அலசல்
Published:Updated:

ஜி.எஸ்.டி-யால் திணறும் திருப்பூர்! - தெருவுக்கு வந்த தொழிலதிபர்கள்

ஜி.எஸ்.டி-யால் திணறும் திருப்பூர்! - தெருவுக்கு வந்த தொழிலதிபர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.எஸ்.டி-யால் திணறும் திருப்பூர்! - தெருவுக்கு வந்த தொழிலதிபர்கள்

ஜி.எஸ்.டி-யால் திணறும் திருப்பூர்! - தெருவுக்கு வந்த தொழிலதிபர்கள்

‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் 2017 ஜூலை முதல் தேதி அறிமுகம் செய்யப்பட்டது ஜி.எஸ்.டி. நாடாளுமன்றத்தை 2017 ஜூன் 30-ம் தேதி நள்ளிரவில் கூட்டி இந்தச் சட்டத்தை அறிமுகம் செய்தபோது பரவசமும் பெருமிதமும் அடைந்தது மத்திய அரசு. ‘‘பல்வேறு பெயர்களில் மத்திய, மாநில அரசுகள் விதித்திருந்த பல்வேறு வரிகளை ஒழித்துக்கட்டிவிட்டு ஒரே வரியை அமல் செய்ததால், பல பொருட்களின் விலை குறையும்’’ என்று அறிவித்தது மத்திய அரசு.

ஜி.எஸ்.டி அமலான ஓராண்டுக்குப் பிறகு ‘விலைவாசி பெருமளவு குறைந்திருக்கிறது. ஜி.எஸ்.டி வெற்றி பெற்றுள்ளது’ எனப் பெருமிதப்படுகிறது மத்திய அரசு. ஆனால், ‘உற்பத்தித் துறையை முடக்கிப்போட்டதுதான் ஜி.எஸ்.டி-யின் சாதனை. சிறிய தொழில் நிறுவனங்கள் பலவும் இதனால் மூடப்பட்டு விட்டன. தட்டுத்தடுமாறி இயங்குபவையும் எந்த லாபத்தையும் பார்க்கவில்லை. பெருநிறுவனங்கள் சமாளித்துக்கொண்டிருக்கின்றன’ என்பதுதான் தொழில்துறையின் கருத்தாக இருக்கிறது. இதற்கு எளிமையான உதாரணம், திருப்பூர்.

ஏற்றுமதிக்காக ஜவுளி தயாரிப்புகளை எடுத்துக்கொண்டு வாகன நெரிசலுக்கிடையே வண்டிகள் ஓடிக்கொண்டிருந்த திருப்பூர், இன்று காற்றாடிக்கொண்டிருக்கிறது. வெளியூர்களி லிருந்து வெறுங்கையுடன் பஸ்ஸில் வந்திறங்கிய பலரையும் லட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர் களாகவும் உயர்த்திய பெருமை திருப்பூருக்கு உண்டு. ஏற்றுமதியில் உச்சம் தொட்டு, ‘டாலர் சிட்டி’ என்று பெயர் வாங்கிப் பின்னலாடைத் துறையில் பல சாதனைகளைப் படைத்தது திருப்பூர். நீண்டகாலமாக உலகப்புகழ்பெற்று விளங்கிவந்த திருப்பூர் நகரத்தை, ஒரே ஆண்டில் முடக்கிப்போட்டுவிட்டது ‘ஜி.எஸ்.டி’ என்ற மூன்றெழுத்து மந்திரம்.

ஜி.எஸ்.டி-யால் திணறும் திருப்பூர்! - தெருவுக்கு வந்த தொழிலதிபர்கள்

இது சுந்தர்ராஜனின் கதை...

“1989-ம் ஆண்டு, ஒரு பனியன் தொழிலாளியாக என் வாழ்க்கையைத் தொடங்கினேன். பல வருடங்கள் கடினமாக உழைத்ததன் பலனாக, 2005-ல் சொந்தமாக ஒரு பின்னலாடை நிறுவனம் ஆரம்பித்தேன். என்னிடம் சுமார் 100 தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். 2016-ல் மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை என் தொழிலில் மிகப்பெரிய அடியாக விழுந்தது. அதிலிருந்து முழுமையாக மீள்வதற்குள், மீண்டும் ஒரு தாக்குதலாக வந்தது ஜி.எஸ்.டி. அது என் தொழிலை மொத்தமாக முடக்கிப்போட்டுவிட்டது. ஜி.எஸ்.டி-க்குப் பிறகு, சில வியாபாரிகள் ஆர்டர்களைக் கணிசமாகக் குறைத்துவிட்டனர். சிலர், ஆர்டர் கொடுப்பதையே நிறுத்திவிட்டனர். இதனால், வருமானம் நின்றுபோனது. ஊழியர்களுக்கான சம்பளம், பில்டிங் வாடகை, வங்கிக் கடன் என எதையும் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. வேறு வழியின்றி 2018 மார்ச்சில் நிறுவனத்தை மூடிவிட்டேன். இப்போது, குடும்பத்தைக் காப்பாற்றவும், வாங்கியுள்ள கடனுக்கு வட்டியைக் கட்டவும் பழையபடி பனியன் தொழிலாளியாக மாறிவிட்டேன்.”

