விலங்குகளின் மீது அதீத விருப்பம் கொண்ட பெரும்பாலான மக்கள் விலங்குகளை வளர்ப்பார்கள். அன்பு செய்வார்கள். அரிதாக சிலர், அந்த விலங்காகவே தங்களை பாவித்து, அதனைப் போலவே மாறத்தொடங்குவர். இவர்களை `தெரியன்ஸ்’ (Therians) என்று அழைக்கின்றனர். தங்களை மனிதர்களாக அல்லாமல் விலங்காக இவர்கள் பாவித்துக்கொள்வர்.

அப்படி தன்னை டிராகன் எனப் பாவித்துக் கொண்ட டியாமட் இவா மெடூஸா என்ற திருநங்கை, பெரிய தொகையைச் செலவு செய்து அதற்காக தன்னுடைய உருவத்தை மாற்றி வருகிறார். இதற்காக தன்னுடைய காதுகளையும், மூக்கினையும் அகற்றி, கண்ணிற்குப் பச்சை நிற சாயமும், உடல் முழுதும் பச்சை குத்திக்கொண்டும் தன் தோற்றத்தை மாற்றியுள்ளார். ஊர்வன உயிரினங்களுக்கு இருப்பதைப் போல தன்னுடைய நாக்கை பிளவு படுத்த அதிக செலவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் ரிச்சர்ட் ஹெர்னாண்டஸாக பிறந்த இவர், சமூகத்தில் பல அடக்குமுறைகளையும், பாகுபாடுகளையும், பாலியல் துஷ்பிரயோகத்தையும் எதிர்கொண்ட பின், மனிதர்களோடு மனிதராக வாழ்வதில் விருப்பம் இழந்தார். பாம்புகளை தன் கனவில் கண்ட பின்னர், தன்னை பாதி மனிதராகவும், பாதி ஊர்வனவாகவும் நினைக்க ஆரம்பித்தார்.

ஒருபுறம் இவரின் உடலியல் மாற்றங்கள் விநோதமாகத் தெரிந்தாலும், சமூகம் தன் மீது செலுத்திய வன்முறையே தன்னை இந்நிலைக்குத் தள்ளியது என்கிறார்.
சமூக வலைதளத்தில் `டிராகன் லேடி மெடூஸா' என்ற பெயரில் ஆக்டிவ்வாக இருக்கிறார் மெடூஸா. 1990 முதல் 2016 வரை தன்னுடைய உடலில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவுகளாகவும் வெளியிட்டுள்ளார்.