அரசியல்
Published:Updated:

கரைவேட்டி டாட்காம்

கரைவேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட்காம்

‘வட்டம்’ பாலா - ஓவியங்கள்: சுதிர்

அரசு வாகனமா...‘சரக்கு’ வாகனமா?

வெயில் மாவட்டத்திலிருந்து புதிதாகப் பிறந்த மாவட்டத்தின் ‘ஜோரான’ ஊரில் ஆளுங்கட்சி நிர்வாகியாக இருக்கிறார் ‘பைக்’ பெயரைக்கொண்ட பிரமுகர். இவரின் மனைவியும் நகர்மன்றத் தலைவியாகிவிட்டதால், ஐயாவின் ஆட்டம் அதிகமாகிவிட்டதாம். ஏற்கெனவே கொலை வழக்கு உட்பட 13 வழக்குகளில் சிக்கியிருப்பவர், மனைவிக்கு வழங்கப்பட்ட அரசாங்க காரிலேயே அண்டை மாநில மதுபானங்களை கம்பீரமாகக் கடத்திவருகிறாராம். நகரில் குடிநீர் சப்ளை சீராக நடக்கிறதா என்று கண்காணிக்கவேண்டிய கார், சரக்கு சப்ளைக்காக மாடாக உழைக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கஞ்சா விற்பனையிலும் அந்த நிர்வாகி ஆர்வம் காட்டுகிறாராம். சமீபத்தில், சரக்கோடு அந்த கார் போலீஸாரிடம் சிக்கியதாகவும், நகராட்சி ஆணையரைவிட்டுப் பேசி, அதை விடுவித்ததாகவும் சொல்லி தலையில் அடித்துக்கொள்கிறார்கள் நகராட்சி ஆட்கள்!

‘அந்த 5 சென்ட் நிலம்?!’

பின்னலாடை மாவட்டத்தில், பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியரின் சொந்த ஊரின் நகராட்சித் தலைவராக இருக்கிறார் ஆளுங்கட்சி முன்னாள் அமைச்சரின் பேரன். நகராட்சித் தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பின்போது, கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து களம் கண்டவர், ‘எனக்கு வாக்களிக்கும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு 5 சென்ட் நிலம் அல்லது பணம் தருவேன்’ என வாக்குறுதி கொடுத்து வெற்றியும் பெற்றார். ஆனால், ஓராண்டைக் கடந்தும், எதுவும் கிடைக்காததால் சமீபத்தில் அவரைச் சந்தித்த கவுன்சிலர்கள், “அண்ணா... அந்த 5 சென்ட் நிலம்..?’ என்று தலையைச் சொறிந்திருக்கிறார்கள். ‘குறுக்குவழியில பதவிக்கு வந்ததால, என் சீட்டே எப்ப பறிபோகும்னு தெரியாம திண்டாடிக் கிட்டிருக்கேன். நிலமாவது... பணமாவது...’ என்று கைவிரித்துவிட்டாராம் தலைவர். ‘நாமே பலருக்கு நாமம் போட்டுத்தான் கவுன்சிலரானோம். இவரு நமக்கே நாமம் போட்டுட்டாரே...’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் அந்த கவுன்சிலர்கள்!

கரைவேட்டி டாட்காம்

மம்மியாவது டாடியாவது?!

அவார்டு மாவட்டத்தைச் சேர்ந்த இனிஷியல் அமைச்சர், சமீபத்தில் தலைநகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, மறைந்த முதல்வரை ‘ராட்சஷி’ என விமர்சித்திருந்தார். உடனே கொந்தளித்த எதிர்க்கட்சியினர், அமைச்சருக்கு எதிராகக் கண்டனமும் தெரிவித்தனர். ஆனால், அவரது சொந்த மாவட்டத்தில் எதிர்க்கட்சி செயலாளராக இருக்கும், மாஜி அமைச்சரோ அதற்கு எதிராகச் சின்ன பொட்டுவெடி அளவுகூட வெடிக்காமல், கனத்த அமைதி காத்துவருகிறார். ஒரு காலத்தில் அணுகுண்டாக வெடித்தவர் ஏன் இப்படிப் புஸ்ஸாகிப்போனார் என்று கேட்டால், ‘அவரே பண மோசடி வழக்கு விசாரணைக்கு வருகிறதே என்ற கவலையில் இருக்கிறார். தனக்கே ஆயிரம் பிரச்னை இருக்கும்போது மம்மியாவது டாடியாவது...’ என்று கிசுகிசுக்கிறார்கள் அண்ணனின் விழுதுகள்!

‘வெறும் வாழ்த்து மட்டும்தானா?!’

பொங்கலைத் தித்திப்பாகக் கொண்டாடும் வகையில், ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து ‘பொங்கல் பரிசு’ எல்லா மாவட்டங்களுக்கும் போயிருக்கிறது. ஜில் மாவட்டத்தில், “நானே விநியோகம் பண்ணிடுறேன்” என்று மொத்தப் பரிசையும் மாவட்டச் செயலாளரே வாங்கிவைத்திருப்பதாகத் தகவல் பரவியது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போது, ‘பரிசுகளை அண்ணன் பிரித்துக்கொடுப்பார்’ என்று நம்பிப் பெரும் கூட்டமே குவிந்துவிட்டது. வந்தவர்களெல்லாம் காணும் பொங்கல் வரை காத்திருந்ததுதான் மிச்சம்... ‘வெறும் வாயில் வாழ்த்து’ சொல்லி ஜூட் விட்டுவிட்டாராம் மா.செ. “பொங்கல் பரிசை ஆட்டையைப்போட்டவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க...” என மா.செ காதுபடவே சாபம் விட்டுவருகிறார்களாம் உடன்பிறப்புகள்!

கரைவேட்டி டாட்காம்

‘வாரிசு கட்சிக்கு ஏற்ற வாரிசுதான்!’

மேற்கே இலைக் கட்சியிலிருந்து சூரியனுக்கு ‘ஆட்டுக்குட்டி’ போலத் தாவியவர் அந்த முன்னாள் எம்.எல்.ஏ. தன் ‘வாரிசு’களுக்காகத் தொலைநோக்குத் திட்டத்துடன் டீலிங் பேசியே கட்சி மாறினார். பேசியபடி அவர் மகனுக்கு மாவட்ட அளவிலான போஸ்ட்டிங்கும் கிடைத்துவிடவே... தந்தை ரூட்டில் டாப் கியரில் பயணிக்கிறாராம் வாரிசு. இலைக் கட்சியில் இருந்தபோது, தலைவி வரும்போதெல்லாம் ஜமாப் இசைக்குழுவைக் களமிறக்கி பட்டையைக் கிளப்பியவர் தந்தை. தற்போது அவரது வழியையே பின்பற்றும் தனயன், முதல்வர் - சின்னவர் நிகழ்ச்சிகளில் ஜமாப் குழுவுடன் அட்டெண்டென்ஸ் போட்டுவிடுகிறாராம். ‘வாரிசு கட்சிக்கு ஏற்ற வாரிசுதான்’ எனக் கலாய்க்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!