இது ரத்தினசாமியின் கதை...

“கடந்த 25 வருடங்களாக, பின்னலாடை நிறுவனம் நடத்திவந்தேன். என்னிடம் சுமார் 60 ஊழியர்கள் பணியாற்றினர். வருடத்துக்குச் சுமார் ஒரு கோடி ரூபாய்வரை வணிகம் செய்தேன். ஜி.எஸ்.டி-க்குப் பிறகு எங்கள் தொழில் படுத்துவிட்டது. ஒருகட்டத்தில், உற்பத்தி விலையே கட்டுப்படியாகாமல் போனதால், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. நிலைமை விபரீதமடைவதற்குள் தொழிலை நிறுத்திவிட்டு, இப்போது நண்பருடன் சேர்ந்து துணிக்கடை வைத்துள்ளேன்.”

இவை சுந்தர்ராஜன், ரத்தினசாமி ஆகிய இருவரின் கதைகள் மட்டுமல்ல. திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் கொடிகட்டிப் பறந்த பலரின் கதையும் இதுதான். வாழ்க்கையின் அடி மட்டத்திலிருந்து தொடங்கி, பின்னலாடை நிறுவன முதலாளிகளாக உருவெடுத்த பலரும், இன்று தங்களின் தொழிலைத் தொலைத்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்துள்ளார்கள்.

ஜி.எஸ்.டி-யால் திணறும் திருப்பூர்! - தெருவுக்கு வந்த தொழிலதிபர்கள்

திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் (டீமா) சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம், “இதற்கு முன்பு சாயப்பட்டறை பிரச்னை, மின்சாரப் பிரச்னை என எத்தனையோ சிக்கல்களை திருப்பூர் தொழில்துறை சந்தித்தது. ஆனாலும், அவற்றிலிருந்து ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டுவந்தது. தற்போதைய பிரச்னை அப்படியல்ல. ஜி.எஸ்.டி-யால் ஒரே ஆண்டில் மிகப்பெரிய தொழில்முடக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னலாடை ஏற்றுமதிக்கு வழங்கப்படும் ‘டியூட்டி டிராபேக்’ எனும் ஊக்கத்தொகையை 7.5 சதவிகிதத்திலிருந்து இரண்டு சதவிகிதமாகக் குறைத்துவிட்டனர். ஜி.எஸ்.டி-யில் செலுத்தப்பட்ட வரித்தொகையை ஒரு வருட காலம் கடந்தும்கூட, இன்னமும் முழுமையாகத் திருப்பித் தரவில்லை. இவை ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய சிரமங்களைத் தந்துள்ளன. இதனால், பல நிறுவனங்கள் தொடர்ந்து தொழிலை நடத்த முடியவில்லை. கடந்த நிதியாண்டில், 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்ற திருப்பூர் பின்னலாடைத் துறையில், இந்த ஆண்டு சுமார் நான்காயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் சரிந்துள்ளது. திருப்பூர் வரலாற்றில் இதுவரை இல்லாத பின்னடைவு இது. இதை எப்படி சரிசெய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம்’’ என்றார் வேதனையுடன்.

