அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

லோக்கல் போஸ்ட்

‘சித்தர்’ என்று சொல்லி ‘சித்து’ வேலை!
பிரீமியம் ஸ்டோரி
News
‘சித்தர்’ என்று சொல்லி ‘சித்து’ வேலை!

- தேன்மொழி

லோக்கல் போஸ்ட்

‘சித்தர்’ என்று சொல்லி ‘சித்து’ வேலை!

“கரூரில், கன்னியாகுமரி - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மலைக்கோவிலூர் பகுதியில் கடந்த 15 வருடங்களாக அலைந்துகொண்டிருந்தார் ஒருவர். அவரைச் சிலர் ‘பிஸ்கட் சித்தர்’, ‘நிர்வாணச் சித்தர்’, ‘திருநீறு சித்தர்’ என்று கிளப்பிவிட்டதோடு, அவரது உடலில் கிலோக்கணக்கில் திருநீற்றை அப்பிவிட்டு, ரோட்டோரம் கொட்டகை அமைத்து அதில் தங்கவைத்துவிட்டனர். விளைவு, ‘சித்தரைப் பார்க்க வேண்டும்’ எனப் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் பக்தகோடிகள் (!). அவரை மீட்டு, உடனே அவருக்குச் சிகிச்சையளிக்க வேண்டும். இல்லையென்றால், உடல்நலம் குன்றியிருக்கும் அவரை ஜீவசமாதி அடையவைக்கும் முயற்சியில் இறங்கிவிடுவார்கள்” என்று சொல்லும் சமூக ஆர்வலர்கள், பலருக்கும் புகார் மனுக்களை அனுப்பிவருகிறார்கள்.

லோக்கல் போஸ்ட்

மாஞ்சோலையில் மரம் கடத்திய கள அலுவலர்!

நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் கள அலுவலராகப் பணியாற்றுபவர் கேரளாவின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ். இவர் லாரியில் தன் பொருள்களை ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்குப் புறப்பட்டிருக்கிறார். அவரது வாகனத்தை வனத்துறையினர் சோதனையிட்டபோது, வீட்டுப் பொருள்களுடன் அரியவகை செங்குறிச்சி மரக்கட்டைகள் இருந்திருக்கின்றன. செம்மரம் வகையைச் சேர்ந்த அந்த மரத்தின் 15 கட்டைகளைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், அவருக்கு 80,000 ரூபாய் அபராதம் விதித்திருக்கின்றனர். ‘வழக்கு போட்டு உள்ளே தள்ளாமல், அபராதத்துடன் அனுப்பினார்களே’ என நிம்மதியடைந்த அதிகாரியும் உடனடியாக அபராதத்தைச் செலுத்திவிட்டு லாரியுடன் ஊருக்குச் சென்றாராம். ‘இதற்கு முன்பு வனத்துறையினரை ஏமாற்றி என்னவெல்லாம் கொண்டுசென்றாரோ’ எனப் புலம்புகிறார்கள் மக்கள்.

“நாம வளர்றோமோ இல்லையோ... அந்தம்மா நல்லா வளருதுங்கோ!”

மேற்கேயுள்ள அந்த முக்கிய மாநகராட்சி, கடும் நிதிப் பற்றாக்குறையில் தத்தளித்துவருகிறது. ஆனால் ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகள், வாய்ப்பு கிடைக்கும் இடத்திலெல்லாம் கல்லாகட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்களாம். தெற்கே மண்டலத் தலைவராக இருக்கும் அந்த உடன்பிறப்பு, கவுன்சிலர் ஆவதற்கு முன்பு ஸ்கூட்டி வாகனத்தில்தான் வலம் வந்துகொண்டிருந்தார். மண்டலத் தலைவரான ஓராண்டு முடிவதற்குள், ஒரு சொகுசு காரை விலைக்கு வாங்கிவிட்டாராம். தனது மண்டலத்திலுள்ள சில கவுன்சிலர்களுடன் அண்ட் கோ போட்டுக்கொண்டு வசூல்வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாராம் அம்மணி. ‘‘நாம வளர்றோமோ இல்லையோ... அந்தம்மா நல்லா வளருதுங்கோ” என கமென்ட் அடித்துவருகின்றனர் மக்கள்!