Published:Updated:

''5 நாள்கள் ரெய்டு நடந்தது ஏன்..?'' மெளனம் கலைத்த விவேக்..!

''5 நாள்கள் ரெய்டு நடந்தது ஏன்..?'' மெளனம் கலைத்த விவேக்..!
''5 நாள்கள் ரெய்டு நடந்தது ஏன்..?'' மெளனம் கலைத்த விவேக்..!

''5 நாள்கள் ரெய்டு நடந்தது ஏன்..?'' மெளனம் கலைத்த விவேக்..!

றுப்புப் பண ஒழிப்பு நாளான நவம்பர் 8-ம் தேதியை மத்தியில் ஆளும் பி.ஜே.பி., 'வெற்றி நாள்' என்று கொண்டாடியது. ஆனால், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'இது மிகப்பெரிய ஏமாற்று வேலை' என எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இந்தப் பரபரப்புகளுக்கு இடையே சசிகலா குடும்பத்தை வருமானவரித் துறை சுற்றி வளைத்தது. 

நவம்பர் 9-ம் தேதி அதிகாலை 6 மணிக்கு சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை என்று தமிழகம் மட்டுமல்லாது தெலுங்கானா, கர்நாடகம், பாண்டிச்சேரி, டெல்லி என்று மொத்தம் 5 மாநிலங்களில் 187 இடங்களில் 1,800-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினர். சசிகலா அண்ணன் ஜெயராமன் மகன் விவேக் நிர்வாகத்தில் சென்னையில் இருக்கும்  'ஜெயா டி.வி.', 'நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழ், ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றின்  அலுவலகங்கள், விவேக் வீடு, விவேக் சகோதரி கிருஷ்ணபிரியா வீடு, விவேக் மாமனார் பாஸ்கர் வீடு, விவேக் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் மிடாஸ் சாராயத் தொழிற்சாலை, கொடநாடு எஸ்டேட் போன்றவற்றிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதே நேரத்தில், நடராசன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன் என்று சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், ஊழியர்களின் வீடுகளும் அலுவலகங்களும் இந்தச் சோதனையில் சிக்கின. ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வருமானவரித் துறையின் ஒட்டுமொத்த பார்வையும் விவேக் குடும்பத்தின் மீதுதான் இருந்தது. தமிழகத்தில் ஐந்து நாள்களாக நடந்த சோதனையில் 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான கணக்கில் வராத, சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளன. இந்தச் சோதனையில் கிலோ கணக்கில் தங்க, வைர நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக வருமானவரித் துறை புலனாய்வு அதிகாரிகள் வட்டாரங்களில் விசாரித்தபோது, ''சசிகலா மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளில் சிக்கிய ஆவணங்களைக் கணக்கிடும் பணி நடந்துவருகிறது. பெயரளவுக்கு நிறுவனங்களைத் தொடங்கி அதன்மூலம் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியது; முதலீடு செய்தது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளோம். அதுகுறித்த, ஆவணங்களையும் கைப்பற்றி  இருக்கிறோம். வங்கி லாக்கர்கள் பட்டியல்களை எடுத்துள்ளோம். அதுபற்றி ஆய்வு செய்யப்படுகிறது. பினாமி சொத்துப் பரிவர்த்தனைகுறித்து ஆராயப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கைமாறி இருக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் போயஸ் தோட்டத்தில் அதிகாரத்தில் இருந்த ஒருவரின் பெயரில் இருந்த சொத்துகள், கம்பெனிகளில் அவர் வகித்த பொறுப்புகளையும் பிடுங்கி இருக்கிறார்கள். அந்தப் பொறுப்புகளில் மன்னார்குடி வகையறாக்களுக்கு வேண்டப்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள். மேலாளர் பெயர்களில் எல்லாம் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. அவருக்கு அந்த சொத்துகளை வாங்க அத்தனை கோடி பணம் எப்படி வந்தது... யார் கொடுத்தது? உண்மையிலேயே அந்தச் சொத்துகளின் உரிமையாளர் யார் என்றெல்லாம் விசாரித்துவருகிறோம். இதுபற்றி விரிவான அறிக்கை டெல்லி வருமானவரித் துறைக்கும் வரி ஏய்ப்பு, முறைகேடுகள் தொடர்பாக தொடர்புடைய பல்வேறு துறைகளுக்குத் தகவல் கொடுத்துள்ளோம். அமலாக்கத் துறை உள்பட பல துறைகள் உன்னிப்பாக இதைக் கவனித்துவருகின்றன'' என்றார்கள். 

ரெய்டு முடிந்த நிலையில் சென்னையில் விவேக் ஜெயராமன் இன்று நிருபர்களைச் சந்தித்தார். நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் நேரடியாக அவரே பேசினார். அப்போது, ''இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இன்டர்வியூ அல்ல. வருமானவரித் துறை சோதனையின்போது, நான் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் குறித்து விளக்கம் கேட்டனர். அதற்குப் பதில் சொன்னேன். திருமணத்தின்போது எனது மனைவிக்குப் போடப்பட்ட நகைகுறித்தும் விபரம் கேட்டனர். அதற்குப் பதில் சொல்லி இருக்கிறோம். ஓரிரு நாள்களிலோ அல்லது வாரத்திலோ அல்லது மாதத்திலோ மீண்டும் என்னை விசாரணைக்கு அழைக்கலாம். அப்போது செல்வேன். வருமானவரி சட்டத்துக்கு உட்பட்டு வரி கட்டவேண்டியது கடமை. அதை அமைச்சர்களோ அல்லது வேறு நபர்களோ என யார் செய்யவில்லை என்றாலும் தவறுதான். நான் முறையாகக் கணக்குக் காட்டி வரி கட்டுகிறேன். இந்தச் சோதனையில் விளக்கம் கேட்டுள்ளார்கள். அவ்வளவுதான். பதில் சொல்லி இருக்கிறேன். இனி எப்போது அழைத்தாலும் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

மெளனம் கலைத்துவிட்டார் விவேக். 5 நாள்கள் ரெய்டு நடத்திய வருமானவரித் துறை என்ன சொல்லப்போகிறது..?

அடுத்த கட்டுரைக்கு