அரசியல்
அலசல்
Published:Updated:

லோக்கல் போஸ்ட்

சீரியஸ் போராட்டம் ‘சிரிப்பான’ கதை!
பிரீமியம் ஸ்டோரி
News
சீரியஸ் போராட்டம் ‘சிரிப்பான’ கதை!

-தேன்மொழி

சீரியஸ் போராட்டம் ‘சிரிப்பான’ கதை!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேரூராட்சிப் பகுதியில், குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார் முன்னாள் கவுன்சிலரான எட்வர்ட் ராஜதுரை. அவருடன் ஆதரவாளர்கள் என்ற பெயரில் ஐந்து பேர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த போலீஸார், “அனுமதி இல்லாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால், உங்கள் ஆறு பேரையும் கைதுசெய்கிறோம்” எனச் சொல்ல, “சார்... அண்ணன் கூப்பிட்டாரேன்னு நாங்க சும்மாதான் கூட வந்தோம்” என்று உடன்வந்த ஐந்து பேரும் ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். கூட வந்தவர்கள் கைவிட்டபோதும் ‘அஞ்சாத சிங்கமாக’ தனியே அமர்ந்திருந்த கவுன்சிலரைக் கைதுசெய்த போலீஸார், தப்பி ஓடியவர்களையும் விரட்டிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அலேக்காகத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அதில் ஒரு ஆள், “சார் உண்ணாவிரதமெல்லாம் இருக்கலை. காலையிலகூட சாப்பிட்டுட்டுதான் வந்தோம்” என்று ஸ்டேஷனில்வைத்துக் கெஞ்சியதுதான் உச்சபட்ச காமெடி.

எட்வர்ட் ராஜதுரை
எட்வர்ட் ராஜதுரை

‘சீரியஸா ஆரம்பிச்ச போராட்டத்தை இப்பிடி சிரிப்புப் போராட்டமா மாத்திட்டீங்களே பாவிகளா...’ என்று நொந்துகொண்டாராம் அண்ணன் கவுன்சிலர்.

‘‘புரிஞ்சுதா ஆபீஸர்ஸ்...’’

மயிலாடுதுறை மாவட்டம், மடவாமேடு கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மண்ணரிப்பு பிரச்னையால் தீராத வேதனை அனுபவித்துவருகிறார்கள். இந்த நிலையில், கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர், வி.ஏ.ஓ பவளச்சந்திரன் ஆகியோர் கடற்கரைப் பகுதியில் ஆய்வுக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது மடவாமேடு கிராம கடற்கரையிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலுள்ள மீனவர்கள் குடியிருப்புப் பகுதியை நோக்கி அவர்கள் சென்றபோது, திடீரென ஆக்ரோஷத்துடன் எழும்பிய கடலலை அதிகாரிகளை வாரிச்சுருட்டிவிட்டது. இதனால் நிலைகுலைந்துபோன வி.ஏ.ஓ பவளச்சந்திரனுக்கு பாறையில் கால் மோதி பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அலையில் இழுத்துச் செல்லப்பட்ட ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபிரகாஷை அந்தப் பகுதி மீனவர்களே காப்பாற்றி, கரை சேர்த்திருக்கிறார்கள். ‘‘தெனம் தெனம் மண்ணரிப்பால நாம படுற அவஸ்தை இப்பவாவது ஆபீஸர்களுக்குப் புரிஞ்சுருக்கும்’’ என்று வேதனை தெரிவிக்கிறார்கள் மடவாமேடு மீனவர்கள்.

லோக்கல் போஸ்ட்

‘நான் என்ன தீவிரவாதியா..?’

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முகமது யாகூப். இவர், கோத்தகிரி பேருந்து நிலையம் அருகில் உரிய அனுமதி பெற்று சிறிய தள்ளுவண்டிக் கடை நடத்திவருகிறார். இவருக்கும், பேரூராட்சி அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி உரசல் ஏற்பட்டுவந்திருக்கிறது. இதையடுத்து அதிகாரிகள் முகமது யாகூப்பின் கடையை அங்கிருந்து அகற்றச்சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்கள். இதனால், கோத்தகிரி மைதானம் பகுதியில் அனுமதிபெற்று கடையை இடம் மாற்றியிருக்கிறார். அதையும் பேரூராட்சி அதிகாரிகள் அகற்றச் சொல்லி குடைச்சல் கொடுக்கவே மனமுடைந்துபோன முகமது யாகூப், மாவட்ட ஆட்சியருக்குத் தொடர்ந்து மனு அளிக்கும் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார். ஐம்பதாவது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளிக்க வந்தபோது, ‘கோத்தகிரி பேரூராட்சி அதிகாரி ஒருவர், என்னைத் தீவிரவாதி என்றும், உடல் குறைபாட்டைச் சொல்லியும் திட்டுகிறார்... நான் என்ன தீவிரவாதியா?’ என பேப்பரில் எழுதி தலையில் சுற்றிக்கொண்டு வந்திருக்கிறார். இதையறிந்த பேரூராட்சி அதிகாரிகள் பீதியில் உறைந்துபோயிருக்கிறார்கள்.

திரும்பத் திரும்ப டார்ச்சர் கொடுக்குறீங்க..!

திருச்சி-திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளை இணைக்கும் காவிரிப் பாலத்தில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணிகள் நடந்துவருகின்றன. இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவந்த நிலையில், கடந்த நவம்பர் முதல் ஒட்டுமொத்தமாக வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதனால் சுமார் அரை கி.மீட்டர் நீளமுள்ள பாலத்தைக் கடக்கவேண்டிய வாகன ஓட்டிகள் 3 கி.மீட்டர் தூரம் ஊரைச் சுற்றி வந்துகொண்டிருக் கிறார்கள். இதனால், திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கெனவே கடந்த 2015-ம் ஆண்டு முதல் காவிரிப் பாலத்தைப் பராமரிக்கிறேன் என்று 2 கோடி ரூபாய் வரை மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டது. அப்போதே முறையாகப் பணிகள் நடக்காததால், தற்போது மீண்டும் ரூ.6.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வேலை நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இதனால், “பாலத்தைப் பராமரிக்குறேன்கிற பேருல பணத்தைப் பாக்கெட்ல போட்டுக்கவேண்டியது. அப்புறம் ஊரை நல்லாச் சுத்துன்னு எங்க உசுரை வாங்க வேண்டியது...’’ என்று கடுகடுக்கிறார்கள் உள்ளூர் வாகன ஓட்டிகள்.

லோக்கல் போஸ்ட்

‘சித்தரை’ மீட்டதுபோல், பணத்தையும் மீட்பார்களா?

கரூரில், கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மலைக்கோயிலூர் அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட சுப்ரமணி என்பவர் சுற்றித்திரிந்தார். சாலை ஓரமாகக் கொட்டகை அமைத்து, அவரைப் படுக்கவைத்த சிலர், அவர் உடம்பு முழுக்க திருநீற்றைப் பூசி அவருக்கு சித்தர் வேடம் கட்டினர். பக்தர்கள் கூட்டம் அலைமோத, உண்டியல் வைத்து, பணமும் வசூலித்தனர். அது சர்ச்சையானதும் உண்டியல் அகற்றப்பட்டது. இப்போது மாவட்ட நிர்வாகம் அவரை மீட்டு, சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால், அவரைவைத்து சிலர், கூகுள் பே, போன் பே போன்ற ஆப்கள் மூலம் ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் செய்தார்களாம். ‘அந்தப் பணத்தை எப்போ மீட்பீங்க ஆபீஸர்ஸ்?’ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.