தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் கவனம் ஈர்க்கும் தமிழ்ப் பெண்கள்!

கொரோனா தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா தடுப்பூசி

சாதனை

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி என்ற ஒரு தீர்வுக்காக உலகமே காத்திருக்கிறது. கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்துகள் மற்றும் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்துகளுக்கான கண்டுபிடிப்பு முயற்சிகள் பல நாடுகளிலும் தீவிரமாக நடந்து வருகின்றன.

கொரோனாவைக் கட்டுப்படுத்தியதிலும் இறப்பு விகிதத்தைக் குறைத்ததிலும் உலக அளவில் கவனம் ஈர்த்திருக்கும் இந்தியா, தடுப்பூசி கண்டுபிடிப்பிலும் விரைவில் அப்படியொரு சாதனையை நிகழ்த்தவிருக்கிறது. இந்தியாவில், தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அது அமையும் நாள் தொலைவில் இல்லை. ஆம்... கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருக்கிறது எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறை. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தரான டாக்டர் சுதா சேஷய்யன் தலைமையிலான இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள முக்கியமான நபர் டாக்டர் புஷ்கலா. 22 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் இவர், இப்போது எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்புத் துறையின் தலைவராக உள்ளார். கொரோனாவை எதிர்க்கும் தடுப்பு மருந்து ஆராய்ச்சி குறித்து அவரிடம் பேசினோம்.

‘`கடந்த மார்ச் மாத இறுதியில் மருத்துவர் சுதா சேஷய்யன் தலைமையில் தடுப்பு மருந்து கண்டறியும் இந்த ஆராய்ச்சியைத் தொடங்கினோம். இந்த முயற்சியில் எங்களுடன் கைகோத்துள்ள மாணவர் டாக்டர் தம்மன் பஜந்த்ரி, சார்ஸ் வைரஸுக்கு எதிராகத் தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனுபவம் உள்ளவர்.

 சுதா சேஷய்யன், புஷ்கலா, தம்மன் பஜந்த்ரி
சுதா சேஷய்யன், புஷ்கலா, தம்மன் பஜந்த்ரி

கோவிட் 19-க்குக் காரணமான கொரோனா வைரஸின் ஜீனோமைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். அதைப் பெற்றதும் வைரஸை எதிர்க்கும் தடுப்பு மருந்தைக் கணடுபிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. பயோ இன்ஃபர்மேட்டிக்ஸைப் பயன்படுத்தி, பெப்டைட் சீக்வன்ஸ் எனும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினோம். இதைக்கொண்டு எங்களால் தடுப்பு மருந்துக்கான மாதிரியைச் செய்ய முடிந்தது. இது முதல் படிதான்.

`ரிவர்ஸ் வேக்ஸினாலஜி’ என்ற முறையில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம். இதே முறையில்தான் வேறு சில நுண்ணுயிர்த் தொற்றுகளுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கும் இதே முறையைச் செயல்படுத்த நினைத்தோம். நாங்கள் நினைத்ததுபோல இந்த முறை நல்ல ரிசல்ட்டைத் தந்திருக்கிறது

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

அடுத்து ப்ரீ க்ளினிக்கல் ஸ்டடி, மனிதர்களிடம் ஆராய்ச்சி என்று படிப்படியாக நகர வேண்டும். அதாவது... முதலில் திசுக்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின்னர் விலங்குகளிடம், கடைசியாக மனிதர்களிடம் சோதனை நடத்தப்படும். ஒவ்வொரு நிலையிலும் அறநெறிக் குழுவின் ஒப்புதல் பெற்று ஆராய்ச்சியைத் தொடர வேண்டும். தடுப்பு மருந்து முழுமையாகத் தயாராகி பயன்பாட்டுக்கு வர ஒரு வருடம் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்.

புதிய வகை வைரஸான கோவிட்-19 கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆராய்ச்சித்துறையில் உள்ள பெண்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முழு அர்ப்பணிப்பும், குடும்பத்தினரின் ஆதரவும் உள்ள பெண்களுக்கு ஆராய்ச்சித் துறைகளில் வெற்றி காத்திருக்கிறது’’ - பெண்ணால் முடியும் என்கிற நம்பிக்கையளித்து முடிக்கிறார் டாக்டர் புஷ்கலா.

வாழ்த்துகள்!