அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கரைவேட்டி டாட்காம்

கரைவேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட்காம்

‘வட்டம்’ பாலா - ஓவியம்: சுதிர்

வேட்டி கிழிய ஓடும் கனிமக் கொள்ளையர்!

வெயில் மாவட்டத்திலுள்ள ‘கொல்லை’ பகுதியில் மலைகளை வெடிவைத்துத் தகர்த்தும், புறம்போக்கு நிலங்களை வளைத்துப்போட்டும் கனிமக் கொள்ளை அடித்துவந்தார் ‘சிம்மக் குரலோன்’ பெயர்கொண்ட அ.தி.மு.க பிரமுகர். எனவே, மாவட்ட ஆட்சியரிடமே இது குறித்துப் புகார் வாசிக்கப்பட்டது. ஆனால், ஆட்சியரோ அலட்சியத்துடன் கனத்த மௌனம் காத்துவந்தார். இதனால், துணிச்சலடைந்த ரத்தத்தின் ரத்தம், ‘யாராலும் என்னை ஒண்ணும் பண்ண முடியாதுடா...’ என்று புகார் அளித்த நபரின் வீட்டுக்கே சென்று சவடால் காட்டினார். இது தொடர்பான காணொளி ‘லீக்’ ஆகவே... கொதித்துப்போன ஆளுங்கட்சி எம்.பி., வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோபத்தைக் கொட்டவே... தற்போது கனிமக் கொள்ளையரின் வேட்டியை உருவ ஆரம்பித்திருக்கிறார்களாம் அதிகாரிகள். கழன்று விழும் வேட்டியைக் காப்பாற்ற, ஆளுங்கட்சி மா.செ-விடமே சரணடைந்திருக்கிறாராம் அந்தக் கனிமக் கொள்ளையர்.

சொந்தக் கட்சிக்காரன் சோத்துலயே மண்ணள்ளிப் போடலாமா?

‘அவார்டு’ நகராட்சியிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உணவு கான்ட்ராக்டை நீண்டகாலமாக எடுத்து நடத்திவருபவர் அந்த ஆளுங்கட்சிப் பிரமுகர். ஆனால், ‘இந்த முறை கான்ட்ராக்டை எங்களுக்கே தர வேண்டும்’ என ஆளுங்கட்சியைச் சேர்ந்த நகராட்சித் தலைவரே சுகாதாரத்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைக்க... கொதித்துப்போன ஆளுங்கட்சி ‘கான்ட்ராக்ட்’ பிரமுகர், ‘‘உங்களுக்கு என்ன குறைன்னு இப்பிடி சொந்தக் கட்சிக்காரன் சோத்துலயே மண்ணைக் கொட்டப் பாக்குறீங்க...’’ எனப் பொங்கித் தீர்த்திருக்கிறார்’. அப்புறம்தான் விஷயம் வெளியில் வந்திருக்கிறது... அதாவது, வெளியூர் நபரான அந்த கான்ட்ராக்ட் பிரமுகர், “மருத்துவமனையில் தொழில் செய்வதைத் தொடர வேண்டுமென்றால், வரும் லாபத்தில் 10% தர வேண்டும்” என நகராட்சித் தலைவர், தன் தரப்பு ஆட்கள் மூலம் ‘அன்புக்கட்டளை’ போட்டிருக்கிறார். ஆனால், ‘சொந்தக் கட்சிக்காரர்தானே’ என்ற மெத்தனத்தில் கான்ட்ராக்டர் கவனிக்கத் தவறியதால் உண்டான பஞ்சாயத்துதான் இதுவாம்!

கரைவேட்டி டாட்காம்

‘மக்களுக்காகவும் அலுவலகத்தைத் திறங்க அமைச்சரே..!’

