
வலியையும் துயரத்தையும் சுமந்துகொண்டு மக்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள்.
அசாம் மாநிலத்தின் பராக் பள்ளத்தாக்கு, மரங்களும் மலையும் அடர்ந்த, ஆதிப்பழங்குடிகள் வசிக்கும் பூமி. இந்த நிலப்பரப்பின் துயரம், புற்றுநோய். வாழ்க்கைமுறைச் சிக்கல்கள் காரணமாக நிறைய பேர் புற்றுநோய்க்கு ஆளாகித் தவிக்கிறார்கள். சிகிச்சையென்றால், 360 கிலோ மீட்டர் பயணித்து கௌஹாத்திக்குத்தான் செல்லவேண்டும். அதனால் மக்களே சேர்ந்து அங்கு ஒரு மருத்துவமனையை உருவாக்கினார்கள், அதன்பெயர் ‘கேச்சர் புற்றுநோய் மருத்துவமனை’ (Cachar Cancer Hospital society).
வலியையும் துயரத்தையும் சுமந்துகொண்டு மக்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். உள்ளே நுழைகிறார் மருத்துவர் ரவி கண்ணன். எல்லோரின் முகத்திலும் நம்பிக்கை மலர்கிறது. புன்னகையோடு அவர்களை நெருங்கி, கரம்பற்றி விசாரிக்கிறார்.

மருத்துவர் ரவி கண்ணன், மன்னார்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பா விமானப்படை அதிகாரியாக இருந்தவர். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் படித்த இவர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றினார். மருத்துவவசதியே கிடைக்காத பகுதியில் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பராக் பள்ளத்தாக்கில் பரிதவித்து நின்ற மக்களுக்கு சேவையாற்றச் சென்றார். அதற்காக அவருக்கு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவித்திருக்கிறது மத்திய அரசு.
“அடையாறு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தபிறகு நிறைய கார்ப்பரேட் மருத்துவமனைகளின் அழைப்பு வந்துச்சு. கேச்சர் மருத்துமனையிலிருந்தும் கூப்பிட்டாங்க. என் மனைவிக்கு அங்கே போக விருப்பமில்லை. ‘சுற்றுலா மாதிரி போவோம்... புடிச்சிருந்தா இருப்போம். இல்லேன்னா ரெண்டு நாளில் திரும்பிடுவோம்’ன்னு சொல்லி கூட்டிக்கிட்டுப் போனேன். அந்த மக்களோட தவிப்பு, அந்தப் பள்ளத்தாக்கோட சூழலெல்லாம் என் மனைவியை பாதிச்சுச்சு. ‘கண்டிப்பா உங்க சேவை இந்த மக்களுக்குத்தான் தேவை’ன்னு சொன்னாங்க.

ஆனா எங்க ரெண்டு பேரோட குடும்பமும் எங்க முடிவைக் கடுமையா எதிர்த்தாங்க. குறிப்பா, எங்க அம்மா. எல்லாரையும் சமாதானப்படுத்திட்டு இங்கே வந்தோம்.
ஆரம்பத்துல ரொம்ப சிரமமா இருந்துச்சு. மக்களுக்கு விழிப்புணர்வே இல்லை. புகையிலைப் பொருள்களைப் பரவலாப் பயன்படுத்தினாங்க. புற்றுநோய் வந்திருக்கிறது தெரியாமலே பலபேர் வாழ்ந்தாங்க. கடைசிக்கட்டத்துல நோயைக் கண்டுபிடிச்சதால உயிரைக் காப்பாற்ற முடியலே. முதல்ல மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கினோம். புகையிலைப் பழக்கத்திலிருந்து வெளியே கொண்டு வந்தோம். ஆரம்பக் கட்டத்துலயே புற்றுநோயை அடையாளம் கண்டதால பல உயிர்களைக் காப்பாற்ற முடிஞ்சது.

25 படுக்கைகளோடு இருந்த மருத்துவமனை இப்போ 100 படுக்கைகள் கொண்டதா மாறியிருக்கு. 350 பேர் இங்கே வேலை செய்றாங்க. பெரும்பாலும் மரணங்கள் குறைஞ்சிருக்கு.
நாங்க இங்கே வரும்போது என் மகள் நான்காம் வகுப்பு படிச்சுக்கிட்டிருந்தா. நல்ல கல்வி கிடைக்காதேங்கிற கவலை இருந்துச்சு. இப்போ அவ இறுதியாண்டு மருத்துவம் படிக்கிறா. இந்த மக்கள்கிட்ட இருந்து அவ நிறைய படிச்சிருக்கா. தொடக்கத்துல இங்கே வர எதிர்ப்பு தெரிவிச்ச என் அம்மா இப்போ எங்ககூடவே இருக்காங்க. இந்த மக்கள் எங்களை தெய்வமா நினைக்கிறாங்க. அவங்களுக்கு நாங்க பிரதியுபகாரமா எங்களுக்குத் தெரிஞ்ச சிகிச்சையைக் கொடுக்கிறோம்” என்கிறார் ரவி கண்ணன்.
நோயாளிக்கு நம்பிக்கைதான் பாதி மருந்து. புற்றுநோயால் தவிக்கும் மக்களுக்கு நம்பிக்கையோடு சிறந்த மருத்துவத்தையும் வழங்குகிற மருத்துவர் ரவி கண்ணன், எல்லோருக்கும் முன்மாதிரி!