அரசியல்
அலசல்
Published:Updated:

லோக்கல் போஸ்ட்

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

-தேன்மொழி

லோக்கல் போஸ்ட்

பொறுப்பு அமைச்சருக்குப் பாராட்டு... ரத்தக்கொதிப்பில் மா.செ ஆதரவாளர்கள்!

  தென்காசி தனி மாவட்டம் அமைந்த பிறகு, முதன்முறையாக அங்கு விசிட் அடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவர் பங்கேற்ற அரசு விழாவுக்கான இடத்தைத் தேர்வுசெய்தது முதல், மேடை அமைப்பது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது தென்காசி மாவட்ட தி.மு.க செயலாளர் சிவபத்மநாதன் என்கிறார்கள். ஆனால், விழா மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தென்காசி எம்.பி தனுஷ்குமார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா ஆகியோரை விழா சிறப்பாக நடைபெற இரவு பகல் பாராமல் வேலைசெய்ததாகப் பாராட்டிப் பேசியிருக்கிறார். அதிலும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ‘இரட்டைக் குதிரையில் பயணிப்பதுபோலச் சிறப்பாகச் செயல்படுகிறார்’ என்று புகழ்மாலை சூட்டியிருக்கிறார்.

முதல்வர் உரையில் மா.செ சிவபத்மநாதனுக்குப் பாராட்டே இல்லையாம். அதனால், அவரின் ஆதரவாளர்கள் செம அப்செட்டாம். “தலைவர் உங்கள் பெயரைச் சொல்ல மறந்தாலும், உங்க உழைப்பு உலகத்துக்கே தெரியும் அண்ணாச்சி கவலைப்படாதீங்க...” என்று சோஷியல் மீடியாவில் தற்போது சுகராகம் பாடிக்கொண்டிருக்கிறார்களாம் மா.செ-வின் ஆதரவாளர்கள்!

லோக்கல் போஸ்ட்

போராட்டத்தில் கவனம் ஈர்த்த கொசுவத்தி!

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான‌ சிறப்புப் பயிற்றுநர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.இ.ஓ அலுவலகம் அமைந்திருக்கும் கட்டட வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். சுகாதாரத்துறை, குடும்பநலத்துறை, பூச்சியியல், கல்வித்துறை, கூட்டுறவு, புள்ளியியல் என ஒருங்கிணைந்த அலுவலகங்கள் அமைந்திருக்கும் இந்த வளாகத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தைக் காட்டிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அவர்கள் கொளுத்திவைத்திருந்த கொசுவத்திச் சுருள்கள்தான். “எங்களின் அவலநிலையை அரசுக்குப் புரியவைக்க நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால், இங்கிருக்கும் கொசுக்கள் எத்தனை நாள் பட்டினியில் கிடந்ததோ தெரியவில்லை. எங்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. அவற்றிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளத்தான் இந்த ஏற்பாடு’’ என்றனர் போராட்டக்காரர்கள்!

போக்குவரத்து நெரிசல் உண்டாக்கும் குடிமகன்கள்!

திருச்சி மாநகரிலேயே அதிக போக்குவரத்து நெரிசல்கொண்டது திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து வயலூர் செல்லும் சாலை. பீக் ஹவர்ஸில் இந்தச் சாலையில் வாகன ஓட்டிகள் பாடு பெரும் திண்டாட்டம்தான். இந்த நிலையில், இதே சாலையில் சீனிவாசா நகர் 5-வது கிராஸ் அருகேயும், உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலத்தை அடுத்தும் ஒரு கி.மீட்டருக்குக் குறைவான இடைவெளியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளன. மாலை நேரங்களில் இங்கு வரும் குடிமகன்கள், தங்கள் டூ வீலர் வாகனங்களைச் சாலையின் குறுக்கே நிறுத்துவதும், போதையில் சாலையின் குறுக்கே சென்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுமான செயல்களில் ஈடுபடுகின்றனர். ஏற்கெனவே, இதேபோல உறையூர் கடைவீதிப் பகுதியில் சாலையோரம் இயங்கிவந்த மூன்று டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுவந்தது. பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி, அந்த மூன்று டாஸ்மாக் கடைகளையும் இழுத்துப் பூட்டினார்கள். அதே வழிமுறையில், வயலூர் சாலையிலுள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகக் களமிறங்கலாமா என்று ஏரியாவாசிகளைக் கொண்ட டீம் யோசித்துவருகிறதாம்!

கால்கடுக்கக் காத்திருக்கும் பயணிகள்... கண்டுகொள்ளாத அமைச்சர்!

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டிக்கு அடுத்தபடியாகப் பெரிய நகரம் குன்னூர்தான். இந்த நகராட்சியின் மொத்த மக்கள்தொகை அறுதாயிரத்துக்கும் மேல். அதுபோக, சுற்றுலாப்பயணிகள், வெளியூர் மக்கள், மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் குன்னூர் பேருந்து நிலையத்தை தினசரி பயன்படுத்திவருகிறார்கள். 1950-களில் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தில், தற்போது வரை பெரிய அளவில் எந்த மேம்படுத்தும் பணிகளும் நடைபெறவில்லை. பயணிகள் அமருவதற்கான இருக்கைகளே இல்லாததால், இங்கு வரும் பயணிகள் நீண்டநேரம் கால்கடுக்க நின்றபடியே பேருந்துகளுக்குக் காத்திருக்கிறார்கள். இருக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர, தொடர்ந்து பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தபடி இருக்கிறார்கள். `வனத்துறை அமைச்சராக இருக்கும் ராமச்சந்திரனின் சொந்தத் தொகுதியிலே இதுதான் நிலைமை’ என்று உள்ளூர்வாசிகள் கொந்தளிக்கிறார்கள்!

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

சாலைகள் இல்லை... கழிப்பறை இல்லை!

தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலாத்தலம் ‘மணப்பாடு.’ இயற்கையாக அமைந்த மணல்குன்று, அதன் உச்சியில் போர்ச்சுக்கீசிய பாணியில் கட்டப்பட்ட பழைமையான கிறிஸ்தவ தேவாலயம், ஆங்கிலேயர்கள் கட்டிய கலங்கரை விளக்கம்... எனப் புராதன அழகோடு, சிறந்த ஷூட்டிங் ஸ்பாட்டாகவும் மணப்பாடு விளங்குகிறது. அதுமட்டுமல்ல... அலைச்சறுக்கு, படகுப்போட்டி, பாய்மரப் படகுப்போட்டி,  துடுப்பு போடும் போட்டி, பாராசூட் பறத்தல்... என 10-க்கும் மேற்பட்ட கடல் சாகசப் போட்டிகளுக்கான இடமாகவும் இது இருக்கிறது. ஆனால், இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் சரியான சாலை வசதியோ, கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளோ இல்லாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். பல ஆண்டுகளாக இது தொடர்பாகக் கோரிக்கை விடுத்தும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள்!