினார். ‘இது அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட பதவி. எனவே, முன்பு போல எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போகாதீர்கள்’ என்று சொன்னார்.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

அமைச்சர்கள் குடியிருக்கும் சென்னை கிரீன்வேஸ் சாலை. இடதுபுறத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வீடு. வலதுபுறத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீடு. நடுநாயகமாக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு வீடு. மரங்கள், செடிகொடிகள் என இயற்கை சூழ்ந்த வளாகமாகக் காட்சியளிக்கிறது.

“வாங்க தம்பி...” என்று நெல்லை வட்டாரத் தமிழ் கமகமக்க வரவேற்றார், சபாநாயகர் அப்பாவு. சபாநாயகர் அமர்ந்திருந்த இருக்கைக்கு மேலே முதல்வர் ஸ்டாலின், உதயநிதி எம்.எல்.ஏ ஆகியோர் இணைந்திருக்கும் புகைப்படம் சுவரில் இருந்தது. “என்ன அப்படிப் பார்க்குறீங்க... நான் சபாநாயகரா இருந்தாலும், தி.மு.க-வுல தானே இருக்கேன். என் தலைவர் அவர்தானே...” என்று சிரித்தார்.

“கட்சிக் கரைவேட்டி கட்டுகிறீர்களே?” என்று கேட்டவுடன், “நான் தி.மு.க-வுலதானே இருக்கேன்” என்று புன்னகைத்துவிட்டு, “எல்லாக் கட்சிகளோட எம்.எல்.ஏ-க்களையும் சமமா நடத்துறேன். கேள்விகள் கேக்குறதுக்கு எல்லாருக்கும் சம வாய்ப்பு கொடுக்குறேன். அதனாலதான், ஜனநாய ரீதியா அவை நடக்குதுன்னு ஊடகங்கள் உட்பட எல்லாரும் சொல்றாங்க. அப்படி நான் செயல்படுறதுக்குக் காரணம் முதல்வர்தான்” என்றார்.

அப்பாவு
அப்பாவு

“சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு வந்தீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?”

“கனடாவுக்குப் போறதுக்கு முன்னாடி, அமெரிக்காவுக்குப் போனோம். கலிபோர்னியாவுல தமிழ்ச்சங்கம் இருக்கு. அதுல முன்னாள் அமைச்சர் செ.மாதவனோட மகள் வெற்றிச்செல்வி ஆர்வமா செயல்படுறாங்க. மொத்தம் 68 தமிழ்ச் சங்கங்கள் செயல்படுது. ஒவ்வொரு சங்கமும் தமிழ்ப் பள்ளிகள் நடத்துது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரை மணி நேரம் தமிழ் சொல்லிக் கொடுக்குறாங்க. பார்க்குறப்போ, சந்தோஷமா இருந்துச்சு.

அப்புறம், கனடாவுக்குப் போனோம். காமன்வெல்த் மாநாடு மூணு நாள் நடந்துச்சு. நம்ம மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில கொடி அணிவகுப்பு நடந்துச்சு. அப்போ, ஓம் பிர்லா கையில நம்ம தேசியக்கொடியைக் கொடுத்தாங்க. அதுல, மேட் இன் சைனா என்று இருந்ததைப் பார்த்து ரொம்ப அதிர்ச்சியானோம்.”

அப்பாவுவின் சொந்த மாவட்டம் திருநெல்வேலி. அவரது சட்டமன்றத் தொகுதியான ராதாபுரத்தில் அமைந்துள்ள லெப்பைக்குடியிருப்புதான் சொந்த கிராமம். அங்கு அவருக்கு விவசாயம் இருக்கிறது.

“உங்கள் விவசாயப் பணி எப்படி இருக்கிறது?” என்று கேட்டவுடன், “ஊர்ல மட்டுமல்ல, இங்கேயும் நமக்கு விவசாயம் இருக்கு...” என்று சிரித்தபடி, வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றார் சபாநாயகர்.

