அலசல்
Published:Updated:

பாழடைந்த கட்டுமானங்கள்... வீணாகப்போனதா ரூ.2,730 கோடி... காலியாகக் கிடக்கும் 21,000 வீடுகள்!

குடிசை மாற்று வாரியம்
பிரீமியம் ஸ்டோரி
News
குடிசை மாற்று வாரியம்

நகர்ப்புறங்களில் வீடு இல்லாத குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு கட்டித்தருவதுதான் மேற்கண்ட துறையின் நோக்கம்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 2017-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் 224 பகுதிகளில் சுமார் 86,000 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் 11,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுவருகின்றன. அவற்றில் 21,000 வீடுகள் பயனாளிகள் யாரும் குடிபோகாமல், காலியாகக் கிடக்கின்றன. ஒரு வீடு கட்ட சராசரியாக 13 லட்சம் ரூபாய் செலவாகும் நிலையில் இதன் மூலம் சுமார் 2,730 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் வீணாகிக்கொண்டிருக்கின்றன.

சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (குடிசை மாற்று வாரியத்தின் புதிய பெயர்) சார்பில் ‘கடந்த ஆட்சியில் எத்தனை ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன?’ என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் ‘21,000 வீடுகளில் பயனாளிகள் யாரும் குடியேறவில்லை; வீணாகக் கிடக்கின்றன’ என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்திருக்கிறது.

பாழடைந்த கட்டுமானங்கள்... வீணாகப்போனதா ரூ.2,730 கோடி... காலியாகக் கிடக்கும் 21,000 வீடுகள்!

நகர்ப்புறங்களில் வீடு இல்லாத குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு கட்டித்தருவதுதான் மேற்கண்ட துறையின் நோக்கம். ஆனால், அப்புறப்படுத்தும் குடிசைவாசிகளை குடியமர்த்துவதற்காக நகர்ப்புறங்களைவிட்டு பல கி.மீ தொலைவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டியிருக்கிறார்கள். பல இடங்களில் அவை தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதால், சுவர்ப் பூச்சுகள் உதிர்ந்து விழுகின்றன. கட்டுமானங்களில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்தக் குடியிருப்புகளுக்கு மக்கள் குடிபோகவே தயங்குகிறார்கள். தவிர, பயனாளிகள் தங்களது பங்குத்தொகையாக ஒன்றரை லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும் என்பதும் பயனாளிகளின் தயக்கத்துக்கு மற்றொரு காரணம். இதனால், வறுமையில் வாடும் பலருக்கு வீடு ஒதுக்கீடு கிடைத்தும், பங்குத்தொகை கட்ட முடியாததால் குடிபோகாமல் இருக்கிறார்கள். இத்தகைய காரணங்களாலேயே, சுமார் 21,000 வீடுகள் தமிழகம் முழுக்கக் காலியாகக் கிடக்கின்றன.

தமிழகம் முழுக்க நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துறையின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளின் நிலை எப்படி இருக்கிறது?

* மதுரை மாநகரத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலிருக்கும் ராஜாகூர் ஏரியாவில் 2013-ம் ஆண்டு 1,566 வீடுகள் கட்டப்பட்டன. சமீபத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்தக் குடியிருப்பை ஆய்வுசெய்தபோது கட்டடத்தின் பல பகுதிகளிலும் அரச மரங்கள், ஆல மரங்கள் வேர்விட்டிருந்தன. பாம்புகளுக்கும் பஞ்சமில்லை என்கிறார்கள். பயனாளிகளுக்கு முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டும், பெரும்பாலானவர்கள் குடிபோகவில்லை. இந்த வீடுகளே போணியாகாத நிலையில், அதே ஏரியாவில் இரண்டாம் கட்டமாக 1,088 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இங்கும் யாரும் குடிபோகவில்லை.

பாழடைந்த கட்டுமானங்கள்... வீணாகப்போனதா ரூ.2,730 கோடி... காலியாகக் கிடக்கும் 21,000 வீடுகள்!

* கோவை வின்சென்ட் ரோட்டில் 12 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் 220 வீடுகளுக்குப் பயனாளிகளைத் தேர்வு செய்து முடிக்கவில்லை. தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கும் இடையே கடந்த எட்டு ஆண்டுகளாக கடிதப் போக்குவரத்து நடக்கிறது. இது முடிந்த பிறகுதான் பயனாளிகளிடம் வீடுகளைத் தர முடியும். 12 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் பாழடைந்துவருகின்றன கட்டடங்கள்.

* வடசென்னை ஆர்.கே.நகரில் ஓர் ஆண்டுக்கு முன்பு 1,044 வீடுகள் கட்டப்பட்டன. பொதுவாக, 550 வீடுகளுக்கு மேல் கட்டினால், சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், இந்தக் குடியிருப்புகளைக் கட்டிய ஒப்பந்ததாரர் சுற்றுச்சூழல்துறையின் அனுமதியைப் பெறாததால் குடிநீர், மின் இணைப்புகள் கிடைக்கவில்லை. அதனால், பயனாளிகள் குடிபோக முடியவில்லை.

* காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கதிர்பூர் பகுதியில் 2,112 குடியிருப்புகள் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை. கட்டுமானத்தில் கோளாறு என்று லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. வீடுகள் ஜன்னல்கள் உடைந்தும், கதவுகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன.

