வாக்காளர் பட்டியலில் முறைகேடு.. பதிவாளரை மாற்றுங்கள்... முண்டாசு கட்டும் மருத்துவ கவுன்சில் தேர்தல்!

வாக்காளர் பட்டியலை வெளியிடாமலேயே தேர்தலை நடத்தப் பார்க்கிறார்கள். கடந்த 2018 தேர்தலின்போது, மறைந்த 117 மருத்துவர்கள் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கினார்கள்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல், வரும் டிசம்பர் 19-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. தபால் வாக்குச்சீட்டு முறையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக மருத்துவர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்தத் தேர்தலை ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறார்.
அவர் நம்மிடம், “2018 ஜனவரி மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.வெங்கட்ராமன் தலைமையில் மருத்துவ கவுன்சில் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடந்தது. அப்போது, 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக இருந்தார்கள். ஆனால், வெறும் 20 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. இதனால், அதிகாரமிக்க குறிப்பிட்ட சில நபர்களே மெடிக்கல் கவுன்சிலை ஆக்கிரமித்துவருகிறார்கள். 1914-ல் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த சட்டம் இப்போதைய நடைமுறைக்கு ஒவ்வாதது. எனவே, ஆன்லைன் வழியாகத் தேர்தலை நடத்த வேண்டும். தகுதியுடையவர்கள் மருத்துவ கவுன்சில் தலைவராக வேண்டும்” என்றார்.

அரசு சாரா மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் கேசவனோ, “பேலட் வாக்குப்பதிவில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. ஏற்கெனவே, பொறுப்பில் இருப்பவர்கள் வலுக்கட்டாயமாகத் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மிரட்டி, தேர்தலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்கிறார்கள்” என்றார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் சி.என்.ராஜா, “வாக்காளர் பட்டியலை வெளியிடாமலேயே தேர்தலை நடத்தப் பார்க்கிறார்கள். கடந்த 2018 தேர்தலின்போது, மறைந்த 117 மருத்துவர்கள் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கினார்கள். ஆனால், இப்போது அவர்களின் பெயர்கள் மீண்டும் இடம்பெற்றிருக் கின்றன. இது மிகப்பெரிய தவறு. இதேபோல, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவாளராகத் தொடர அரசின் சிறப்பு அனுமதி வேண்டும். தற்போது பதவியிலிருக்கும் சண்முகம் அப்படி எந்தவிதச் சிறப்பு அனுமதியும் பெறவில்லை” என்றார்.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்டோம். “வாக்காளர் பட்டியல் சரியில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. ஏற்கெனவே இருக்கும் நிர்வாகம்தான் தேர்தலை நடத்த வேண்டும். அந்தவகையில், மருத்துவ கவுன்சில் தேர்தலை முறையாக நடத்துவதைக் கண்காணிக்க வேண்டும் எனத் துறைச் செயலா ளருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். பதிவாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் எங்களுக்கு வந்திருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம்” என முடித்துக்கொண்டார்.
முறைகேடுகளுக்கு வழிவகுக்காமல் தேர்தலை நேர்மையாக நடத்தினால் சரி!