சமீப காலமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் `சாதிப் பாகுபாடு' தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
தென் மாவட்டங்களை உலுக்கிய தீண்டாமை சம்பவங்கள்:
கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவரிடம் சாதி ரீதியாகப் பேசியதும், அதற்கு அந்த மாணவன் `எல்லோரும் சமம் தானே டீச்சர்' என பதிலளித்த ஆடியோவும் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. அதேபோல, செப்டம்பரில் தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஊர் கட்டுப்பாடு எனச் சொல்லி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கடைக்காரர் மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தென்காசி மாவட்டம், அரியநாயகிபுரம் கிராமத்தில் பள்ளி ஆசிரியர்கள் சிலர் சாதி பெயரைச் சொல்லி திட்டியதால் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அந்த வகையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில், பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மாவட்ட ஆட்சியரின் ஆய்வில் அந்தக் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு கோயிலில் அனுமதி மறுப்பு, டீக்கடையில் இரட்டைக் குவளை முறை போன்ற கொடிய வழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எல்லா சம்பவங்களிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டாலும், குற்றம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ ரிப்போர்ட்:
தீண்டாமை, சாதிக்கொடுமைகள் தொடர்பாக மதுரையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்(RTI) மூலம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு, காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அளித்திருக்கும் பதில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், ``2021-ம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டின் 445 கிராமங்களில் இன்றும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் ஒன்றான மதுரை முதல் இடத்தில் இருக்கிறது!" என பதில் அளிக்கப்பட்டிருந்தது. மேலும், மதுரை மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களின் பெயர்களும் சாதித் தீண்டாமை நிலவும் மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

``தென் மாவட்டங்களில்தான் அதிகம் நடக்கிறதா?"
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில்தான் இதுபோன்ற சாதித் தீண்டாமை அதிகம் நிகழ்கிறதா? என்ன காரணம் என்ற கேள்விகளுடன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜிடம் பேசினோம். ``இம்மானுவேல் சேகரனார் காலத்திலிருந்தே தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளைக் காட்டிலும் தென் மாவட்டங்களில்தான் சாதித் தீண்டாமைக்கு எதிராக பட்டியலின மக்கள் வலுவான எதிர்ப்புக் குரல் கொடுத்துவருகின்றனர். அவர்கள் எதிர்த்துப் போராடுவதனால்தான் இதுபோன்றக் கொடுமைகள் வெளியில் தெரிகின்றன. வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் தென்மாவட்டங்களில் இந்தக் கொடுமை அதிகம் நிகழ்வதுபோலத் தோற்றம் உருவாகிறது. தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலுமே சாதித் தீண்டாமை நடக்கிறது. வடக்கு, தெற்கு மாவட்டங்களை விட மேற்கு மாவட்டங்களில்தான் இந்த எண்ணிக்கை அதிகம். ஆனால், அந்தப் பகுதியில் வாழும் பட்டியலின மக்கள் பெரும்பாலும் `சாதி இந்துக்களைச்' சார்ந்து வாழ்வதால் வேறுவழியின்றி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். அதனால் வெளியில் தெரிவதில்லை!" என்றார்.