நடைப்பயிற்சி செல்வதற்கு வசதியாக நடைபாதைகள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கு நடுவில் பயிர்க்குழிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குட்டிப் பண்ணைபோலக் காட்சியளிக்கிறது. வெண்டைக்காய், கொத்தவரங்காய், கத்தரி, தக்காளி, பப்பாளி, அவரை எனக் காய்கறிச் செடிகளும் கொடிகளும் செழித்திருக்கின்றன.

“இந்த வீட்டுல பழைய சபாநாயகர் தனபால் இருந்திருக்காரு. நான் வந்தப்புறம், இந்த இடத்தையே மாத்திட்டேன். வீட்டுக்கு முன்னாடி பலாச் செடிகள் வச்சிருக்கேன். அஞ்சு வருஷத்துல காய்க்க ஆரம்பிச்சிரும். நாம இங்கிருந்து போயிட்டாலும், யாராவது சாப்பிடுவாங்கில்ல” என்று முகம் மலர்ந்த அப்பாவு, தன் கிராமத்தில் செய்துவரும் விவசாயத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

“ஊர்ல நமக்கு அம்பது அறுபது ஏக்கர்ல விவசாயம் இருக்கு. 2,000 தென்னை மரங்கள் இருக்கு, 1,000 நெல்லி மரங்கள் இருக்கு. 1,500 மாமரங்கள் இருக்கு. 2,500 எலுமிச்சைச் செடிகள் இருக்கு. முழுக்க ஆர்கானிக்தான். அப்பப்ப தேங்காயை வெட்டி வித்துருவோம். நெல்லி, மா, எலுமிச்சையை வருசத்துக்கு ஒரு தடவை, அல்லது ரெண்டு தடவை மொத்தமா கொடுத்துருவோம். பணப் பயிர்ங்குறதால நல்ல வருமானம் இருக்கு. பத்து லட்சம் செலவு செஞ்சா இருபது லட்சம் கிடைக்கும். ஊர்ல இருக்குறப்போ தெனமும் தோப்புக்குள்ளதான் வாக்கிங் போவேன்” என்று சொன்னவர், தன் சிறு வயது அனுபவங்களை ஆர்வத்துடன் பகிர்ந்தார்.

“எங்க அப்பா காலையில நாலு மணிக்கே எழுந்திடுவாங்க. நான், எங்க அண்ணன், தங்கச்சிங்க எல்லாம் அஞ்சு மணிக்கு மாடுகளைப் பத்திக்கிட்டு, கெணத்துல தண்ணி இறைக்குறதுக்கான தளவாடங்களைத் தூக்கிக்கிட்டு தோட்டத்துக்குப் போயிருவோம். கமலத்துல மாடுகளைப் பூட்டி, கிணத்திலிருந்து தண்ணி இறைப்போம். வீட்டுல இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல தோட்டம் இருக்கும். எட்டு மணி ஆனவுடனே ஒரே ஓட்டத்துல வீட்டுக்குப் போயிடுவோம். சாப்பாடு இருந்தா சாப்பிடுவோம். இல்லைன்னா பையைத் தூக்கிக்கிட்டுக் கிளம்பிருவோம். எட்டுக் கிலோ மீட்டர் தூரத்துல வடக்கன்குளத்துல இருக்குற பள்ளிக்கூடத்துக்கு நடந்தே போவோம். அங்க மதிய உணவு போடுவாங்க. சாயங்காலம் வீட்டுக்கு வந்து, மறுபடியும் தோட்டத்துக்கு ஓடிருவோம். எல்லா வேலைகளையும் செய்வோம். ராத்திரி வீட்டுக்குப் போய்ப் படிப்போம். மின்சாரம் கிடையாது. சிம்னி விளக்குதான். 1970-71 காலகட்டத்துல ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரியில் பி.யூ.சி படிச்சேன். அப்புறம், டீச்சர் டிரெய்னிங் முடிச்சிட்டு வாத்தியார் வேலைக்குப் போயிட்டேன்.

