அரசியல்
Published:Updated:

லோக்கல் போஸ்ட்

லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
லோக்கல் போஸ்ட்

- தேன்மொழி

லோக்கல் போஸ்ட்

‘‘என்னங்க சார் உங்க சட்டம்?”

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட குளக்கரைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. அவை தற்போது கோவை மக்களின் ரிலாக்ஸ் ஸ்பாட்டாகவும் மாறிவருகின்றன. இதனால் யூடியூப் சேனல்கள், ஷார்ட் ஃபிலிம் ஷூட்டிங், போட்டோ ஷூட் என்று குளக்கரைகளில் பரபரப்பாகத் திரிந்துகொண்டிருந்தார்கள். இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் என்ன நினைத்ததோ... திடீரென ‘குளக்கரைகளில் படம் எடுக்கத் தடை’ என்று அறிவித்துவிட்டது. ஆனால், இப்போதும் குளக்கரைகளில் காதல் ஜோடிகளின் ரொமான்ஸ், போதை இளைஞர்களின் அழிச்சாட்டியம் உட்பட எல்லா வைபவங்களும் தடையில்லாமல் அரங்கேறுகின்றன. இதனால், “எதுக்குத் தடை விதிக்கணுமோ அதை விட்டுட்டு, சம்பந்தமில்லாத விஷயங்களுக்கெல்லாம் தடைபோடுறீங்களே... என்னங்க சார் உங்க சட்டம்?” எனத் தலையிலடித்துக்கொள்கிறார்கள் கோவை மகாஜனங்கள்!

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

கொழுந்துவிட்டு எரிந்த ஜீப்; குளிர் காய்ந்த ஊட்டி இளைஞர்!

ஊட்டியில் உறைபனி சீஸன் தொடங்கி கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் வெளியில் நடமாடுவதையே உள்ளூர் மக்கள் தவிர்த்துவருகின்றனர். இந்த நிலையில், காந்தள் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர், நள்ளிரவு நேரத்தில் ரோட்டோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப் ஒன்றுக்குள் நுழைந்து, தீ மூட்ட முயன்றிருக்கிறார். இதில் தீவிபத்து ஏற்பட்டு, திடீரென ஜீப் பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. பதறிய மனோஜ், ஜீப்பிலிருந்து கீழே குதித்து சில மீட்டர் தூரம் ஓடிச் சென்றிருக்கிறார். பிறகு என்ன நினைத்தாரோ... வாட்டும் குளிரில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஜீப் அருகில் வந்து இதமாகக் குளிர்காய ஆரம்பித்துவிட்டார். இதைக் கண்ட வாகன ஓட்டுநர்கள் தீயணைப்பு வீரர்களை வரச்செய்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஜீப்பையும் பற்றவைத்து, அப்பாவியாக அதில் குளிர் காய்ந்த மனோஜ் மீது வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது ஊட்டி காவல்துறை!

லோக்கல் போஸ்ட்


தின்பண்டங்களை அபேஸ் செய்த போலீஸ்?

நீலகிரி மாவட்டம், மசினகுடிப் பகுதியில், காட்டுயானை தாக்கியதில் மாதன் என்பவர் உயிரிழந்தார். அவருக்கான 12-வது நாள் சடங்கில் கலந்துகொள்வதற்காகப் பேருந்தில் வந்துகொண்டிருந்த மாதனின் உறவினர்களிடமிருந்து மது பாட்டில்களுடன்கூடிய பையைப் பறிமுதல் செய்திருக்கின்றனர் மசினகுடி போலீஸார். ‘பையில், குழந்தைகளுக்கான தின்பண்டங்களும் இருமல் மருந்துகளும் இருக்கின்றன. அதை மட்டுமாவது திருப்பித் தாருங்கள்’ எனப் பழங்குடியினர் கெஞ்சியிருக்கிறார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பைகளை ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்ற போலீஸார், ‘சட்டவிரோத மது விற்பனை’ செய்ததாக பழங்குடி இளைஞர் ஒருவர்மீது வழக்கும் பதிந்திருக்கிறார்கள். அதோடு, குழந்தைகளுக்காக வாங்கிவைத்திருந்த 1/2 கிலோ வர்க்கி, இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகள், மூன்று முட்டை பப்ஸ் ஆகிய தின்பண்டங்களும் ஸ்டேஷனில் வைத்து மாயமாகியிருக்கின்றன. இதையடுத்து, `மசினகுடி காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதே காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் புகார் அளித்திருக்கிறார்கள்!