வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு வரி விதிப்பை 7.5 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதமாகத் திடீரென உயர்த்தி இருக்கிறது மத்திய அரசாங்கம். இத்துடன் வேளாண்மை செஸ், சமூகநல சர்சார்ஜ், ஜி.எஸ்.டி ஆகியவை சேரும்போது மொத்த வரி என்பது 18.75 சதவிகிதம் ஆகிவிடும். இந்த வரி உயர்வின் விளைவாக, தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராம் ஒன்றுக்கு ரூ.100 என்கிற அளவில் உயர்ந்தது. அப்படியெனில், ஒரு பவுனுக்கு ரூ.800 உயர்வு. இந்த திடீர் விலை உயர்வால் சாதாரண மக்கள் அதிர்ந்துபோனார்கள்

இந்த விலை உயர்வு தொடரும் என்பதுதான் பலரின் கணிப்பு. தங்கத்திற்கான வரியை இப்போது உயர்த்துவதற்கு என்ன அவசியம் வந்தது? நம் நாடு ஆண்டொன்றிற்கு சுமார் 700 - 800 டன் தங்கம் இறக்குமதி செய்கிறது. சீனாவிற்கு அடுத்து அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்வது நம் நாடுதான். வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்யும்போது, அமெரிக்க டாலரைக் கொடுத்து இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. இதனால், நமது அந்நியச் செலாவணி கணிசமாகக் குறைகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தவிர, தற்போது அமெரிக்க டாலர் மிக மிக வலுவாக இருக்கிறது. அதாவது சில மாதங்களுக்குமுன் 75 ரூபாய் தந்து ஒரு டாலர் வாங்கிய இடத்தில், தற்போது 79 ரூபாய் தந்துதான் ஒரு டாலரை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. டாலரின் மதிப்பு இன்னும் உயருமே தவிர, குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள். பொதுவாக ஒரு நாட்டின் ஏற்றுமதி அளவைவிட இறக்குமதி அளவு அதிகரிக்கும்போது வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படும். தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்வதால், வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகரிக்கிறது.

இந்தப் பிரச்னைகளை எல்லாம் சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கிய மத்திய அரசு, தங்கத்துக்கான வரியை உயர்த்தி இருக்கிறது. இப்படிச் செய்வதால், அரசுக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். ஒன்று, கூடுதல் வரியால் அரசாங்கத்துக்குக் கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் வருவாய். இரண்டாவது, மக்கள் தங்கம் வாங்குவது குறையும். இதனால், அந்நியச் செலாவணி தேவை குறையும்.
ஆனால், மக்கள் நிலைமை? திருமணங்கள் தொடங்கி அனைத்து சுப விசேஷங்களுடனும் தங்க நகைகளுக்கு உறவு இருக்கிறது. மகளின் கல்யாணத்துக்கு, பேத்தியின் காதுகுத்துக்கு என தங்க நகை வாங்கலாம் என்று கணக்கு போட்டு வைத்திருந்தவர்கள் தலையில் இடி விழுந்திருக்கிறது. இதேபோல தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதி வாங்குவோரையும் தயக்கம் கொள்ள வைத்திருக்கிறது.

எளிய குடும்பங்களில் மதிப்புமிக்க பொருளாக இருப்பது தங்க நகைகள் மட்டும்தான். அவர்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதேபோல ஆடம்பரத் தேவைகளுக்குத் தங்கம் வாங்குவதும் இனி குறையலாம்.
தங்கத்தை ‘மஞ்சள் பூதம்’ என்று சிலர் அழைப்பார்கள். முதலீடு என்று கருதி இதை வாங்கும்போது ஏராளமான வரிகளை இனி செலுத்த வேண்டியிருக்கலாம். இந்த மஞ்சள் பூதத்தை வாங்காமல் வேறு எதிலெல்லாம் பணத்தைப் போட்டு பெருக்கலாம் என்று மக்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது!