அலசல்
Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட் காம்

‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

உதயநிதியின் நக்கல் பேச்சு! - ஸ்கோர் செய்யும் கோவை அ.தி.மு.க...

சமீபத்தில் கோவை வந்த உதயநிதி ஸ்டாலின், ‘‘கோயம்புத்தூர்காரங்க குசும்புக்காரங்க மட்டுமில்லை... அப்பப்ப ஏமாத்தவும் செஞ்சுருவீங்க. எங்க காலை வாரிட்டீங்க...’’ என்று நக்கலாகப் பேசினார். மேலும், ‘‘முன்னாள் அமைச்சர் வேலுமணி கொள்ளையடித்த பணத்தின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார்’’ என்றும் கூறியிருந்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சை கோவை மக்கள் ரசிக்கவில்லையாம். ஏற்கெனவே அமைச்சர் தா.மோ.அன்பரசன் கோவை வந்தபோது, ‘‘கோவைக்கு வர்றதுக்கே வெக்கமா இருக்கு’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து, ‘‘ஏதோ கோவை மக்கள் மட்டும் காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்ட மாதிரி பேசறாங்க. தி.மு.க எங்கேயும் காசே கொடுக்காமதான் ஜெயிச்சாங்களா?’’ என்று சமூக வலைதளங்களில் போட்டுத் தாக்குகிறார்கள். இதைச் சரியாகப் புரிந்துகொண்ட அ.தி.மு.க., கண்டன அறிக்கை விடுவது, ஐடி விங் மூலம் அது தொடர்பான பதிவுகளைப் போட்டு வைரலாக்குவது என்று ஸ்கோர் செய்துவருகிறது.

கரைவேட்டி டாட் காம்

“ஏடிஎம் கார்டு இருந்தா கட்சிப் பதவி!” - கும்பகோணம் தி.மு.க நிர்வாகி தடாலடி...

சமீபத்தில் கும்பகோணம் தி.மு.க வடக்கு மாவட்டத்தில் தெற்கு ஒன்றியம் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உடையாளூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரான லோகநாதன், “தி.மு.க-வுல ஏடிஎம் கார்டு இருந்தால் போதும்... கட்சிப் பதவி வாங்கிடலாம். உறுப்பினர் கார்டை வெச்சு பதவியும் வாங்க முடியாது... முன்னேறவும் முடியாது” என்று ஓப்பன் மைக்கில் பிடி பிடி என்று பிடித்திருக்கிறார். இது பற்றிப் பேசிய உள்ளூர் கட்சித் தொண்டர்களோ, “தற்போது சுற்றுச்சூழல் அணியில் பதவிகள் கொடுக்கப்பட்டுவருகின்றன. பணம் கொடுத்து, பலர் அந்தப் பதவிகளை வாங்கியுள்ளனர். அதை மனதில்வைத்தே லோகநாதன் அப்படிக் கொந்தளித்தார்...” என்றார்கள்!“

கரைவேட்டி டாட் காம்

ஃபேஸ்புக்குல பேரு வாங்குறதுக்காகக் கூட்டம்!” - ஆ.ராசாவைப் போட்டுத் தாக்கும் நீலகிரி மக்கள்...

சமீபகாலமாக நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி ஆ.ராசாவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தொகுதி மக்கள் புலம்பிவந்தார்கள். குறிப்பாக, ‘கூடலூர், பந்தலூர் பகுதி மக்களின் நீண்டகால பிரச்னையான செக்‌ஷன் 17 நிலப்பிரச்னையைக் கண்டுக்கொள்ளவில்லை; கூடலூரில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என தொகுதிக்குள் தீர்க்கவேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருந்தும், தொகுதிப் பக்கம் எம்.பி தலைகாட்டுவதே இல்லை’ என்று மக்கள் சமூக ஊடகங்களில் புலம்பித் தீர்த்தார்கள். இதையறிந்து உஷாரான ராசா சமீபத்தில், ‘வன உரிமைச் சட்டம் 2006’ தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியிருந்தார். இது பற்றிப் பழங்குடி மக்களுக்கான செயற்பாட்டாளர்கள் சிலர் ராசாவைப் பாராட்டி, சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இதையடுத்து, “ஃபேஸ்புக்குல பேரு வாங்குறதுக்காகக் கூட்டம் நடத்தக் கூடாது... உள்ளூர்ல அவருக்கு ஓட்டுப் போட்ட மக்கள்கிட்ட முதல்ல நல்ல பேரு எடுக்கச் சொல்லுங்க!” என்று கொந்தளிக்கிறார்கள் தொகுதி மக்கள்!

கரைவேட்டி டாட் காம்

“காங்கிரஸுக்கு என்ன தகுதி இருக்கிறது?” - குமரி கூட்டணி கலாட்டா...

சமீபகாலமாக காங்கிரஸ் கூட்டங்களில் பேசும்போதெல்லாம் “காமராஜர் வழியில் நாம் தனியாக ஆட்சி அமைக்க வேண்டும்; ஆட்சியில் நமக்குப் பங்கு தரவில்லை தி.மு.க’ என்று அதிரிபுதிரியாகப் பேசிவருகிறார் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ். காங்கிரஸின் சீனியர் எம்.எல்.ஏ ஒருவரே இப்படிப் பேசுவது மாவட்ட தி.மு.க தரப்புக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிப் பேசும் கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க நிர்வாகிகளோ, “தேர்தல் நேரத்தில் மட்டும் தி.மு.க-வுடன் சாந்த முகம் காட்டும் பிரின்ஸ், தேர்தல் முடிந்ததும் கூட்டணி தர்மத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தி.மு.க-வைத் தாக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து எம்.எல்.ஏ ஆக்கியதே தி.மு.க-தான். நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறோம். அப்படியிருக்கும்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள், அதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கொந்தளிக்கிறார்கள்!

கரைவேட்டி டாட் காம்

“சாராயம் காய்ச்சியவருக்கு கவுன்சிலர் சீட்டா?” - கரூர் உடன்பிறப்புகள் கலகம்...

கரூர் நகர தி.மு.க நிர்வாகியாக இருக்கும் கூல்டிரிங்ஸ் பிரமுகர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர விசுவாசி. அதுவும் எப்படியென்றால்... செந்தில் பாலாஜி அ.தி.மு.க., அ.ம.மு.க., தி.மு.க என்று எங்கெல்லாம் பயணித்தாரோ, அவரைப் பின்னொற்றிச் சென்றவர். அதன் காரணமாகவே நகர நிர்வாகி பதவியும் இவருக்குக் கிடைத்தது என்கிறார்கள். இதுவே கரூர் தி.மு.க-வினர் மத்தியில் புகைச்சலைக் கிளப்பியது. இந்த நிலையில், வரும் மாநகராட்சித் தேர்தலில் இவருக்கு கவுன்சிலர் சீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் செந்தில் பாலாஜி. இது பற்றிப் பேசும் உள்ளூர் உடன்பிறப்புகளோ, “2009-ம் வருஷம், கள்ளச்சாராயம் காய்ச்சி போலீஸ்ல மாட்டியிருக்காரு. அமைச்சர் பழக்கம்கிறதால உள்ளூர் தி.மு.க-காரங்களை மதிக்குறதே இல்லை... காலம் காலமா கரூர் தி.மு.க-வுல இருக்குறவங்க எல்லாம் சீட் எதிர்பார்த்து காத்திருக்காங்க. அவங்களுக்குக் கொடுக்காம மாற்றுக் கட்சியிலருந்து வந்தவங்களுக்குக் கொடுக்குறது என்ன நியாயம்?” என்று புலம்புகிறார்கள்!