
புதுச்சேரியில் சிக்கிய 124 தொழிலதிபர்கள்; வருமான வரித்துறை அதிரடி
புதுச்சேரி மாநிலத்தில் வரி ஏய்ப்பு செய்துவரும் தொழிலதிபர்களை குறி வைத்து களத்தில் குதித்திருக்கிறது வருமான வரித்துறை. முதல்கட்டமாக புதுச்சேரி தொழிலதிபர் ஒருவரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் வர்த்தகம் செய்துவரும் நபர்கள் அனைவரும் முறையாக வருமானவரியை செலுத்துகிறார்களா என்று கடந்த சில மாதங்களாக ரகசியமாகக் கண்காணித்து வந்தது வருமான வரித்துறை. அதனடிப்படையில் வரி ஏய்ப்பு செய்பவர்களின் பட்டியலையும் தயார் செய்தது. இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபரான கிஷோர் நான்வானி என்பவர் 1 கோடியே 4 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானவரியைச் செலுத்தாமல் மறைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. வருமான வரித்துறை செய்த விசாரணையில் அந்தத் தொழிலதிபர் வரி ஏய்ப்பு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து வரி ஏய்ப்பு செய்த நான்வானிக்கு சொந்தமான நேரு வீதியில் உள்ள அவரது துணிக்கடை, வீடு உள்ளிட்டவைகளை அதிகாரிகள் அதிரடியாக ஜப்தி செய்ததோடு ஏல அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பின் நகலை அவரது கடை மற்றும் வீட்டிலும் ஒட்டியிருக்கின்றனர் அதிகாரிகள்.
"சிறிய மாநிலமான புதுச்சேரியில் வர்த்தகம் செய்து வருபவர்களில் 90% பேர் முறையாக வருமான வரியைச் செலுத்துவதில்லை. அதனால் கடந்த சில மாதங்களாக அவர்களை ரகசியமாகக் கண்காணித்து வந்தோம். இதுவரை வரி ஏய்ப்பு செய்தவர்களில் 174 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 50 பேர் மீது ஏற்கனவே இது தொடர்பான வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதனால் அவர்களை தவிர்த்து மீதமிருக்கும் 124 பேர் மீது நடவடிக்கை தொடங்கியிருக்கிறோம். அதில் தற்போது முதலாவதாக 1. கோடி வரி ஏய்ப்பு செய்தவரின் சொத்துக்களை வரும் மார்ச் மாதம் 26-ம் தேதி ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்கின்றனர் அதிகாரிகள். வருமான வரித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை புதுச்சேரி தொழிலதிபர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.