அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

நகராட்சியா... நரக ஆட்சியா? - உச்சபட்ச வரிக்கொடுமையில் பொள்ளாச்சி, ராஜபாளையம்!

பொள்ளாச்சி நகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
பொள்ளாச்சி நகராட்சி

பொள்ளாச்சி, ராஜபாளையம் நகராட்சிகளில் நிலவும் இந்த மோசமான சொத்து வரி பிரச்னை ஏற்கெனவே கோட்டை வரையில் எடுத்துச் செல்லப்பட்டது.

தமிழ்நாட்டிலேயே சொத்து வரி உச்சத்தில் இருக்கும் நகராட்சிகளாக ராஜபாளையம், பொள்ளாச்சி நகராட்சிகள் திகழ்கின்றன. பெரிய மாநகராட்சிகளைவிட இந்த நகராட்சிகளில் சொத்து வரி அதிகம் இருப்பதாக, பொதுமக்களும் வியாபாரிகளும் கொந்தளிக்கின்றனர்.

இது குறித்து பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் சக்திவேல் கூறுகையில், “தமிழ்நாட்டிலேயே பொள்ளாச்சி, ராஜபாளையம் நகராட்சிகளில்தான் சொத்து வரி அதிகம். காரணம், 1998-ம் ஆண்டுக்கு முன்புவரை வாடகை அடிப்படையில்தான் சொத்து வரி வசூலிக்கப்பட்டுவந்தது. 1998-ம் ஆண்டிலிருந்துதான் சதுர அடி அடிப்படையில் சொத்து வரி வசூலிக்கும் முறை அமலானது. அதாவது குடியிருப்புப் பகுதிகளுக்கு அதிகபட்சம் 75%, முக்கியச் சாலைகளை இணைக்காத இதர சாலைகளில் 100%, முக்கியச் சாலைகளில் 200% என்ற அடிப்படையில் வரியை உயர்த்திக்கொள்ளலாம் என்று அப்போது அரசு பரிந்துரைத்தது. பொள்ளாச்சி உள்ளிட்ட இந்த நகராட்சிகளில் மட்டும், அரசு பரிந்துரைத்த அதிகபட்ச வரியை அப்படியே அமல்படுத்திவிட்டனர். ஆட்சிகள் பல மாறிவிட்டாலும், அந்தத் தவறு திருத்தப்படவே இல்லை. இந்த நிலையில் தற்போது, அரசு உத்தரவுப்படி மீண்டும் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.

நகராட்சியா... நரக ஆட்சியா? - உச்சபட்ச வரிக்கொடுமையில் பொள்ளாச்சி, ராஜபாளையம்!

இதனால்தான் சென்னை மாநகராட்சியைவிட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி அதிகமாக இருக்கிறது. இதே ஊரைச் சேர்ந்தவர்கள்தான் நகராட்சித் தலைவராகவும், கவுன்சிலர்களாகவும் வருகிறார்கள். அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும், தாங்கள் சம்பாதிக்கும் வழியைத்தான் பார்க்கிறார்கள். இந்தச் சூழலில் தற்போது ஆளும் அரசும் சொத்து வரி உயர்வை அறிவித்திருக்கிறது. பொள்ளாச்சி, ராஜபாளையம் நகராட்சிகளில் ஏற்கெனவே வரி அதிகமாக இருக்கிறது. எனவே, சென்னை மாநகராட்சிக்கு 2008-ம் ஆண்டு சொத்து வரி உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதுபோல, பொள்ளாச்சிக்கும் தற்போது உயர்த்தப்பட்ட வரியிலிருந்து விலக்கு அளித்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் பிற நகராட்சிகளுக்கு இணையாக, இந்த இரண்டு நகராட்சிகளிலும் சொத்து வரி சமமாகும் வரை, இந்த நகராட்சிகளுக்கு வரி உயர்விருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்றார்.

நகராட்சியா... நரக ஆட்சியா? - உச்சபட்ச வரிக்கொடுமையில் பொள்ளாச்சி, ராஜபாளையம்!

“பொள்ளாச்சி, ராஜபாளையம் நகராட்சிகளில் நிலவும் இந்த மோசமான சொத்து வரி பிரச்னை ஏற்கெனவே கோட்டை வரையில் எடுத்துச் செல்லப்பட்டது. ஆட்சி மாறிய பிறகு, இது குறித்து அமைச்சர் கே.என்.நேருவுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைச் செயலாளர் சிவதாஸ் மீனா டேபிளில் ஒப்புதலுக்காக ஃபைல் காத்திருக்கிறது. ஆட்சியாளர்கள் மனது வைத்தால்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்” என்கிறார்கள் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.

நகராட்சியா... நரக ஆட்சியா? - உச்சபட்ச வரிக்கொடுமையில் பொள்ளாச்சி, ராஜபாளையம்!

இது குறித்து ராஜபாளையம் நகர்மன்றத் தலைவர் பவித்ரா ஷாமிடம் பேசினோம். “ராஜபாளையம் நகராட்சியில் இருக்கும் அதிகபட்ச வரியைக் குறைப்பதற்கோ, வரி உயர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கோ எனக்கு முன்பாகப் பொறுப்பில் இருந்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. நாங்கள் பொறுப்புக்கு வந்ததும், வரியைக் குறைப்பதற்கு துறைரீதியாகக் கோரிக்கை வைத்திருக்கிறோம். இது தொடர்பாக அமைச்சர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறோம். விரைவில் உத்தரவு வரும் என எதிர்பார்க்கிறோம். அதுவரை தற்போதுள்ள வரிவிகிதத்தின்படி வசூல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயம் மக்களுக்கு நெருக்கடி தரக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறோம். வரிக்குறைப்புக்கான உத்தரவுகள் வந்தவுடன், ஏற்கெனவே வரி செலுத்தியவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

சக்திவேல்,  தாணுமூர்த்தி, பவித்ரா
சக்திவேல், தாணுமூர்த்தி, பவித்ரா

பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தியிடம் கேட்டோம். “இது நீண்டகாலமாக இருக்கும் பிரச்னை. வரியைக் குறைப்பதற்காக நகராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்குக் கருத்துரு அனுப்பியிருக்கிறோம். விரைவில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படும்” என்றார் சுருக்கமாக.