
பட்டியலின, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் இந்த 10% இட ஒதுக்கீட்டையும் ஒன்றாகப் பார்ப்பது சமூகநீதிப் பார்வையே கிடையாது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, தமிழ்நாட்டில் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேரக் கிளம்பியிருக்கின்றன. தி.மு.க., அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலேயே இது குறித்த மாறுபட்ட கருத்துகளும் விவாதங்களும் உருவாகியிருக்கின்றன. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதைக் கேட்டறிந்தோம்.
காங்கிரஸ் Vs தி.மு.க

செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்.
``பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இந்த இட ஒதுக்கீட்டை முதன்முதலில் கொண்டுவந்ததே காங்கிரஸ் பேரியக்கம்தான். எல்லாச் சமூகத்திலும் ஏழைகள் இருக்கிறார்கள். எல்லாச் சமூகத்திலும் அனைவரும் படித்தவர்கள், முன்னேறியவர்கள் கிடையாது. அப்படி, இட ஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தில் வறுமையில் இருப்பவர்களை ஒதுக்க முடியாது என்கிற காரணத்தால்தான், அன்னை சோனியா காந்தி வழிகாட்டுதலில், டாக்டர் மன்மோகன்சிங் அரசாங்கம் இந்த இட ஒதுக்கீட்டுக்கு அடித்தளமிட்டது. பா.ஜ.க., சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் அதை ஆதரித்தன. தற்போது உச்ச நீதிமன்றத்திலும் அதற்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்திருக்கிறது. உ.பி-யில் 25% பிராமணர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பத்து சதவிகிதம் கிடைக்கப்போகிறது. ஆனால், தமிழகத்தில் அவர்கள் ஐந்து சதவிகிதம்கூட இருக்க மாட்டார்கள். அதிலும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்குத்தான் கொடுக்கப்போகிறார்கள். இதை அரசியலாக்குவது சரியல்ல. அவர்களும் இந்தியப் பிரஜைகள், அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கைகொண்டவர்கள்தான். அவர்களிடம் எந்த பேதமும் பார்க்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.’’

பரந்தாமன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க
``தமிழகத்தில் EWS பிரிவில் வருபவர்கள் குறைவான சதவிகிதம்தான் இருக்கிறார்கள் என்று இந்த விஷயத்தை எளிதாகப் புறந்தள்ள முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவையும்தான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பொருளாதாரரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்துக்கே முரணானது. தவிர, பொருளாதாரம் என்பது காலத்துக்குக் காலம் மாறக்கூடியது, அதைவைத்து இட ஒதுக்கீட்டை அளவிடுவது சரியான முறையல்ல. இந்திய குடிமக்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்றுதான் அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்காகப் பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்களையும், இப்போது பொருளாதாரத்தில் கொஞ்சம் பின்தங்கியிருப்பவர்களையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்க முடியாது. இட ஒதுக்கீடு ஒன்றும் வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. அண்ணல் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்துக்குக் கொண்டுவந்தபோதே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்தான். காங்கிரஸில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் ஊறிய மேட்டுக்குடித் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மனப்பான்மை அப்படித்தான் இருக்கும். ஆனால், இட ஒதுக்கீட்டின் தத்துவத்தை நேருவுக்குப் புரியவைத்தது தமிழ்நாடு. இப்போது காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ப.சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்டவர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள்தான், டெல்லி தலைமைக்கு இந்த விஷயங்களைப் புரியவைக்க வேண்டும்.’’
சி.பி.எம் Vs வி.சி.க

கே.பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர், சி.பி.எம்
``சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று அகில இந்திய அளவில் தொடர்ந்து போராடிவருகிறோம். அதேபோல, முன்னேறிய சாதியிலும் பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டையும் ஆதரிக்கிறோம். முன்னேறிய சாதியில் இருக்கும் ஏழைகளுக்குக் குறிப்பிட்ட சதவிகித அளவு இட ஒதுக்கீடு வழங்கலாம் என, 1958-ல் கேரளாவில் இ.எம்.எஸ் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே நாங்கள் வலியுறுத்திவருகிறோம். எங்களைப் பொறுத்தவரை, ‘சாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறைகளைப்போல வர்க்க அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் கவனிக்க வேண்டும்; ஏழைகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்’ என்பதே எங்கள் நிலைப்பாடு. இது எங்கள் கட்சியின் அஜண்டாவில் இருக்கும் விஷயம். தற்போது இந்த வழக்கில் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்திருக்கும் நீதிபதிகள்கூட, `பொருளாதாரரீதியான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு முரணானது’ என்று சொல்லவில்லை. இந்தியாவில், தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் அமலுக்கு வந்துவிட்ட ஒரு விஷயம்தான். இதனால், 69% இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். அதனால், இது அடிப்படையில் சமூகநீதிக்கு விரோதமானது இல்லை. நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்திலேயே இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.’’