முட்டை மாவட்டத்திலுள்ள ராசியான தொகுதியில், அமைச்சரின் பிறந்தநாள் விழா அமர்க்களப்பட்டது. குறிப்பாக, தொகுதி அலுவலகத்தில் அமைச்சருக்கு அடுக்கடுக்காக ஆளுயர மாலைகள் அணிவித்து, 20 கிலோ மெகா சைஸ் கேக் வெட்டி அதகளப்படுத்திவிட்டனர். ஆனால், விழா முடிந்ததும், மாலைகளை வெளியே வீசி அலுவலகத்தை இழுத்துப் பூட்டிவிட்டுக் கிளம்பிவிட்டனர். ‘‘வருடத்தில் ஒரு நாள்கூட மக்களுக்காகத் திறக்கப்படாத சட்டமன்ற அலுவலகத்தை, அமைச்சர் பிறந்தநாள் விழாவை நடத்த மட்டும் திறந்திருக்கிறார்கள். அடுத்து அமைச்சர் பிறந்தநாளைக்குத்தான் திறப்பார்கள்...’’ என்று தொகுதி மக்களோடு தி.மு.க-வினரும் சேர்ந்தே புலம்புகிறார்கள்.

“கல்யாண வீட்டில் மாப்பிள்ளை... இழவு வீட்டில் பிணம்!”

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த அந்த அமைச்சர், மஞ்சள் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு பணிகளையும் செய்து பெயர் வாங்கியவர். அந்த நம்பிக்கையினாலேயே ‘இவர் அமைச்சரானால் மாவட்டத்துக்குப் பல பணிகளைச் செய்து தருவார்’ என்று மக்களும், கட்சி மேலிடமும் நம்பிக்கைகொண்டிருந்தனர். ஆனால், தற்போதைய நிலைமையோ தலைகீழ். கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் ‘கல்தா’ கொடுக்கத் தொடங்கியவர், சொந்தக் கட்சிக்காரர்கள் சம்பாதிப்பதற்கான வழியையும் தடுத்து நிறுத்தி, ‘சோலோ பர்ஃபாமன்ஸி’ல் வெளுத்துக்கட்டிவருகிறாராம். நொந்துபோன உ.பி-கள் “கல்யாண வீடென்றால் மாப்பிள்ளை... எழவு வீடென்றால் பிணம் என்ற கதையாக எல்லா விஷயங்களிலும் அமைச்சர் தன்னை மட்டுமே முன்னிறுத்திக்கொண்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிப் பணியைச் செய்ய யார் வருவார்கள்?’’ என்று புலம்புகிறார்கள்!

வில்லங்கச் சேட்டையில் உதவியாளர்!

புதிதாக உருவான அருவி மாவட்டத்தில், ஆளுங்கட்சி முக்கியப் பிரமுகரின் உதவியாளராக இருந்தவர் கோபியர் விரும்பும் கடவுளின் பெயர் கொண்டவர். ‘அவரைப் பார்க்காமல், ஆளுங்கட்சி முக்கியப் பிரமுகரைப் பார்க்க முடியாது’ என்ற நிலையில் இருந்தவர். சில நாள்களுக்கு முன்பு திடீரென விடுமுறை எடுத்துச் சென்றிருக்கிறார். ‘எங்கே போனார் நிழல்..?’ என்று விசாரித்த ஆளுங்கட்சி முக்கியப் பிரமுகருக்கு பயங்கர ஷாக். தன்னுடன் நெருக்கமாக இருந்துவந்த பெண் பிரமுகருடன் தன் உதவியாளர் சென்னையில் ரூம் போட்டு கூத்தடிக்கும் விவரம், முக்கியப் பிரமுகருக்குத் தெரிந்துவிட்டதாம். உதவியாளரை நேரில் வரவழைத்து ‘நன்கு கவனித்து’ பின் சீட்டையும் கிழித்துவிட்டாராம். பார்க்கும் நபர்களிடமெல்லாம் தன் சீட் கிழிந்த கதையைச் சொல்லிப் புலம்புகிறாராம், அந்த முன்னாள் உதவியாளர்!