கடந்த புதன்கிழமை வெளியான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கபட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட 57 சதவீதம் அதிகம் ஆகும்.
2023-24 மத்திய பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு என்று அறிவித்தார்.

Also Read
இந்நிலையில் நேற்று காணொளி காட்சி மூலம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "2023-24 மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வேக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-14 மத்திய பட்ஜெட்டின்போது, தமிழக ரயில்வேக்கு வெறும் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தாண்டு பட்ஜெட் ஒதுக்கீடு 2009-14 ஒதுக்கீட்டை விட 7 மடங்கு அதிகம் ஆகும்.
அடுத்த 3-4 ஆண்டுகளில் அனைத்து பழைய ரயில் பெட்டிகளையும் நீக்கி, புதிய ரயில் பெட்டிகளை மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு 253 பழைய ரயில் பெட்டிகளை புதியதாக மாற்றும் திட்டம் உள்ளது.
மேலும் ரயில்வே திட்டப்பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு இப்போதுபோல தொடர்ந்து முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

2022-23 மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே துறைக்கு ரூ.3,865 கோடி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழக ரயில்வே துறைக்கு அறிவித்த ஓதுக்கீட்டிலேயே இந்த ஆண்டு ஒதுக்கீடுதான் மிகப்பெரிய தொகை ஆகும்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்னக ரயில்வே துறைக்கு இந்த மத்திய பட்ஜெட்டில் ரூ.11,313 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2022-23 மத்திய பட்ஜெட்டை ஒதுக்கீட்டைவிட 59% அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.