அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய ராசா... கொந்தளிப்பில் டேன் டீ தொழிலாளர்கள்!

ஆ.ராசா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆ.ராசா

எங்கள் மக்கள் டேன் டீ நிர்வாகத்தில்கூட நல்ல பொறுப்பில் இல்லை. நானே டிரைவர் வேலைக்கு முயன்றேன். தேயிலை பறிக்கும் வேலை தருகிறோம் என்கிறார்கள்

‘‘இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த ‘டேன் டீ’ எஸ்டேட் தொழிலாளர்களின் வாரிசுகளில் பெரும்பாலானோர் நன்கு படித்து, கிளார்க், தாசில்தார், டெபுடி கலெக்டர், ஐ.ஏ.எஸ் என உயர்ந்து நல்ல நிலைக்குச் சென்றுவிட்டார்கள். இதனால், தோட்ட வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. அதனால், டேன் டீ நிறுவனத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது’’ - இது, சமீபத்தில் நீலகிரி எம்.பி ஆ.ராசா, செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதில்.

ஆ.ராசாவின் இந்த பதில்தான் தற்போது ‘டேன் டீ’ எஸ்டேட் தொழிலாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, எம்.பி-யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பந்தலூர் பகுதியில் போராட்டமும் நடத்தியிருக்கிறார்கள்.

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய ராசா... கொந்தளிப்பில் டேன் டீ தொழிலாளர்கள்!

இது குறித்து பாண்டியார் டேன் டீ குடியிருப்பைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் நம்மிடம் பேசுகையில், “தாயகம் திரும்பிய தமிழருக்காக இந்தத் தோட்டம் தொடங்கப்பட்டாலும், நாங்கள் இன்னும் கொத்தடிமைகள்தான். அட்டைப்பூச்சிக் கடியிலும், ஆனைக் காட்டிலும் 9 மணி நேரம், 355 ரூபாய் நாள் கூலிக்கு மாடாக உழைக்கிறோம். 424 ரூபாய் கூலி உயர்வு அறிவித்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. எங்களின் வாரிசுகள் படித்து, அரசாங்க உத்தியோகத்தில் இருப்பதாக எம்.பி சொல்கிறார். நானும் தி.மு.க-வைச் சேர்ந்தவன்தான். 2,500 தற்காலிக ஊழியர்களைக் கட்டாயமாக வேலை நீக்கம் செய்துவிட்டு ஆள் கிடைப்பதில்லை என்று பேசுவதெல்லாம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வேலை” என்றார்.

சிம்பு, முத்துக்குமார்
சிம்பு, முத்துக்குமார்

கொலப்பள்ளி டேன் டீ குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் சிம்பு, “எங்கள் மக்கள் டேன் டீ நிர்வாகத்தில்கூட நல்ல பொறுப்பில் இல்லை. நானே டிரைவர் வேலைக்கு முயன்றேன். தேயிலை பறிக்கும் வேலை தருகிறோம் என்கிறார்கள். ஊருக்கு ஒருவர், இரண்டு பேர் படித்து கொஞ்சம் நல்ல வேலைக்கு இப்போதுதான் போக ஆரம்பித்திருக்கிறார்கள். இன்பசேகர் என்ற ஒருவர் மட்டுமே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கிறார். மற்றபடி நிறைய இளைஞர்கள் படித்துவிட்டு, வேலை கிடைக்காமல் கூலி வேலைதான் செய்கிறார்கள்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்துக்குமார், “அன்றாடப் பிழைப்புக்கு வழியின்றி தவிக்கும் மக்கள் குறித்து தவறான தகவல்களைச் சொல்லியிருக்கிறார் ஆ.ராசா. அவர் கூறியது உண்மையென்றால், அதற்கான ஆதாரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்” எனக் கொந்தளித்தார்.

‘மாதம் மும்மாரி பொழிகிறதா...’ என்று கேட்ட ராஜாக்கள் காலமில்லை இது. மக்கள் கேள்வி கேட்கிறார்கள்!