அரசியல்
சமூகம்
Published:Updated:

மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை!

மயிலம்பாடி டாஸ்மாக் கடை
பிரீமியம் ஸ்டோரி
News
மயிலம்பாடி டாஸ்மாக் கடை

அமைச்சர் கே.சி.கருப்பணன் காரணமா?

“தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் இருந்த 110 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதற்குக் காரணமே எங்கள் கிராமம் சார்பில் தொடரப்பட்ட வழக்குதான். ஆனால், இன்றைக்கு எங்கள் கிராமத்திலேயே விவசாய நிலத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுவிட்டது” என்று வெடிக்கிறார்கள் ஈரோடு மாவட்டம் மயிலம்பாடி கிராம மக்கள்.

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம். ஈரோடு மாவட்டம், மயிலம்பாடி கிராமத்தில் போத்தநாயக்கன்புதூர் என்னும் இடத்தில் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. ‘இது விவசாய நிலம். எனவே, அந்த டாஸ்மாக் கடையை உடனே மூடவேண்டும்’ என்று அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊர்மக்கள் சார்பாக வழக்கும் தொடரப் பட்டது.

அமைச்சர் கே.சி.கருப்பணன்
அமைச்சர் கே.சி.கருப்பணன்

வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவசாய நிலங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போத்தநாயக்கன்புதூர் கடை உட்பட தமிழகத்தில் விவசாய நிலங்களில் அமைக்கப் பட்டிருந்த 110 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இது நடந்து ஒரு வருடம் கடந்த நிலையில், கடந்த ஜனவரி 27-ம் தேதி, மயிலம்பாடி கிராமத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை அதே இடத்தில் திறக்கப்பட்டிருக்கிறது.

இங்கு கடை வரப்போவதை அறிந்த பொதுமக்கள், ‘இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் மயிலம்பாடியிலேயே ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. எனவே, இங்கு கடை வேண்டாம்’ என்று அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன் ஆகியோரிடம் கோரிக்கை வைத்ததுடன், ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி-யிடமும் மனு அளித்துள்ளனர். அப்போது, ‘எங்களை மீறி டாஸ்மாக் கடை வராது’ என்று எஸ்.பி-யும் கலெக்டரும் உறுதியளித்துள்ளனர். இவ்வளவையும் மீறி கடை திறக்கப்பட்டிருப்பதுதான் மயிலம்பாடி மக்களின் கொந்தளிப்புக்குக் காரணம்.

மயிலம்பாடி டாஸ்மாக் கடை
மயிலம்பாடி டாஸ்மாக் கடை

இதுகுறித்து போத்தநாயக்கன்புதூரைச் சேர்ந்த சதீஷ்குமாரிடம் பேசினோம். ‘‘உயர் நீதிமன்றம், ‘விவசாய நிலங்களில் விதிகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை இல்லை’ என்று சமீபத்தில் ஒரு தீர்ப்பு அளித்தது. அதன் அடிப்படையிலேயே இந்த டாஸ்மாக் கடை திறக்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ‘நிலத்தினுடைய வகைப்பாட்டை மாற்றம் செய்து டாஸ்மாக் கடையைத் திறந்துகொள்ளலாம்’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இங்கு டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் நிலத்தினுடைய வகைப்பாடு தற்போது வரை மாற்றப்படவில்லை. தமிழ்நாடு மதுபான விற்பனை (மதுபானக் கடை மற்றும் மதுபானக் கூடம்) விதிகள் 2003, விதி-8, உட்பிரிவு 2-ல் ‘டாஸ்மாக் கடையின் அமைவிடமானது ‘பக்கா பில்டிங்’ ஆக இருக்க வேண்டும்; கூரையாக இருக்கக் கூடாது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த டாஸ்மாக் கடை சிமென்ட் ஷீட்டில்தான் அமைக்கப் பட்டுள்ளது. இப்படி ஏகப்பட்ட விதிமீறல்கள் இருக்கின்றன” என்றார்.

இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி அந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கான காரணம் என்ன? பின்னணி அறிந்த சிலரிடம் பேசினோம். ‘‘டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் இடம் சசிகலா என்பவருக்குச் சொந்தமானது. அவர் அமைச்சர் கருப்பணனின் ஆதரவாளர். அமைச்சரின் ஆதரவால்தான் அந்த மதுக்கடை அங்கு வந்துள்ளது. மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் கடைக்கு இடம் கொடுத்ததால், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சசிகலாவை மக்கள் தோற்கடித்துள்ளனர்” என்றனர்.

சதீஷ்குமார், நல்லசாமி, கதிரவன்
சதீஷ்குமார், நல்லசாமி, கதிரவன்

இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நல்லசாமி, “டாஸ்மாக் கடையைச் சுற்றிலும் கரும்புத்தோட்டங்களும் வாழைத்தோட்டங்களும் இருக்கின்றன. மது அருந்தியவர்கள் போதையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. டாஸ்மாக் கடைக்கு அருகே 240 பெண் உறுப்பினர்களைக்கொண்ட மகளிர் பால் சொசைட்டியும் பள்ளிக்கூடமும் இருக்கின்றன. சொசைட்டிக்குப் பால் கொண்டுசெல்லும் பெண்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் இந்தக் கடையைக் கடந்துதான் செல்ல வேண்டும். எனவே, இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும். இல்லை யென்றால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்றார்.

இதுதொடர்பாக ஈரோடு டாஸ்மாக் மேலாளர் இளங்கோவிடம் பேசினோம். ‘‘விதிகளுக்கு உட்பட்டுதான் அந்தப் பகுதியில் கடை திறக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எந்த எதிர்ப்பும் எழவில்லை. ஏதாவது பிரச்னை வந்தால் கடையை மூடிவிடுவோம்’’ என்றார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் பேசினோம். “காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் ‘எந்தப் பிரச்னையும் இருக்காது’ என்று அறிக்கை கொடுத்த பிறகே கடை திறக்கப் பட்டிருக்கும். இருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மீண்டும் அறிக்கை கேட்கிறேன். அந்தக் கடையால் மக்களுக்குப் பிரச்னை இருப்பதாகத் தெரியவந்தால் கடையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அமைச்சர் கருப்பணனிடம் விளக்கம் பெற அவரை பலமுறை தொடர்புகொண்டோம். ஒவ்வொரு முறையும் போனை எடுத்த அவரின் உதவியாளர், ‘‘அமைச்சர் மீட்டிங்ல இருக்கிறார்... நிகழ்ச்சியில் இருக்கிறார். பிறகு பேசுங்கள்’’ என்றே பதில் கூறினார். அமைச்சர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் அதை வெளியிட தயாராக இருக்கிறோம்.