ஒரு பொருளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையைக் குறிப்பிட புவிசார் குறியீடு உதவுகிறது. geographical indication என்று சொல்லக்கூடிய புவிசார் குறியீடு இந்தியா முழுவதும் பல்வேறு பொருள்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல பொருள்கள் பாரம்பர்யமும் தனித்தன்மையும் கொண்டு புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

தஞ்சாவூர் ஓவியம், மதுரைச் சுங்கடி, நாகர்கோவில் நகை என்று பல பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு 2019-ல் மட்டும் 7 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் இதற்கும் குறைவான பொருள்களுக்குத்தான் புவிசார் குறியீடு பெற முடிந்தது. தற்போது 7 பொருள்கள் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நோடல் அலுவலரும் புவிசார் குறியீடு பெற்றுத்தர முயற்சி எடுத்துவரும் அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞருமான சஞ்சய் காந்தியிடம் பேசுகையில், ``இந்தியா முழுவதும் 360 பொருள்களுக்கு மேல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் பல பொருள்களும் அடங்கும்.

2019-ல் மட்டும் ஈரோடு மஞ்சள், திருபுவனம் பட்டு, கொடைக்கானல் மலைப் பூண்டு, பழனி பஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட 7 பொருள்களுக்குக் கிடைத்துள்ளது. 2019-ல் 7 பொருள்கள் என்பது தமிழகத்திற்கு அதிகமான பொருள்களாகும். இதில் காரைக்குடி கண்டாங்கி, திருபுவனம் பட்டு உள்ளிட்ட 4 பொருள்களுக்கு என்னுடைய முயற்சியில் புவிசார் குறியீடு பெற்றுக்கொடுத்துள்ளேன்.
2018-ல் மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி புவிசார் குறியீடு பெற்றதால் தமிழக அரசு 2019 கைவினைப் பொருள்கள் கலைஞர்கள் மாநாட்டில் என்னை கெளரவப்படுத்தியது. தொடர்ந்து தமிழகத்தில் அதிகமான பொருள்களுக்குப் புவிசார் குறியீடு பெற்றுக் கொடுத்துள்ளேன். தற்போது நோடல் அலுவலராக இருப்பதால் பல்வேறு பொருள்களுக்கும் எளிமையாக புவிசார் குறியீடு பெற்றுத் தரவும், புதுப்பித்துத் தரவும் முடிகிறது.

நடப்பாண்டிலும் தமிழகத்தில் பல பொருள்களுக்குப் புவிசார் குறியீடு பெற்றுத்தருவோம். புவிசார் குறியீடு பெறுவதால் ஒரு சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. போலிகள் தவிர்க்க முடியும், சிறு தொழில் பெரும் தொழிலாக மாறும், விளம்பரம் ஏற்படும், தொழிலாளர்கள் நலன் உயரும், ஆராய்ச்சி மாணவர்கள் கூட பொருள்கள் குறித்து ஆராய்ச்சி செய்யலாம் இப்படிப் பல்வேறு நலன்களைப் புவிசார் குறியீடு வழங்குகிறது" என்று தெரிவித்தார்.