அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

லோக்கல் போஸ்ட்

கன்னியாகுமரி
பிரீமியம் ஸ்டோரி
News
கன்னியாகுமரி

- தேன்மொழி

லோக்கல் போஸ்ட்

நீலகிரியை அச்சுறுத்தும் அந்நிய மரங்கள்!

தமிழ்நாடு முழுக்க மழை பெய்தாலும், நீலகிரியில்தான் அதிக பாதிப்பு. ‘மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து குடியிருப்பு சேதம், சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு’ எனத் தொடர்ச்சியாக ஃபிளாஷ் நியூஸிலேயே மின்னுகிறது நீலகிரி. ‘‘ஏன் இத்தனை மரங்கள் வீழ்கின்றன என்று கொஞ்சம் உற்று கவனித்தால், விழும் மரங்கள் அனைத்துமே யூகலிப்டஸ், பைன், வேட்டில், குப்ரசஸ், சைப்ரஸ் போன்ற இந்த மண்ணுக்குச் சம்பந்தமே இல்லாத வெளிநாட்டு மரங்கள்தான். நமது காலநிலையை தாக்குப்பிடிக்க முடியாமல் விழும் இந்த அந்நிய மரங்களால் பெருத்த உயிர்ச் சேதமும்‌ பொருள் சேதமும் உருவாகின்றன. அதேசமயம், விக்கி, மலை நாவல், வாகை போன்ற நமது பூர்வீக சோலை மரங்கள் கடுமையான காற்று, மழையையும் எதிர்த்து நின்று தாக்குப்பிடிக்கின்றன’’ என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இனியாவது மண்ணின் மரங்களை நடுங்கள் ஐயா!

“காசு கொடு... காப்பாத்த வாரேன்!”

வெடிப்பு விழுந்த விருதுநகர் பூமியில் வெளுத்துக்கட்டும் மழையால், ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. பாம்புகளைப் லாகவமாகப் பிடித்துச் செல்லும் தீயணைப்பு வீரர்களில் சிலர், பாம்பின் விஷத்தன்மையைப் பொறுத்து 2,000, 3,000 ரூபாய் என குடியிருப்புவாசிகளிடம் வசூலித்துவிடுவதாகப் புகார் எழுந்துள்ளது. “ஏற்கெனவே பட்டாசு ஆலை ஓனர்களிடம் கைநீட்டிவருபவர்கள், இப்போது பாவப்பட்ட மக்களிடமும் கையேந்த ஆரம்பித்துவிட்டார்களே?’ என்று முணுமுணுக்கின்றனர் ஏரியாவாசிகள்.

லோக்கல் போஸ்ட்

தகர்ந்துபோன கடல் பாதுகாப்பு!

முக்கடலும் சூழ்ந்துகிடக்கும் கன்னியாகுமரியில், கடல் மார்க்கமாக யாரும் ஊடுருவாதபடி கண்காணிக்க, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு குளச்சல் கடற்கரையில் ஒரு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகள் வரை நன்றாகச் செயல்பட்ட இந்தக் கண்காணிப்பு கோபுரம் இப்போது தகர்ந்துபோய், குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்டது. ‘கோபுரத்தைப் புதுப்பிக்கப்போகிறோம்’ என்ற பெயரில், அவ்வப்போது வந்து அளவெடுத்துச் செல்லும் அதிகாரிகள் காணாமல்போய்விடுகிறார்கள். கண்காணிப்பு கோபுரமோ காட்சிப் பொருளாகவே நிற்கிறது.

காத்து வாங்கும் உழவர் சந்தை - செயல்படாத மீன் மார்க்கெட் - புதிய மார்க்கெட் அமையவுள்ள இடம்
காத்து வாங்கும் உழவர் சந்தை - செயல்படாத மீன் மார்க்கெட் - புதிய மார்க்கெட் அமையவுள்ள இடம்

மார்க்கெட்போன மார்க்கெட்டுகள்!

பட்டுக்கோட்டையில், ஏற்கெனவே பல கோடி ரூபாய் செலவில் தேரடித் தெருவில் அமைக்கப்பட்ட காய்கறி மார்க்கெட், கோட்டை குளம் பகுதியில் கட்டப்பட்ட மீன் மார்கெட் போன்றவை பல ஆண்டுகளாகச் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. பேருந்து நிலையத்தை அடுத்துள்ள உழவர் சந்தையில் 50 கடைகள் இருந்தாலும், அதிலும் சில கடைகள் மட்டுமே இயங்குகின்றன. இவற்றையெல்லாம் செயல்பாட்டுக்குக் கொண்டுவர எந்தவொரு முயற்சியையும் எடுக்காத பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம், தற்போது காசாங்குளம் கரையில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்னொரு காய்கறி மார்க்கெட் கட்டும் பணியில் இறங்கியிருக்கிறது. “மார்க்கெட் மக்களுக்காகவா... நீங்கள் காசு பார்ப்பதற்காகவா?” என்று கடுப்பாகப் பேசுகிறார்கள் மக்கள். புதிய மார்க்கெட் கட்டும் இடம் கலெக்டரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ‘சத்திரம் நிலம்’ என்பதால், கலெக்டருக்கும் புகார் போயிருக்கிறது.

ஒரு மூட்டை வெங்காயம் ஒரு லட்சம்!

பிரியாணி ஊரான ஆம்பூரில், ஒரு மூட்டை வெங்காயம் ஒரு லட்சம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறதாம். காரணம், அந்த மூட்டைக்குள் தங்கத்தைவிட அதிக லாபம் தரும் பொருள் வருகிறதாம். அப்படியென்ன பொருள் என்று கேட்கிறீர்களா... தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதை பாக்குகள்தான். பெங்களூரு போன்ற அண்டை மாநில நகரங்களிலிருந்து வெங்காய மூட்டைகளில் போதைப்பொருள்களை கடத்திவந்து விற்பனை செய்கிறார்கள் சில கிரிமினல் வியாபாரிகள். பிரியாணி ஊரில், இப்போது இந்த பிசினஸ்தான் கொடிகட்டி பறக்கிறதாம்!