நாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி? #DoubtOfCommonMan

ரொக்கமாக பணம் செலுத்தி பொருள் வாங்கும்போது நம்மிடம் வசூலித்த GST முறையாக எழுதப்படவில்லை என்றால் GST உரிய இடத்துக்கு, அதாவது அரசாங்கத்துக்குச் சென்று சேர்வது கேள்விக்குறியே.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``பொருள்களை வாங்கும்போது நாம் செலுத்தும் GST வரி, அரசாங்கத்திடம் முழுமையாகச் சென்றடைகிறதா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் மணிவாசகன் என்ற வாசகர். ஜெயப்பிரகாஷ், கார்த்திகேயன், ஆறுமுகம், கே.டி.பாலாஜி ஆகிய வாசகர்களும் GST வரி குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அந்தக் கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
இதுகுறித்து ஆடிட்டர் சொ.பாஸ்கரனிடம் பேசினோம்.

"தற்போது விற்பனை வரி என்று எந்த மாநிலத்திலும் கிடையாது. பொருள் உற்பத்தி வரி, இறக்குமதி வரி, சேவை வரி போன்ற அனைத்து வரிகளும் சேர்ந்து ஒரே வரியாக GST என்ற பெயரில், பொருளை வாங்குவோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. பொருள்களின் தன்மைக்கு ஏற்ப 5%, 8%, 12%, 18%, 28% என்று இந்த வரி விகிதம் மாறுகிறது.
முன்பு துணிகளுக்கு விற்பனை வரி கிடையாது. ஆனால், தற்போது துணிகளுக்கு ஜி.எஸ்.டி 5% வசூலிக்கப்படுகிறது. ஒருவர் துணிக்கடையில் பத்தாயிரம் ரூபாய்க்கு துணி வாங்குகிறார் என்றால் துணிக்கான ஜி.எஸ்.டி அந்த 10,000 ரூபாயில் 5 சதவிகிதமான, 500 ரூபாய் ஆகும். கடைக்காரரிடம் துணி வாங்குபவர் செலுத்தும் தொகை ரூபாய் 10,500 (பொருளின் விலை ரூ.10,000 + GST ரூ.500). வரியாகப் பெற்ற இந்த 500 ரூபாயில் 50 சதவிகிதம் (250 ரூபாய்) மத்திய அரசுக்கும், இன்னொரு 50 சதவிகிதம் (250 ரூபாய்) மாநில அரசுக்கும் போய்ச் சேருகிறது. இது உள்மாநில விற்பனையில் கடைப்பிடிக்கப்படும் முறை ஆகும்.

ஒரு பொருள் சென்னையில் விற்கப்பட்டாலும், அது போய்ச் சேரும் இடம் வேறு மாநிலமாக இருக்கும்பட்சத்தில் (பொருள் வாங்குபவர் வேறு மாநில முகவரியை பில்லில் குறிப்பிடச் சொல்லியிருந்தால்) IGST ( Inter state GST) என்ற வரி விதிக்கப்படுகிறது. அதாவது ஆந்திர மாநிலத்துக்காரர், சென்னை வந்து ஆந்திர முகவரி கொடுத்து, காருக்கான உதிரி பாகங்களை வாங்கிச் செல்கிறார் என்றால், அவருக்கு IGST வரிவிதிப்பு முறை வரும். அவர் வாங்கிய பொருளுக்கான GST-ல் 50 சதவிகிதம் மத்திய அரசுக்கும், மீதி 50 சதவிகிதம் பொருள் போய்ச் சேரும் மாநிலமான ஆந்திர மாநிலத்துக்கும் கிடைக்கிறது. பொருளை விற்பனை செய்யும் மாநிலத்துக்கு IGST- யில் பங்கு கிடையாது.

காருக்கு 28 சதவிகிதம் GST விதிக்கப்படுகிறது. இதில் 14 சதவிகிதம் மத்திய அரசுக்கும் 14 சதவிகிதம் மாநில அரசுக்கும் கிடைக்கின்றது. கார் போன்ற பெரிய பொருள்களை, கண்டிப்பாக கணக்கில் காட்டித்தான் விற்க முடியும். அதனால் முறைப்படி GST வசூலிக்கப்பட்டு அரசாங்கத்திடம் சேர்ந்துவிடும். ஆனால், சிறு வியாபாரம் செய்பவர்கள், கையால் (மேனுவல்) பில் போடுபவர்கள், பில் எண்ணை முறைப்படுத்தாமல் உபயோகிப்பவர்கள் சிலர் தவறுசெய்ய வாய்ப்புள்ளது.
வெற்றுத்தாளில் பில் எழுதிக்கொடுத்தால், GST என்று நம்மிடம் வாங்கப்படும் தொகை அரசுக்கு போய்ச் சேராது.
ஒருவர் பொருள் வாங்கியதற்கான பில்லை, கடைக்காரரிடம் வாங்கும்போது, அதில் கடையின் பெயர், GST எண், முகவரி, தேதி, ரசீது எண், நாம் செலுத்தும் தொகை சரியாக குறிக்கப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் சரிபார்க்க வேண்டும். வெற்றுத்தாளில் பில் எழுதிக் கொடுத்தால், GST என்று நம்மிடம் வாங்கப்படும் தொகை அரசுக்கு போய்ச் சேராது. காசோலை மூலமாகவோ, கடன் அட்டை மூலமாகவோ பொருள்கள் வாங்கினால், கடைக்காரர் நம்மிடம் வசூலித்த GST-யை செலுத்தாவிட்டால், அவர் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், ரொக்கமாக பணம் செலுத்தி பொருள் வாங்கும்போது நம்மிடம் வசூலித்த GST முறையாக எழுதப்படவில்லை என்றால் GST உரிய இடத்துக்கு, அதாவது அரசாங்கத்துக்குச் சென்று சேர்வது கேள்விக்குறியே.

வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி பணம் அரசுக்குச் சேர்வதில்லை என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் பொருள் வாங்கிய ரசீதுடன், சென்னை-6 கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு என்ற முகவரியில் உள்ள ஜி.எஸ்.டி வரிப் பிரிவின் தமிழக தலைமையகத்துக்குப் புகார் தெரிவிக்கலாம்" என்கிறார் ஆடிட்டர் சொ.பாஸ்கரன்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!