பற்றாக்குறை... பணிச்சுமை... பராமரிப்பின்மை... புலம்பித் தவிக்கும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்!

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஓய்வுபெற்ற காலிப்பணியிடங்களுக்கு, புதிதாக பணிநியமனங்கள் செய்யப்படவில்லை. அதனாலேயே பல்வேறு வழித்தடங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன
`கடந்த ஐந்து ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை; பணிச்சுமை அதிகரித்திருக்கிறது. விடுமுறைகூட எடுக்க முடியாமல் ஓவர்டைம் செய்கிறோம். ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் என எதுவும் முறையாகக் கிடைக்கவில்லை. பல்வேறு நெருக்கடிகளால் மாரடைப்பு ஏற்பட்டு பணியாளர்கள் மரணமடையும் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது’ எனப் பொரிந்து தள்ளுகிறார்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள். உண்மை நிலவரத்தை அறிய போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கத் தலைவர்களுடன் பேசினோம்...

`எல்லாமே பற்றாக்குறைதான்!’
``தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 1,20,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். மொத்தம் 19,290 பேருந்துகள் இயங்குகின்றன. அவற்றில், ஒரு பேருந்தை ரெகுலராக இயக்க வேண்டுமென்றால், இரண்டு ஓட்டுநர்கள், இரண்டு நடத்துனர்கள் மற்றும் விடுப்பு காலத்தில் அவர்களை மாற்றிவிடுவதற்கு இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் சராசரியாக இருக்க வேண்டும். ஆனால், நிலைமை அப்படி இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ஓய்வுபெற்ற ஊழியர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழ்நாடு முழுக்க 10,000 ஓட்டுநர், நடத்துனர்களுக்குப் பற்றாக்குறை இருக்கிறது.
ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மட்டுமல்லாமல் அலுவலக ஊழியர்கள், டெக்னிக்கல் பொறியாளர்கள், பேருந்துப் பராமரிப்பு ஊழியர்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. இதை முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனே ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்கிறார் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி) பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம்.
பழைய பேருந்துகள்
“ஐ.ஆர்.டி (Institute of Road Transport) பரிந்துரைப்படி, ஒரு பேருந்தின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள், 3 மாதங்கள்தான். ஆனால், அரசு அதை ஒன்பது ஆண்டுகளாக மாற்றியது. எனினும், காலாவதி ஆன பிறகும் பல பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. மேலும், மோட்டார் வாகனச் சட்டப்படி, ஒரு நாளைக்கு 200-250 கி.மீ. வரைதான் ஒரு பேருந்து இயக்கப்பட வேண்டும். ஆனால், நாம் 400 கி.மீட்டருக்கு மேல் இயக்குகிறோம். இது நகரப்பேருந்து, தொலைதூரப் பேருந்து என்ற அளவில் இன்னும் மாறுபடும். பேருந்துகளுக்கு ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் நான்கு மணி நேரமாவது ஓய்வு நேரம் வழங்கப்பட வேண்டும். அப்படி ஓய்வு வழங்கப்படாத சூழலில் பேருந்தின் ஆயுட்காலம் குறைந்து, விரைவிலேயே பழுதாகிவிடுகிறது.
போதாக்குறைக்கு உதிரி பாகங்கள் பற்றாக்குறையும் இருக்கிறது. இதனால், மாதாந்தர பேருந்து பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளைச் சரிவர செய்ய முடியவில்லை. பிரேக் ஃபெயிலியர், ரிப்பேர் ஆகிய காரணங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நேர்கின்றன” என்கிறார் ஆர்.ஆறுமுகம்.
பணிச்சுமை - அதிகரிக்கும் உயிரிழப்பு!
போக்குவரத்து ஊழியர்களின் பணிச்சுமை குறித்து சி.ஐ.டி.யூ துணைத் தலைவரும், அரசுப் பேருந்து நடத்துனருமான மதியிடம் பேசியபோது, ``ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பற்றாக்குறையால், வார விடுமுறைகூட எடுக்க முடியாமல் ஓவர் டைம் பார்க்கவேண்டியிருக்கிறது. குடும்ப விழாக்கள் உட்பட எந்த முக்கியமான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடிவதில்லை. வார விடுமுறை நாள்களில் கூடுதல் பணி செய்தாலும் சாதாரண நாளுக்கான ஊதியம் தராமல், 3-ல் ஒரு பங்கு தொகையே வழங்குகிறார்கள். கேட்டால், ‘மினிமம் வேஜ்’ என்று சட்டத்தைச்சொல்லித் தப்பித்துக் கொள்கிறார்கள். தீபாவளி போனஸ்கூட 25 சதவிகிதம் கேட்டிருந்தோம். ஆனால், 10 சதவிகிதம்தான் வழங்கப்பட்டது. அதிலும், திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி 15,444 ரூபாய் வழங்குவதற்கு பதிலாக வெறும் 8,400 ரூபாயை அறிவித்து, எங்களை வஞ்சித்திருக்கிறது போக்குவரத்துத்துறை. இந்த மனவேதனைகளுடன் நீண்ட பணி நேரம் மற்றும் முறையான ஓய்வு இல்லாத காரணங்களால், ஊழியர்கள் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பணியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகிறார்கள்” என்றார் வேதனையுடன்.
தாரை வார்க்கப்பட்ட வழித்தடங்கள்!
மேலும், “கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 9-ம் தேதி நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், `அ.தி.மு.க ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் நிறைய வழித்தடங்களையும், முக்கியத்துவம் வாய்ந்த ரூட் டைமிங்கையும் தனியாருக்கு விட்டுக்கொடுத்துவிட்டது’ எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாட்டின் முக்கியமான பகுதிகளின் 250 பேருந்து வழித்தடங்கள், தனியார் ஆம்னி பேருந்துகளுக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகவே ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திண்டாடுகிறது. முன்பு, 95 லட்சம் கி.மீட்டருக்கு ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்துகள் தற்போது 84 லட்சம் கி.மீட்டராகக் குறைந்துவிட்டன. போக்குவரத்துக் கழகத்தின் பற்றாக்குறையைத் தவிர்த்து, வருமானம் ஈட்ட வேண்டுமெனில் முக்கியமான வழித்தடங்களையும் ரூட் டைமிங்கையும் மீட்டு, புதிய பேருந்துகளை இயக்க அரசு முன்வர வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார் மதி.