* திருப்பூர் மாவட்டம், அறிவொளி நகரில் 288 வீடுகள் கட்டப்பட்டு, நான்கு வருடங்களாகக் காலியாகக் கிடக்கின்றன. பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் என்று கூறப்படுகிறது. இந்தக் குடியிருப்பும் நாளுக்கு நாள் பழுதடைந்துவருகிறது.

* பெரம்பலூரில் 504 வீடுகள் கட்டப்பட்டு ஓராண்டாகியும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக இந்தக் குடியிருப்பு தற்காலிக கொரோனா மையமாக மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போதுதான் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கட்டடத்தில் ஆங்காங்கே மேற்பூச்சு உதிர்ந்திருக்கிறது; மாடிப்படிகள் உடைந்துகிடக்கின்றன.

பாழடைந்த கட்டுமானங்கள்... வீணாகப்போனதா ரூ.2,730 கோடி... காலியாகக் கிடக்கும் 21,000 வீடுகள்!

மேற்கண்டவை சில உதாரணங்கள் மட்டுமே... பயன்பாடு இல்லாமல் பாழடைந்துவரும் கட்டடங்கள் ஏராளம். இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய தி.மு.க அரசு என்ன நடவடிக்கை எடுத்துவருகிறது என்று அதிகாரிகளிடம் பேசினோம்.

“கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் இரு துறைகளுமே தமிழகம் முழுவதும் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் தரம் பற்றி நிபுணர் குழுவினர் சோதனை நடத்திவருகிறார்கள். ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நிறுவனங்களே அதிக எண்ணிக்கையில் ஒப்பந்தங்களை எடுத்து வீடுகளைக் கட்டியிருக்கின்றன. மோசமான கட்டடங்களைக் கட்டிய ஒப்பந்ததாரர்கள், அவற்றைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள் பட்டியல் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் சேகரிக்கப்பட்டுவருகின்றன.

குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்த ‘ராஜா’வான அதிகாரி ஒருவர் கடந்த ஆட்சியில் அதிகார மட்டத்தில் கொடிகட்டிப் பறந்தார். வருமானத்துக்கு அதிகமாக இவர் சேர்த்த பணத்தை மருத்துவத்துறை நிறுவனத்திலும், கோவையிலுள்ள இரண்டு ஷாப்பிங் மால்களிலும் பினாமி பெயரில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் போயிருக்கிறது. பதவியிலிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார்களா என்றும் விசாரிக்கப்படுகிறது’’ என்றார்கள்.

மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வுதான் என்ன, காலியாகக் கிடக்கும் வீடுகள் என்னவாகும்? என்று அமைச்சர் தா.மோ.அன்பரசனைச் சந்தித்துக் கேட்டோம்... ‘‘புளியந்தோப்பில் கட்டப்பட்ட தரமற்ற குடியிருப்பு விவகாரத்தைத் தொடர்ந்து கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் இரண்டு வாரியங்கள் சார்பிலும் கட்டப்பட்ட அனைத்துக் குடியிருப்புகளையும் ஆய்வு செய்துவருகிறோம். வாரியத்தின் முன்னாள் அமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் ஊருக்கு வெளியே மலைமேட்டில் குடியிருப்பைக் கட்டியிருக்கிறார்கள். அங்கே பயனாளிகள் எப்படிச் செல்வார்கள்? இன்னும் சில ஊர்களில் பஸ் போகாத இடங்களில் குடியிருப்பைக் கட்டியிருக்கிறார்கள். யாரோ சிலர் பலன் அடைவதற்காக, பல இடங்களில் பயனாளிகளையே தேர்வு செய்யாமல், அநாவசியமாகக் குடியிருப்புகளைக் கட்டியிருக்கிறார்கள்.

பாழடைந்த கட்டுமானங்கள்... வீணாகப்போனதா ரூ.2,730 கோடி... காலியாகக் கிடக்கும் 21,000 வீடுகள்!
பாழடைந்த கட்டுமானங்கள்... வீணாகப்போனதா ரூ.2,730 கோடி... காலியாகக் கிடக்கும் 21,000 வீடுகள்!

2017-ல் ‘டர்ன் கீ’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கான வடிவமைப்பு மற்றும் திட்ட மதிப்பீட்டை ஒப்பந்ததாரர்களே தயாரித்து குடியிருப்பைக் கட்டியிருக்கிறார்கள். இப்படிக் கட்டப்பட்ட வீடுகளில்தான் அதிக அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் 37 ஊர்களில், 30,930 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தி.மு.க அரசு பதவியேற்றதும் அந்தத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டோம். தரமற்ற கட்டடங்கள் மீதான ஆய்வு முடிவுகள் விரைவில் வரவிருக்கின்றன. அதன் முடிவுகளைப் பொறுத்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம், தற்போதுள்ள கட்டடங்களின் குறைபாடுகளைச் சரிசெய்து பயனாளிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். பயனாளிகளுக்கான பங்குத்தொகையை கட்ட வங்கிக்கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், விரைவில் அனைத்து வீடுகளும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.

பாழடைந்த கட்டுமானங்கள்... வீணாகப்போனதா ரூ.2,730 கோடி... காலியாகக் கிடக்கும் 21,000 வீடுகள்!

சாமானியர்களின் வாழ்நாள் கனவே சொந்த வீடுதான். தங்குவதற்குச் சிறு குடிசைகூட இல்லாமல் ரோட்டோரங்களிலும் பிளாட்பாரங்களிலும் வாழ்வைக் கடத்துபவர்கள் ஏராளம். அப்படியான தேசத்தில் 21,000 வீடுகள் கேட்பாரற்று வீணாகக் கிடப்பதெல்லாம் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம்!