‘‘ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கையில் எங்களது பின்னலாடைத் துறை சிறப்பான வளர்ச்சியை அடையும் என ஆரம்பத்தில் நம்பினோம். ஆனால், வெறும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு மட்டுமே அது சாதகமாக இருக்கும் என்பது பிறகுதான் தெரியவந்தது. பல கோடி ரூபாய் முதலீடு செய்யும் மிகப்பெரிய பின்னலாடை நிறுவனங்களுக்கும், சில லட்சங்கள் முதலீட்டில் நடக்கும் சிறு குறு நிறுவனங்களுக்கும் ஒரேமாதிரியான வரிவிதிப்பு என்பது எந்தவகையிலும் நியாயமானதல்ல. ஐந்து சதவிகிதம் நேரடியாகவும், மூலப்பொருள்கள் அனைத்துக்கும் சேர்த்து ஏழு சதவிகிதம் மறைமுகமாகவும் என மொத்தம் 12 சதவிகித ஜி.எஸ்.டி வரியை அரசுக்கு நாங்கள் செலுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால், சிறு நிறுவனங்கள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலத்தில் மிகப்பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்த ஒரு வருடத்தில் மட்டும் திருப்பூரில் சுமார் 30 சதவிகிதச் சிறிய பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் பலரும் வேலையாள்களாக மாறியிருக்கிறார்கள். சிலர், கடன்சுமை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். என் வியாபாரத்தையும் வாழ்வாதாரத்தையும் அடிப்படை யாகக்கொண்டு வரியை நிர்ணயிக்காமல், என்னிடம் இருப்பதை மொத்தமாகப் பிடுங்கிவிட்டு, என் தொழிலையும் அழித்துவிட்டதுதான் ஜி.எஸ்.டி-யின் மிகப்பெரிய வெற்றி. இதன் மூலம், கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு மட்டுமே உரித்தான தொழிலாக இந்தப் பின்னலாடைத் துறையை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது’’ என்கிறார் தென்னிந்திய சிறு குறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் (சிஸ்மா) சங்கத்தின் பொதுச்செயலாளர் பாபுஜி.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் (டீ) சங்கத் தலைவர் ராஜா சண்முகம், ‘‘நம் அண்டை நாடுகளான வங்க தேசம், இலங்கை, வியட்நாம், கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகள் சீனாவின் துணையுடன் பின்னலாடைத் துறையில் மாபெரும் வளர்ச்சியை அடைந்துவருகின்றன. இந்தப் போட்டியைச் சமாளிக்கவும் நம் தொழிலைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஆர்.ஓ.எஸ்.எல்., டியூட்டி டிராபேக் உள்ளிட்ட பல சலுகைகளை நம் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு அரசு அளித்துக்கொண்டிருந்தது. அவ்வாறு கிடைத்து வந்த ஊக்கத் தொகைகள் அனைத்தும், ஜி.எஸ்.டி-க்குப் பிறகு நிறுத்தப்பட்டுவிட்டன, இதனால், இந்தத் துறையும் நலிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஜி.எஸ்.டி-யால் திணறும் திருப்பூர்! - தெருவுக்கு வந்த தொழிலதிபர்கள்

பருத்தி நூல் விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், பின்னலாடை நிறுவனங்கள் ஏற்கெனவே பெற்ற ஆர்டர்களை ஒப்பந்த விலைக்குள் முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. இம்மாதிரியான சூழலால், பின்னலாடைத் துறையில் புதிதாக முதலீடுகள் செய்ய பலரும் தயங்குகிறார்கள். இத்துறையில் நிலவிவரும் பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வுகாணும்படி, மத்திய மாநில அரசுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நிலைமையைப் புரிந்துகொண்டு அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்காவிட்டால், லட்சக்கணக்கான தொழிலாளர் கள் வேலையிழக்கும் அபாயம் உருவாகும்’’ என்று எச்சரித்தார்.

ஜி.எஸ்.டி பெரிய நிறுவனங்களுக்கு லாபம் தந்ததா? சி.பி.சி ஃபேஷன்ஸ் நிறுவன அதிபர் விஜயகுமாரிடம் பேசினோம். ‘‘பெரிய நிறுவனம், சிறு நிறுவனம் என்று பிரித்துப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை. நான் வருடத்துக்கு 100 கோடி ரூபாய் வரை பிசினஸ் செய்கிறேன். ஜி.எஸ்.டி-க்குப் பிறகு டியூட்டி டிராபேக் சலுகை போய்விட்டதால், என்னாலும் இப்போது லாபம் ஈட்ட முடியவில்லை. வெளிநாட்டு வர்த்தகர் ஒருவர், 100 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யும் ஒரு பொருளை, இங்கே உற்பத்தி செய்வதற்கே 108 ரூபாய் தேவைப்படுகிறது. தெரிந்தே எட்டு ரூபாய் நஷ்டத்துக்குத்தான் தொழில் செய்ய வேண்டியிருக்கிறது. மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்திருப்பதாலும் இங்கு தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

‘புதிய இந்தியா’வை பற்றிப் பேசுபவர்கள், திருப்பூரின் நிலைமையைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பார்களா?

- தி.ஜெயபிரகாஷ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி