அலசல்
சமூகம்
Published:Updated:

கரைவேட்டி டாட்காம்

கரைவேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட்காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியம்: சுதிர்

‘யாரு பார்த்த வேலை இது?’ - புலம்பும் ஜோதிமணி!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் பிஸியாக இருக்கிறார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி. இதையே சாக்காகவைத்து சமூக வலைதளங்களில், ‘கரூர் எம்.பி-யைக் காணவில்லை. கண்டா வரச் சொல்லுங்க... கையோடு கூட்டி வாருங்க...’ என்று தனுஷ் படப் பாடலை உல்டா செய்து வீடியோவாகப் பரப்பியிருக்கிறது ஒரு கும்பல். இந்த வீடியோ வைரலாகப் பரவியதும், வேக வேகமாக கரூருக்குத் திரும்பினார் ஜோதிமணி. உள்ளூரிலேயே முகாமிட்டு, முருங்கைக் கண்காட்சி, முதல்வர் விழா எனச் சிலபல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஆனாலும், ‘யாரு பார்த்த வேலைய்யா இது?’ என்று விசாரிக்கத் தவறவில்லை அவர். ‘இந்த வேலையைச் செய்தது காங்கிரஸில் உங்க எதிர்க் கோஷ்டியினர்தான்’ என்று ஒரு தரப்பும், ‘இல்லை இல்லை, இதைச் செய்தது சாட்சாத் பா.ஜ.க ஐடி விங்க்தான்’ என்று மற்றொரு தரப்பும் சொல்ல, ‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’ என்று கலங்கி நிற்கிறார் ஜோதிமணி.

“புதுச்சேரி புதுச்சேரிதான்!”

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க., அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தூக்குவதற்கான ‘ஆபரேஷன் தாமரை’க்குத் தக்க தருணம் பார்த்துக் காத்திருக்கிறதாம். பா.ஜ.க-வின் இந்த மூவைத் தெரிந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி, லண்டனில் நடக்கும் உலகச் சுற்றுலா சந்தை வர்த்தகக் கண்காட்சியைக் காரணம் காட்டி, தனது எம்.எல்.ஏ-க்களையும், ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ-க்களையும் அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் லண்டன், பிரான்ஸ் நாடுகளுக்குச் சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறாராம். அதைப் பார்த்து கடுப்பான பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும், ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ-க்களும் “வாரியம்தான் வாங்கித் தரலை... அவங்களைப்போல வெளிநாட்டு டூருக்காவது கூட்டிக்கிட்டு போங்க...” என்று தங்கள் கட்சித் தலைமையிடம் புலம்பிக்கொண்டிருக்கிறார்களாம். முதலுக்கே மோசம் வந்துவிடக் கூடாது என்பதால் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், தனது கட்சி எம்.எல்.ஏ-க்களை இலங்கைக்கு அனுப்பிவைத்திருக்கிறது பா.ஜ.க. “தமிழ்நாட்டில் கூவத்தூருக்குக் கூட்டிக்கொண்டுபோய் சிம்பிளாக முடித்தார்கள். புதுச்சேரி புதுச்சேரிதான்யா” என்று கமென்ட் அடிக்கிறார்கள் எல்லையோரத் தமிழக அரசியல்வாதிகள்.

கரைவேட்டி டாட்காம்

“மாலையும் எனக்கே... மரியாதையும் எனக்கே!”

எவ்வளவு போட்டி வந்தாலும், மா.செ நாற்காலியைப் பல ஆண்டுகளாக முட்டிமோதி தக்கவைத்து வருகிறார் ஜில் மாவட்டத்தின் ஆளுங்கட்சி சீனியர். ஆனாலும், தன்னை மீறி யாரும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம். இதற்காகச் செல்லுமிடமெல்லாம் ‘மாலையும் எனக்கே, மரியாதையும் எனக்கே’ என்று முந்திக்கொள்கிறாராம். மா.செ பதவியைத் தவிர, அவருக்கென்று அரசுப் பொறுப்பு எதுவும் கிடையாது. ஆனாலும், மாவட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் முதல் ஆளாக ஆஜராகி, மேடை நாற்காலியில் துண்டு போட்டுக் கொள்கிறார். அண்மையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் விசிட் கொடுத்த அரசு ஆய்வுக் கூட்டங்களின்போதும் அதிகாரிகளை முந்திக்கொண்டு இவர் நின்றாராம். இதனால் கடுப்பான ஜில் அதிகாரிகள், “இது கவர்மென்ட் புரோகிராமா... இல்லை கட்சி மாநாடா?” என்று அவர் காதில் விழும்படியே பேசிவிட்டார்களாம். ஆனாலும், எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் துண்டை இழுத்து, தோளில் போட்டுக்கொண்டு, ‘அடுத்த அரசு விழா எங்கே... அமைச்சர் மீட்டிங் எப்ப?’ என்று அந்த அதிகாரிகளிடமே விசாரிக்கிறாராம் மாவட்டம்.

ஒரு சிலை... தேர்தல்... போஸ்டர்!