வன்னி அரசு, துணைப் பொதுச் செயலாளர், வி.சி.க
``பட்டியலின, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் இந்த 10% இட ஒதுக்கீட்டையும் ஒன்றாகப் பார்ப்பது சமூகநீதிப் பார்வையே கிடையாது. ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்றால் அனைத்துச் சாதிகளிலும் உள்ள ஏழைகளைக் கணக்கெடுத்து, அவர்களுக்கென்று தனியாக இட ஒதுக்கீடு கொடுத்தால் அது சரியான வழிமுறை. ஆனால், முன்னேறிய சாதிகளிலுள்ள ஏழைகளுக்கு மட்டும் 10% என்றால் இதை எப்படிப் பொருளாதாரரீதியான இட ஒதுக்கீடாகப் பார்க்க முடியும்... சமூகரீதியாகப் பின்தங்கியவர்களை முன்னேற்றுவதுதான் இட ஒதுக்கீட்டின் அடிப்படை. ஏழைகளே இல்லாமல் செய்வது என்பது வறுமை ஒழிப்புத் திட்டம். அதற்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இந்தச் சமூகத்தில் உயர் சாதியினரும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதில்லை. உயர்சாதியிலுள்ள ஏழையும், ஒடுக்கப்பட்ட சாதியிலுள்ள ஏழையும் ஒரே மாதிரியாகப் பார்க்கப்படுவதில்லை. சாதிரீதியிலான இழிவு நீங்க வேண்டும் என்பதுதான் இட ஒதுக்கீட்டின் அடிப்படை. இதைப் புரிந்துகொண்ட யாரும் இதற்கு ஆதரவாகப் பேச மாட்டார்கள். இடதுசாரிகள், தலித்துகளுக்காகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் களத்தில் நிற்பவர்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் மீதான நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை காலப்போக்கில் மாற்றிக்கொண்ட இடதுசாரிகள் இந்த விஷயத்திலும் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கை.’’
பா.ஜ.க Vs அ.தி.மு.க

நாராயணன் திருப்பதி, துணைத்தலைவர், பா.ஜ.க
``இந்த இட ஒதுக்கீடு என்பது உயர் சாதியினருக்காக என்று சொல்லப்படுவதே தவறு. பொதுப்பட்டியலிலுள்ள இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அடங்குவார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 70 சாதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பொதுப்பட்டியலில் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினரில் பொருளாதாரரீதியாக நலிந்தவர்களை முன்னேற்றுவதற்காகத்தான் இது கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் விரோதமானது அல்ல என தெளிவாகக் கூறியிருக்கிறது. இது எந்தவிதத்திலும் ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டுக்குக் குந்தகம் விளைவிக்காது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சமூகம் பொருளாதாரரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. கல்வியில் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே வேலை கிடைத்து, பொருளாதாரரீதியாக முன்னேற்றம் அடைய முடியும். சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் இந்தப் பட்டியலில் இல்லை என்கிற ஒரே காரணத்துக்காக, குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி பெறாமல் இருப்பதும், வேலைவாய்ப்பை இழப்பதும் எந்தவகையில் நியாயமாகும்... சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான நீதியாக இருக்க வேண்டும்.’’

வைகைச்செல்வன், செய்தித் தொடர்புச் செயலாளர், அ.தி.மு.க
``சமூகநீதிக் கொள்கை என்பது, ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, அடித்தட்டில் இருக்கிற சமூகங்களுக்குச் சில உரிமைகளை வழங்கி, அவர்களை மேல்தட்டுக்கு அழைத்துவருவதுதான். கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்ட, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகத்தான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இந்தப் பிரிவுகளில் இப்போதுதான் முதல் தலைமுறை பட்டதாரிகளே உருவாகியிருக்கிறார்கள். மண்டல் நீதியரசர், `தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பொருளாதாரரீதியாக எவ்வளவு முன்னேறியிருந்தாலும் ஒட்டுமொத்தச் சமூகம் அவர்களை மதிப்பதில்லை. அதேவேளையில், கல்வியில், வேலைவாய்ப்பில் உயர்ந்திருக்கும்போது சமூகம் மரியாதையளிக்கிறது’ என்கிறார். ஏற்கெனவே இருக்கிற அடையாளத்தை எடுத்துவிட்டு, புதிய அங்கீகாரத்தைத் தருகிற நோக்கம்தான் சமூகநீதிக் கொள்கை. பொருளாதாரரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கான இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு முறையால் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டு முறைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள். ஆனால், இது நடைமுறைக்கு வந்தால் இதற்கான முக்கியத்துவம் அதிகரித்து பழைய சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையே இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது. 8 லட்ச ரூபாயை வருமான வரம்பாக வைக்கிறார்கள். எனில், மாதம் சராசரியாக 65 ஆயிரம் ரூபாய் வருகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகளாக, பத்தாயிரம் ரூபாய் வருமானம்கூட இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளும் முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் சமூகநீதி!’’
