அலசல்
Published:Updated:

பொலிட்டிக்கல் பொடிமாஸ்

வினோஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
வினோஜ்

- ‘பூத்’ பாண்டியன்

பொலிட்டிக்கல் பொடிமாஸ்

‘இவரெல்லாம் விளையாட்டுத்துறை மந்திரியா?’ - உதயநிதியை விளாசிய வினோஜ்!

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில், ஜனவரி 7-ம் தேதி திருவள்ளூரில் பொங்கல் விழா நடந்தது. விழாவில், சுமார் 200 இளைஞர்கள் பா.ஜ.க மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்வுக்கு முன்னதாக, கட்சியில் இணையவிருந்த இளைஞர்களைத் தொடர்புகொண்ட உதயநிதி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், “அங்க போய் என்னப்பா பண்ணப்போறீங்க... உங்க எதிர்காலமே போயிடும். நம்ம கட்சிக்கு வந்துடுங்க. இளைஞரணியில பதவி வாங்கித் தர்றோம்” என்று சொன்னார்களாம். இந்த ஆள்பிடிப்பு விவகாரத்தைக் கேள்விப்பட்ட வினோஜ், மொத்தக் கடுப்பையும் உதயநிதிமீது கொட்டிவிட்டார். “திருவள்ளூரைச் சேர்ந்த வாலிபால் விளையாட்டு வீரர் ஆகாஷ் நேபாளத்தில் இறந்துவிட்டார். அவர் உடலுக்கு மரியாதை செலுத்தக்கூட உதயநிதி வரவில்லை. அவர் குடும்பம் என்னவானது என விசாரிக்கக்கூட இல்லை. இவரெல்லாம் விளையாட்டுத்துறை மந்திரியா?” என விளாசியெடுத்துவிட்டார்.

பொலிட்டிக்கல் பொடிமாஸ்

“புத்தாண்டு பார்ட்டி இல்லையாண்ணே?” - அ.தி.மு.க கூட்ட கலாய்!

வடசென்னை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் சமீபத்தில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. ‘புத்தாண்டு பரிசு’ மனநிலையிலேயே கூட்டத்துக்கு வந்திருந்தார்கள் நிர்வாகிகள். மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் வந்ததும், ‘பார்ட்டி ஏதும் இல்லையாண்ணே?’ என நிர்வாகிகள் கேட்க, ‘பார்ட்டி வேலையைப் பார்க்கச் சொன்னா, புத்தாண்டு பார்ட்டி கேட்குறீங்களேப்பா?’ எனக் கலாய்த்துவிட்டார் ஜெயக்குமார். ‘உங்களுக்காக கட்டப்பையெல்லாம் எடுத்துட்டு வந்தோம்ணே. ஸ்வீட் டப்பாகூட தரலைன்னா எப்படி?’ என நிர்வாகிகள் முரண்டுபிடிக்க, வந்திருந்தவர்களுக்கு பூந்தி, லட்டு ஸ்வீட் பார்சலாகின. ‘அந்த ஸ்வீட்’டை எதிர்பார்த்தவர்களுக்கு, லாலா கடை ஸ்வீட்டைப் பார்த்து ஏமாற்றம். ஆனாலும், ‘வடசென்னை ஏரியாவில் அ.தி.மு.க நிர்வாகிகள் முதல் பூத் கமிட்டி உறுப்பினர்கள் வரை வளைத்துப்போடும் பா.ஜ.க-வின் முயற்சிக்கு அணை போடும்விதமாக, அவ்வப்போது கட்சிக் கூட்டங்களை நடத்துவது’ என்று புத்தாண்டில் உறுதி எடுத்திருக்கிறாராம் ஜெயக்குமார்.

பொலிட்டிக்கல் பொடிமாஸ்

காலியான பதவி; மும்முனை அடிதடி!

தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், உடல்நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார். காலியாகியிருக்கும் அவரது கட்சிப் பதவிக்கு இப்போதே அடிதடி ஆரம்பமாகிவிட்டது. தனது ஆதரவாளரான தளபதி பாஸ்கர் என்பவரை, மாவட்டத் தலைவர் பதவிக்குக் கொண்டுவரத் தீர்மானித்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர்கள் செல்லகுமார்,ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். “அழகிரி பதவிக்காலமே முடிந்துவிட்டது. விரைவில் அவர் மாற்றப்படப் போகிறார். புதிதாகப் பொறுப்பேற்கப்போகிறவர் எப்படியும் தன் டீம் நிர்வாகிகளை மாவட்டப் பொறுப்புக்குக் கொண்டுவருவார்... அதற்குள் அழகிரி ஆதரவாளருக்குப் பதவி அளித்துவிட வேண்டாம்” என டெல்லி மேலிடப் பார்வையாளர்களிடம் பெட்டிஷன் போட்டிருக்கிறது செல்லகுமார், இளங்கோவன் தரப்பு.

பொலிட்டிக்கல் பொடிமாஸ்

“இதெல்லாம் என்கிட்ட கொடுக்கக் கூடாது!” - டென்ஷனான துரைமுருகன்

தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய, ‘பாதை மாறா பயணம்’ நூல் வெளியீட்டு விழா, ஜனவரி 7-ம் தேதி சென்னை கலைஞர் அரங்கில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் நூலை வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த கனிமொழி கருணாநிதியும், உதயநிதி ஸ்டாலினும் அருகருகே அமர்ந்தபடி, சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டனர். ‘அமைச்சர் பணியெல்லாம் எப்படிப் போகிறது?’ என கனிமொழி விசாரிக்க, ஆர்வமாக பதில் சொன்னார் உதயநிதி. கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வந்தபோது, நிர்வாகி ஒருவர் ஒரு புகார்க் கடிதத்தை அவரிடம் அளிக்க முயன்றார். சடாரெனக் கோபப்பட்ட துரைமுருகன், ‘இதெல்லாம் என்கிட்ட கொடுக்கக் கூடாது’ என அனல் கக்கவும், அருகிலிருந்த ஜெகத்ரட்சகன் அந்தக் கடிதத்தை வாங்கிக்கொண்டார்.