வேலையில சேர்ந்தப்போ நூறு ரூபா சம்பளம். அப்போ, ஒரு குவிண்டால் நெல்லு நூறு ரூபா. ஒரு பவுன் தங்கம் நூறு ரூபா. இப்போ என்ன நெலம... ஒரு பவுன் தங்கம் 40,000 ரூபா. வாத்தியார்களோட சம்பளம் 50,000 ரூபாய்க்கு மேல. ஆனா, அன்னைக்கு நூறு ரூபாய்க்கு விற்ற ஒரு குவிண்டால் நெல்லு, இன்றைக்கு 2,500 ரூபாதான். விவசாயிகள் மட்டும் அப்படியே இருக்காங்க” என்று கவலையோடு சொன்னார்.

“தென் மாவட்டங்களில் விதைப்பதற்கு ஒரு லட்சம் பனை விதைகளை உங்கள் சொந்தச் செலவில் கொடுத்திருக்கிறீர்களே?''

“பனைமரங்கள் தமிழ்நாட்டோட அடையாளம். ஆனா, நிறைய பனைமரங்களை வெட்டிட்டாங்க. தி.மு.க ஆட்சிக்கு வந்தப்புறம், விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் கொண்டுவந்தாங்க. அதுல, பனைமரங்களை அதிக அளவுல வளர்க்கப்போறோம்னு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சொன்னார். அப்போ, வருஷக்கு ஒரு லட்சம் பனைவிதைகளைத் தர்றேன்னு சபையில் நான் சொன்னேன். போன வருஷமும் இந்த வருஷமும் கொடுத்திருக்கேன். நம்ம தோட்டத்து விதைகள். அரை அடி தோண்டி விதையை வச்சு, மண்ணைப் போட்டு மூடிட்டா போதும். ஆடு கடிச்சாலும் மாடு கடிச்சாலும் அது பாட்டுக்கு வளர்ந்துரும். பதினஞ்சு இருபது வருஷத்துல பலன் கொடுக்க ஆரம்பிச்சிரும். தமிழ்நாடு முழுக்க நம்ம விதைகள் போகுதேங்குற சந்தோஷம் எனக்கு” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

அப்பாவு
அப்பாவு

“பொதுவாக, சபாநாயகராக இருப்பவர்கள் அரிதாகவே பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள். ஆனால், உங்கள் தொகுதியில் நீங்கள் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடப்பதில்லையே?”

``நான் சபாநாயகரானதும் முதல்வர் என்னை அழைச்சுப் பேசினார். ‘இது அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட பதவி. எனவே, முன்பு போல எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போகாதீர்கள்’ என்று சொன்னார். அது சரிதான் என்று சொல்லிவிட்டு, ‘ஆனா, என் தொகுதியில முன்பைவிட அதிகமா நடமாடுவேன்'னு சொன்னேன். ‘தொகுதிக்கு என்ன வேணாலும் செய்யிங்க’ன்னு முதல்வர் சொன்னார். அதனால, ராதாபுரம் தொகுதியில எந்த நிகழ்ச்சியா இருந்தாலும் போயிருவேன். எல்லா வீடுகளுக்கும் தாமிரபரணித் தண்ணீர் போறதுக்கு ஏற்பாடு செஞ்சிட்டேன். பள்ளிக்கூடங்கள்ல அனைத்து வகுப்பறையையும் ஸ்மார்ட் வகுப்பறையா மாத்துறதுக்கான வேலைகளைச் செஞ்சுக்கிட்டு இருக்கேன்” என்று ஆர்வத்துடன் சொன்னார்.

“சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?’’

“அந்த வார்த்தைகளே எனக்குப் பிடிக்கலை. ஒரு ஜனநாயக நாட்டுல மக்களால் உருவாக்கப்பட்ட அவையில, ‘எனக்குத்தான் அதிகாரம் இருக்குது'ன்னு சொல்றதெல்லாம், ஆணவம். மக்களைச் சந்திச்சு வெற்றிபெற்ற முதல்வரே, ‘என் அரசு அல்ல... இது நமது அரசு’ என்றுதானே சொல்றார்.”