அலசல்
Published:Updated:

கரைவேட்டி டாட்காம்

கரைவேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட்காம்

- ‘வட்டம்’ பாலா - ஓவியங்கள்: சுதிர்

‘‘நமது சண்டையை நாளைய சரித்திரம் சொல்லும்!”

தூத்துக்குடி கிப்சன்புரத்திலுள்ள பூங்கா முன்பு எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை இருக்கிறது. இதைப் பராமரித்துவரும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஏசாதுரையை, அண்மையில் தூத்துக்குடி அ.தி.மு.க மாநகர் மாவட்டச் செயலாளராக நியமித்தது ஓ.பி.எஸ் அணி. உடனே, எம்.ஜி.ஆர் சிலையின் கீழ் எழுதப்பட்டிருந்த இ.பி.எஸ் அணி நிர்வாகியான முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் பெயரை, ஏசாதுரை அணியினர் அழித்துவிட்டு, ஏசாதுரையின் பெயரை எழுதினார்கள். பொங்கியெழுந்த சண்முகநாதன் அணியினர், ஏசாதுரையின் பெயரை அழித்து சண்முகநாதன் பெயரை எழுதி பதிலடி கொடுத்தனர். வெகுண்டெழுந்த ஏசாதுரை அணி, அந்த பெயின்ட் காயும் முன்பே மீண்டும் சண்முகநாதனின் பெயரை அழித்தது. இப்படி மாற்றி மாற்றி அழித்து விளையாடிய இரு தரப்பினரும் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகாரும் கொடுத்திருக்கிறார்கள். ‘‘நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லுமோ இல்லையோ, இந்தச் சண்டையைச் சொல்லும்” என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் ர.ர-க்கள்.

கரைவேட்டி டாட்காம்

‘போட்றா வெடிய...’ கொண்டாடித்தீர்த்த மா.செ!

‘ஜில்’ மாவட்ட ஆளுங்கட்சியில் மா.செ-வுக்கும், உள்ளூர் அமைச்சருக்கும் இடையேயான கோஷ்டி மோதல் ஊரறிந்த விஷயம். பசுமைத்துறை அமைச்சரை அந்தப் பதவியிலிருந்து அகற்ற ஆயிரத்தெட்டு புகார்களை, தொடர்ந்து மேலிடத்தில் வாசித்துவந்தாராம் மாவட்டம். தற்போது சின்னவர் கிரீடம் சூட்டிய நிலையில், உள்ளூர் அமைச்சருக்கும் இலாகா மாற்றம் நடந்துவிட... குத்தாட்டம் போட்டு பட்டாசு வெடித்து இனிப்பு பரிமாறியிருக்கிறார். ‘சின்னவர் பட்டாபிஷேக விழா’ என்ற பெயரில் மா.செ செய்த அலப்பறைகளைப் பார்த்த தொண்டர்கள், ‘‘இனிப்பும் பட்டாசும் சின்னவர் பட்டாபிஷேகத்துக்கா... அமைச்சர் இலாகா மாற்றத்துக்கா..?’’ என அவர் காதுபடவே கிண்டலடித்தார்களாம்.

‘‘ஊருக்குள்ள இப்படித்தான் சொல்லிகிட்டு திரியுறியா?”

மேற்கே இருக்கும் மாவட்டத்தின் ‘முத்து’ ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார் முருகன் பெயரைக்கொண்ட அந்த ரத்தத்தின் ரத்தம். ‘மணி’யான மாஜியின் ஆசியால் குறுகியகாலத்தில் வளர்ந்தவர், ஊராட்சி மன்றத் தலைவரான சிறிது காலத்திலேயே, ‘எம்.எல்.ஏ., அமைச்சர்’ பதவிகளைக் குறிவைத்து தீயாய் வேலை செய்கிறாராம். தனக்கென ஐடி விங் வைத்து சமூக வலைதளங்களில் புரொமோஷன் செய்வது, கட்சிக் கூட்டங்களில் தனக்குத்தானே தாரை, தப்பட்டை கிழிய தடபுடல் வரவேற்பு கொடுப்பது என தடாலடி காட்டிவருகிறாராம் முருகக் கடவுள் ர.ர. அண்மையில், நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில், “வருங்கால அமைச்சர் அண்ணன்...” என்று முருகக் கடவுளின் ஆதரவாளர் கோஷம்போட... விஷயம் மாஜியின் கவனத்துக்குப் போய்விட்டது. “ஏன்டா டக்ளஸு... ஊருக்குள்ள இப்படித்தான் சொல்லிக்கிட்டு திரியுறியா?” என லெஃப்ட் ரைட் வாங்கிவிட்டாராம் மாஜி.

கரைவேட்டி டாட்காம்

‘பதவி கிடைக்காத உ.பி... தலைவருக்கு ஏத்திவிட்டாரு பி.பி!’

ஆளுங்கட்சி அதிகாரத்தில் இருந்துவரும் அவார்டு நகராட்சியில், 10 கொசு மருந்து இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி தீர்மானம் வாசிக்கப்பட்டிருக்கிறது. ‘‘10 மெஷின் வாங்குறதுக்கு எதுக்கு 5 லட்ச ரூபாய்... ஏற்கெனவே நகராட்சியில இருந்த கொசு மருந்து இயந்திரமெல்லாம் என்னாச்சு?” என கவுன்சிலர்கள் அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். ‘‘ஏற்கெனவே இருந்த மெஷினெல்லாம் ரிப்பேர்ல கிடக்கு. அதனாலதான் புதுசு வாங்குறோம்’’ என்று சமாளிஃபிகேஷன் பதில் வர... ‘‘அதைப் பழுது நீக்கினா பணம் மிச்சமாகும்ல... பிறகு எதுக்கு புதுசு வாங்குறீங்க?’’ என ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவரே குறுக்குக் கேள்வி கேட்டுக் கொளுத்திப்போடவும், மறுபடியும் கூட்டம் பற்றிக்கொண்டதாம். ஒருவழியாக கூட்டத்தைச் சமாதானப்படுத்தி பூசி மெழுகித் தீர்மானம் வாசிப்பதற்குள் தலைவருக்கு பி.பி எகிறி நெஞ்சுவலியே வந்துவிட்டதாம். குறுக்குக் கேள்வி கேட்டு சேம் சைடு கோல் போட்ட உ.பி., தலைமைப் பொறுப்பு கிடைக்காத விரக்தியில் இருப்பவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.