Published:Updated:

வணிகவரித்துறையில் இப்படியும் நடக்கிறது குளறுபடி!

வணிகவரித்துறையில் இப்படியும் நடக்கிறது குளறுபடி!
வணிகவரித்துறையில் இப்படியும் நடக்கிறது குளறுபடி!

 பதவி, உயர்வு, சீனியாரிட்டி குளறுபடியை நீக்க வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்து வணிகவரி சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மனு கொடுக்கப்பட்டது. 

தமிழ்நாடு வணிகவரித்துறையில் சீனியாரிட்டி குளறுபடி கடந்த சில ஆண்டுகளாக உள்ளது. அதை சரி செய்ய தமிழ்நாடு வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, பல வகையில் போராடி வருகிறது. ஆனால், இதுவரை அதை சரிசெய்ய அதிகாரிகள் முயற்சிக்கவில்லை. அதோடு 2014-ம் ஆண்டு முதல் இதுவரை வணிகவரித்துறையில் பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. பதவி உயர்வு, சீனியாரிட்டி குளறுபடி உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் பெருந்திரள் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி வணிகவரித்துறையினர் தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் கூடினர்.

தமிழ்நாடு வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவர்கள் என்.ஜனார்த்தனன், ஜெயராஜ் ராஜேஸ்வரன், ராஜேந்திரன், லட்சுமணன், தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமையில் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது, வணிகவரித்துறை சங்க நிர்வாகிகள் டேனியல் ஜெயசிங், வளன்அரசு, வைத்தியநாதன், பத்ரிநாத், கதீர்வேல், சாமிகுணம், உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வணிகவரித்துறை கமிஷனர் சந்திரமௌலியிடமும் கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை பெற்ற அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதுகுறித்து ஜனார்த்தனன் கூறுகையில், "வணிகவரித்துறையில் நிலவும் சீனியாரிட்டி குளறுபடியை நீக்க வலியுறுத்தி பல கட்டங்களாக போராடி வருகிறோம். இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. சீனியாரிட்டி குளறுபடியை தங்களுக்கு சாதகமாக சில அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நீண்ட காலமாக வணிகவரித்துறையில் பணியாற்றியவர்களுக்கு தகுதி இருந்தும் பதவி உயர்வு கிடைப்பதில்லை. வணிகவரித்துறையைத் தவிர தமிழகத்தில் உள்ள இதர துறைகளில் இத்தகைய நிலைமை இல்லை. எனவே, வணிகவரித்துறையில் நிலவும் சீனியாரிட்டி குளறுபடியை நீக்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கே.சி.வீரமணி, கமிஷனர் சந்திரமௌலி ஆகியோரிடம் இன்று மனு கொடுத்துள்ளோம். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார். 

எஸ்.மகேஷ்