கரிசல் மக்களின் வாழ்க்கையை அந்த மண் வாசனையோடு, அவர்களின் மொழியில் பதிவு செய்தவர் கி.ராஜநாராயணன். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் 1923-ல் பிறந்த கி.ரா என்கிற ஸ்ரீகிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம், தனது 99-வது வயதில் வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 17.5.20121-ம் தேதி காலமானார். ’கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’ என்றழைக்கப்படும் இவர், ’கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக 1991-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர். இலக்கிய சிந்தனை, தமிழக அரசின் விருது, கனடா இலக்கியத் தோட்டம் அமைப்பின் தமிழ் இலக்கியச் சாதனை உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவரது படைப்புகளை அலங்கரித்திருக்கின்றன.

இந்நிலையில் கி.ரா அவர்களின் நினைவாக தமிழக அரசு, கி.ரா பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலினால் 11.10.2022ம் தேதி அன்று திறந்து வைக்கப்பட்டது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், 220 சதுர மீட்டர் பரப்பளவில் 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கிராவின் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டு வந்தது. இந்நினைவரங்கம் நூலகம், நிர்வாக அலுவலகம், மின்னணு நூலகம், கண்காட்சி அறை எனப் பல வசதிகளுடன் அமைக்கப்பட்டது.

தற்போது, அதன் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2022) காணொலிக் காட்சி வாயிலாகத் கிராவின் நினைவரங்கத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் சோ.தர்மன், பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, பவா.செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டு கி.ரா.வுடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.