``திராவிட மாடல் ஆட்சியல்ல! திராவிட `டல்' ஆட்சி"
பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் தலீத் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், ``புதுக்கோட்டையில் ஐ.ஏ.எஸ், காவல் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டி பெருமிதம் கொள்கின்றனர். அதில் பெருமிதப்பட ஒன்றுமில்லை; அவர்கள் தங்களின் கடமையைத்தான் செய்தார்கள். உண்மையில், குடிநீர் தொட்டில் மலம் கலந்த கொடிய சம்பவத்தை மறைத்துவிட்டு, கோயில் நுழைவு அனுமதி, இரட்டைக் குவளை முறை ஒழிப்பு என அரசு அதிகாரிகள் அதிரடி காட்டியதாகக் கூறி மடைமாற்றியிருக்கிறார்கள். `வன்கொடுமை தடுப்புச் சட்டம்' என்பது சாதிய வன்கொடுமை நடந்த பிறகு தண்டிப்பதற்காக இருக்கக்கூடாது. நடக்கும் முன்னரே தடுக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். ஆனால், இங்கு பெயரளவுக்கு மட்டுமே வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுநாள்வரை அரசின் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி, துறை அமைச்சர் என யாருமே இங்கு வரவில்லை.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட `ஆதிதிராவிட நலக்குழு' என்ன செய்துகொண்டிருக்கிறது? இந்தியாவிலேயே மலக்குழி மரணத்தில் தமிழ்நாடுதான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 350 சாதியப் படுகொலைகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாதித்தீண்டாமை நிகழ்வதாக அரசாங்கமே ஒப்புக்கொண்டு ஆர்.டி.ஐ தகவல் தெரிவிக்கிறது. ஆனால், அனைத்து கிராமங்களிலுமே சாதிக் கொடுமைகள் இன்னமும் நிகழத்தான் செய்கின்றன. மகன் உதயநிதியை அமைச்சராவதற்கு காட்டிய ஆர்வத்தை சாதித் தீண்டாமைகளை ஒழிப்பதற்கு ஏன் காட்டவில்லை முதல்வர். இப்படி, அரசின் தவறுகளை தட்டிக்கேட்பவர்களை எல்லாம் கமிட்டிகள், ஆணையங்களுக்குள் போட்டு பதவிகொடுத்து பேசவிடாமல் செய்துவிடுகிறார். வார்த்தைக்கு வார்த்தை திராவிட மாடல் ஆட்சி என்கிறார். இது திராவிட `டல்' ஆட்சியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது!" எனக் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
``தடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?"
``ஏற்கெனவே உள்ள சட்டங்களை முறையாகப் பயன்படுத்தினாலே போதும், பல தீண்டாமைக் குற்றங்களை தடுக்கலாம்!' என்கிறார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சாமுவேல்ராஜ். தொடர்ந்து அவர் பேசியபோது, ``பொது என சொல்லப்படுகிற கோயில்கள், பள்ளிக்கூடங்கள், ரேஷன் கடைகள் எல்லா இடங்களிலுமே சாதிப்பாகுபாடுகள் நிகழ்கிறது. குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறையைச் சார்ந்த 100 கோவில்களில் சாதித்தீண்டாமை நடக்கிறது. இதை அமைச்சர் சேகர்பாபு முறையாக ஆய்வுசெய்து தடுத்துநிறுத்த வேண்டும். பள்ளிக்கூடங்களில் சுற்றறிக்கை அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அரசாங்கமே பிரத்யேக குழு அமைத்து ஒவ்வொரு கிராமங்களிலும் ஆய்வு நடத்தி களநிலவரங்களைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, `உங்கள் பகுதியில் சாதித் தீண்டாமை நிலவினால் உடனே தகவல் தெரிவிக்கவும்' எனக்கூறி ஒரு அரசுத் தரப்பில் தொடர்பு எண்ணையும் மாவட்ட மக்களுக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார். அவர் வெளியிட்ட ஒரே நாளில் 25 புதிய வழக்குகள் வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதேபோல தமிழ்நாடு அரசும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இதுபோல `Toll Free' எண்ணை அறிமுகப்படுத்த வேண்டும். கிடைக்கப்பெறும் புகார்களுக்கு கடுமையான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்!" எனக் கேட்டுக்கொண்டார்.
Also Read

அதேபோல செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், ``சமூக நீதிக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்!" என்கிறார். மேலும், அவர் பேசும்போது, ``கிராமப் பஞ்சாயத்துகளில் `சமூக நீதி' குறித்து விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த வேண்டும். கண்துடைப்புக்கான பேச்சுவார்த்தையாக அல்லாமல், அனைத்து சமூகங்களையும் உள்ளக்கிய ஆக்கப்பூர்வமான சமூக கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். சாதியப் பாகுபாடு அல்லாத பஞ்சாயத்துகள் உருவாவதை உறுதிசெய்ய வேண்டும், அதற்கேற்றார்போல நிர்வாகக் கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும். பள்ளிகளில் சமூக நீதி கலைநிகழ்ச்சிகளை மணவர்கள் மத்தியில் பிரபலப் படுத்தவேண்டும். கிடைக்கின்ற எல்லா வழிகளிலும் தீண்டாமையை ஒழிக்கக்கூடிய செயல்திட்டங்களை அமல்படுத்தவேண்டும்!" எனத் தெரிவித்தார்.