அவார்டு மாவட்டத்தில் விதிகளை மீறி, சமுதாயத் தலைவர் ஒருவரின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவியிருக்கிறார்கள் ஒரு கிராமத்தினர். அந்த வட்டாரமே குறிப்பிட்ட சமூகத்தினர் கணிசமாக வசிக்கும் கிராமங்களாக இருப்பதால், அதை அகற்றவிடாமல் அணி திரண்டிருக்கிறார்கள் மக்கள். சிலை வைக்கும் முன்பே தடுக்கத் தவறியிருக்கிறது வருவாய்த்துறையும், காவல்துறையும். இதை இப்படியேவிட்டால், ஆளாளுக்குச் சிலை வைத்து சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்திவிடுவார்கள் என்பதால், வேறு யாரையாவது வைத்து, நீதிமன்ற உத்தரவு வாங்கி சிலையை அகற்றலாமா என்று யோசிக்கிறது போலீஸ். ஆனால், இந்தக் குடைச்சல்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பவர் இனிஷியல் அமைச்சர்தான் என்று உட்கட்சி உடன்பிறப்பே போட்டுக் கொடுத்துவிட்டாராம். இதனால் அமைச்சருக்கு எதிராக வரிந்துகட்டி நிற்கின்றனர் சிலை திறந்த சமூக மக்கள். அமைச்சரைக் கண்டித்து அவர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டர்தான் இப்போது மாவட்டத்தில் ஹாட் டாபிக். ‘எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும் அமைச்சருக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுகிறோம்’ என்று ஊர் மக்கள் கொளுத்திப்போட்ட புகைக் குண்டு அமைச்சர் தரப்புக்கு கண்ணீர் வரவைத்திருக்கிறது.

ஒரே நாளில் அணி மாறிய மா.செ!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருக்கிறார் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன். இவரும் முன்னாள் மா.செ-வும், முன்னாள் அமைச்சருமான செல்லப்பாண்டியனும் ஒருவருக்கொருவர் முறுக்கிக்கொண்டிருப்பது ஊர் அறிந்த செய்தி. “எனக்கு மாநகர் மா.செ பதவி வேண்டும்” என கேட்டுக் கேட்டு ஓய்ந்துபோன, செல்லப்பாண்டியன் சமீபத்தில் பணிவானவரின் அணிக்குத் தாவினார். உடனே அவருக்கு, தூத்துக்குடியின் ஆறு தொகுதிகளில் நான்கு தொகுதிகள் அடங்கிய தெற்கு மா.செ பதவியைக் கொடுத்தார் பணிவானவர். அறிவிக்கப்பட்ட அன்று, கட்சி அலுவலகத்தில் 10 பேர்கூட திரளவில்லையாம். “பணிவானவர் அணிக்குப் போவதும்... அரசியல் தற்கொலை செய்துகொள்வதும் ஒண்ணு” என்று தன் நலம்விரும்பிகள் சொன்னது உண்மைதானோ என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார் செல்லப்பாண்டியன். இதை அறிந்த துணிவானவர் தரப்பு தூதர் கடம்பூர் ராஜூ, அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ‘உங்களுக்கு மாநகர் மா.செ பதவி தர்றோம். தேர்தல்ல போட்டியிட வாய்ப்பும் தர்றோம்’ என்று சொல்லி அடுத்த நாளே துணிவானவரைச் சந்திக்க அவரை அழைத்துப் போய்விட்டார்களாம். இன்னும் அதிகாரபூர்வமாக அணிமாற்றச் செய்தி வெளிவரவில்லை என்றாலும், தகவல் தொண்டர்களை அடைந்துவிட்டது. “ஒரே நாள்ல அணி தாவிட்டார் அண்ணாச்சி... இப்போ நாம என்ன பண்றது?” எனக் குழப்பத்தில் இருக்கிறார்கள் அவரது ஆதரவு ர.ரக்கள்.

‘இருக்குற இடம் தெரியாம இருந்துட்டுப் போயிடணும்!’

மேற்கேயுள்ள அந்த முக்கிய மாவட்டத்தில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ என்று பவர்ஃபுல் பதவிகளுடன் வலம்வருபவர் ‘வில் வித்தை’ புள்ளி. “மாப்பிளை இவருதான். ஆனா இவரு போட்டுருக்குற சட்டை என்னோடது” என்பதுபோல, அவரை எல்லாவற்றிலும் டம்மியாக்கி வைத்திருக்கிறார்களாம் மாவட்ட மாஜியும், மாஜியின் நிழலாக வலம்வரும் நிலா புள்ளியும். தொகுதியில் இவர்கள் இருவரும் வைத்ததுதான் சட்டமாம். இதனால் ‘வில் வித்தை’ புள்ளி என்ற ஒரு நபர் இருப்பதே வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை. ஆனால், அதற்கெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், “நமக்கெல்லாம் கவுன்சிலர் பதவி கிடைச்சதே பெருசு... மா.செ பதவியெல்லாம் கனவுலயும் யோசிச்சுப் பார்க்காத விஷயம். கொடுக்கறதை வாங்கிட்டு... இருக்குற இடம் தெரியாம இருந்துட்டுப் போறதுதான் நல்லது” என்று உடன் இருப்பவர்களிடம் கிசுகிசுக்கிறாராம் ‘வில்லு’. ‘கட்சிக்கேத்த அக்மார்க் அமாவாசை நீதான்யா...’ என்று ரத்தத்தின் ரத்தங்களே அவரைக் கலாய்த்துவருகின்றனர்.