முற்றுப்புள்ளி வைக்கப்படும்
இந்தக் கோரிக்கை மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர், எஸ்.எஸ்.சிவசங்கரிடம் விளக்கம் கேட்டோம். ``கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஓய்வுபெற்ற காலிப்பணியிடங்களுக்கு, புதிதாக பணிநியமனங்கள் செய்யப்படவில்லை. அதனாலேயே பல்வேறு வழித்தடங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இப்போது ஓய்வுபெற்றவர்கள், காலிப்பணியிடங்களைக் கணக்கெடுத்து அதன் புள்ளிவிவரங்களை முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறோம். அதையடுத்து, முதல்வர் புதிய பணிநியமனங்களை மேற்கொள்ள எங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறார். விரைவில், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட காலிப்பணி யிடங்கள் நிரப்பப்பட்டு, நிறுத்தப்பட்ட வழித்தடங் களிலும் அரசுப் பேருந்துகளை இயக்குவோம். மேலும், தமிழ்நாடு முழுக்க, புதிதாக 1,771 பேருந்துகளை வாங்க முடிவுசெய்து, அதற்கான ஒப்பந்தப்புள்ளியையும் கோரியிருக்கிறோம். அடுத்தகட்டமாக, மின்சாரப் பேருந்துகளை வாங்கத் திட்டமிட்டிருக்கிறோம். விரைவில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றார்.
பார்க்கலாம்!