Published:Updated:

``யாரோ ப்ராங்க் பண்றாங்கன்னு நினைச்சேன்!" - முதல்வர் பாராட்டால் நெகிழ்ந்த பெண் டி.எஸ்.பி

டி.எஸ்.பி யாஸ்மின்
News
டி.எஸ்.பி யாஸ்மின்

`` `உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் மூலம் எங்களுக்குக் கிடைக்கப்பெற்ற 1,400 புகார்களில் 97 சதவிகிதப் புகார்கள், அதாவது 1,367 புகார்களுக்குத் தீர்வு கண்டுள்ளோம். இந்தத் தகவலை முதல்வர் அலுவலகத்தில் இருந்து போன் மூலமாக எனக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.’’

``யாரோ ப்ராங்க் பண்றாங்கன்னு நினைச்சேன்!" - முதல்வர் பாராட்டால் நெகிழ்ந்த பெண் டி.எஸ்.பி

`` `உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் மூலம் எங்களுக்குக் கிடைக்கப்பெற்ற 1,400 புகார்களில் 97 சதவிகிதப் புகார்கள், அதாவது 1,367 புகார்களுக்குத் தீர்வு கண்டுள்ளோம். இந்தத் தகவலை முதல்வர் அலுவலகத்தில் இருந்து போன் மூலமாக எனக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.’’

Published:Updated:
டி.எஸ்.பி யாஸ்மின்
News
டி.எஸ்.பி யாஸ்மின்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி மூலமாக, தமிழகம் முழுக்க பெற்றிருந்த மனுக்களுக்குத் தீர்வு காண `உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற சிறப்புத் துறையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் புகார்களை, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பித் தீர்வு கண்டு வருகின்றனர். அந்தவகையில், காவல்துறையினருக்கு அனுப்பப்பட்ட மனுக்களில் தமிழகத்திலேயே சிறப்பாகச் செயல்பட்டு  97 சதவிகித மனுக்களுக்குத் தீர்வு கண்டுள்ளதாக, திருச்சி மாவட்டம், முசிறி டி.எஸ்.பி யாஸ்மினை போனில் அழைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்து உற்சாகப்படுத்தியுள்ளார்

டி.எஸ்.பி யாஸ்மின் தலைமையில் பெண் காவலருக்கு நடந்த வளைகாப்பு
டி.எஸ்.பி யாஸ்மின் தலைமையில் பெண் காவலருக்கு நடந்த வளைகாப்பு

முதல்வர் பாராட்டு குறித்து முசிறி டி.எஸ்.பி யாஸ்மினிடம் பேசினோம். ``என்னுடைய முசிறி சரகத்திற்கு உட்பட்டு முசிறி, துறையூர், உப்பிலியபுரம், தொட்டியம், காட்டுப்புத்தூர், தா.பேட்டை என 10 காவல் நிலையங்கள் உள்ளன. `உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் மூலம் எங்களுக்குக் கிடைக்கப்பெற்ற 1400 புகார்களில் 97 சதவிகிதப் புகார்கள், அதாவது 1367 புகார்களுக்குத் தீர்வு கண்டுள்ளோம். இந்தத் தகவலை முதல்வர் அலுவலகத்தில் இருந்து போன் மூலமாக எனக்குத் தெரிவித்த அதிகாரிகள், `முதல்வர் உங்களிடம் பேசினாலும் பேசுவார்கள்!' என்றனர்.

முதலில், யாரோ நம்மை ப்ராங்க் செய்கிறார்கள் போல என்றே நான் நினைத்திருந்தேன். அடுத்த சில மணிநேரங்களில் முதல்வர் அலுவலகத்திலிருந்து ஃபோன் வந்தது. முதல்வரே என்னிடம் பேசினார். `உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறைக்கு வந்த 97 சதவிகிதப் புகார்களுக்குத் தீர்வு கண்டு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்' என்றார். முதல்வரே எனக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லியது, அவார்ட் வாங்கியதை விட பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் பதவியேற்ற நான்கு மாதங்களிலேயே முதல்வரிடமிருந்து இப்படியொரு பாராட்டு கிடைத்திருப்பது எனக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று தினமும் சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீஸாரிடம் ரிவ்யூ மீட்டிங் நடத்தியும், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள் ஆகியோர் சிறப்புக் கவனமெடுத்து செயல்பட்டதும்தான் இந்த பாராட்டை பெற்றுத் தந்திருக்கிறது" என்றார்.

டி.எஸ்.பி யாஸ்மின்
டி.எஸ்.பி யாஸ்மின்

32 வயதேயான டி.எஸ்.பி யாஸ்மின், 4 முறை டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தோல்வியடைந்த போதிலும், 5-வது முயற்சியில் வெற்றி பெற்று டி.எஸ்.பி ஆகியுள்ளார். 2022 ஜூலை மாதம் தான் முசிறி டி.எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். முசிறி சரகத்தின் முதல் பெண் டி.எஸ்.பியும் இவர் தான். இளம் வயதிலேயே டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற போதிலும், தன்னுடைய சரகத்தில் தனக்குக் கீழுள்ள இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள் என சீனியர்களை உரிய மரியாதையுடன் நடத்தி வருகிறார். அதேபோல, புகாரளிக்க வரும் பொதுமக்களை உட்கார வைத்து தன்மையாக அவர்களுடைய குறைகளைக் கேட்பது என, எளிமையானவராக வலம் வருகிறார். சமீபத்தில், முசிறி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணியாற்றி வரும் பெண் காவலரான மதுபாலா என்பவர் பிரசவ விடுப்பிற்குச் செல்லும் முன், ஸ்டேஷனில் வைத்து போலீஸார் முன்னிலையில் அவருக்கு டி.எஸ்.பி யாஸ்மின் வளைகாப்பு நடத்தி அசத்தினார். இப்படி முதல்வரில் தொடங்கி, உயரதிகாரிகள், சக போலீஸார், பொதுமக்கள் எனப் பலரும் பாராட்டும் டி.எஸ்.பியாக யாஸ்மின் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சிறப்பான பணி தொடரட்டும். வாழ்த்துகள் டி.எஸ்.பி மேடம்!