எதற்கு எடுத்தாலும் மக்கள் தலையில் கை வைப்பதுதான் அரசாங்கங்களின் வேலையாக இருக்கிறது. ‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்’ இதுதான் உண்மை யாகிவிட்டது. ஜி.எஸ்.டி என்கிற பெயரிலும் இன்னும் பற்பல பெயர்களிலும் மத்திய அரசு பொதுமக்களை வதைக்கிறது.
உண்மையிலேயே அவ்வப்போது உரிய சதவிகித அளவுக்கு வரி உள்ளிட்டவற்றை உயர்த்தி வந்தாலே, மக்களிடம் எதிர்ப்பும் கிளம்பாமல் இருக்கும்; அவர்களும் ஒரேயடி யாக பாதிக்கப்படாமல் இருப்பார்கள். அதே போல, அரசு நிறுவனங்களும் தொடர்ந்து நஷ்டக் கணக்குக் காட்டாமல், ஓரளவுக்குத் தாக்குப் பிடித்து ஓடிக்கொண்டிருக்கவும் முடியும்.
சரி, வரி கொடுக்கிறதுதான் கொடுக்கிறோம்... அது நாம் கட்ட வேண்டிய உரிய வரிதானா, கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா, வரி விதிக்கப்படும் முறை சரியாகத் தான் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு விடையே கிடைப்பதில்லை.

இதோ... மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சமீபத்தில் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே விதிக்கப்பட்டதிலிருந்து 25 முதல் 150% வரை உயர்த்தப் பட்டிருக்கிறது. இது மக்களிடம் பெரும் குழப்பத்தையும் கேள்வி களையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. திடீரென்று சொத்து வரிக்கான நோட்டீஸை அனுப்பி வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகள், ‘இந்தக் கடிதம் கிடைத்த 15 நாள்களில் கட்டவில்லை எனில், அபராதம் விதிக்கப்படும்... வீட்டுக்கு சீல் வைக்கப்படும்’ என்கிற அளவுக்கு மிரட்டல் செய்தியையும் பரப்பிக்கொண்டுள்ளன.
ஆனால், விதிக்கப்பட்ட சொத்துவரி சரியானதுதானா என்பதை சரிபார்ப்பதற்கு ஆப், இணையதளம் என எந்த வசதியையும் சரிவர செய்து தரவில்லை. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் இதற்கென கடந்த காலத்தில் இருந்த சொத்து வரி கால்குலேட்டரும் தற்போது காணாமல் போயிருக்கிறது.
சொத்து வரி உயர்வு உட்பட அனைத்து விவரங்களையும் பெறுவதற்காக சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்றபோது, தங்களுடைய பெயர்களைச் சொல்ல விரும்பாத அதிகாரிகள் சில விளக்கங்களை நமக்குத் தந்தார்கள்.
‘‘சொத்து வரி பல ஆண்டுகளாகவே உயர்த்தப்படாமல் இருந்தது. பணவீக்கம் உயர்ந்துகொண்டே இருப்பதால் சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பெரும்பாலானோர் வரியைச் செலுத்திவிட்டனர். வழக்கமாக ரூ.2 கோடி வரும் வரி வசூல், இப்போது ரூ.5 கோடி வரை வந்திருக்கிறது. புதிதாக மாற்றப்பட்ட சொத்து வரியைக் கணக்கிடும் வகையில் கால்குலேட்டரை மாற்ற வேண்டிய தேவை இருப்பதால், அந்த வசதி நீக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அந்த வசதி திரும்பத் தரப்படும்’’ என்றவர்கள், சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கான காரணங்களையும் அடுக்கினர்.


‘‘மத்திய அரசின் 15-வது நிதி ஆணையம் அதன் அறிக்கையில், 2022-23-ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் மானியம் பெறும் தகுதியைப் பெறும் பொருட்டு 2021 - 22 -ம் ஆண்டில், சொத்து வரி சதவிகிதங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டு தோறும் சொத்து வரி விகிதத்தை உயர்த்திட வேண்டும்’ என்றெல்லாம் நிபந்தனைகளை விதித்தது. இது தவிர, தூய்மை இந்தியா, அம்ரூத் 20 ஆகிய திட்டங்களிலும் இதே நிபந்தனைகள் விதிக்கப் பட்டன.
சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதிகளில் 1998-லும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர நகர்ப்புற உள்ளாட்சிகளில் 2008-ம் ஆண்டிலும் சொத்து வரி பொது சீராய்வு மேற் கொள்ளப்பட்டது. மீண்டும் பிற்பாடு, 2013-ல் சீராய்வு மேற்கொள்வது தொடர்பாக அரசாணை வெளியிடப் பட்டு, நிறுத்தி வைக்கப் பட்டது. அதன்பின் 2019-ல் சீராய்வு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க குழு அமைக்கப்பட்டது.
பொதுவாக, பொருளாதாரக் குறியீடுகள் உயர்ந்தாலும், அதற்கேற்ப சொத்து வரியில் மாற்றங்கள் செய்யப்பட வில்லை. பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாத தால் உள்ளாட்சி அமைப்பு களின் மொத்த வருவாய் பெருமளவு குறைந்தது. ஆனால், செலவினங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதன் காரணமாக தமிழகத் தின் நகராட்சிகள், பேரூராட்சி களில் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளலாம் எனக் குழுவின் பரிந்துரை அடிப் படையில் அரசாணை வெளி யிடப்பட்டது. அதன் அடிப் படையில், சொத்து அமைந் துள்ள இடம், சொத்துகளின் பரப்பு அடிப்படையில் 25% முதல் 150% வரை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது’’ என்றனர்.
நாம் நேரடியாக அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சென்றதால், தற்போது உயர்த்தப் பட்டிருக்கும் சொத்து வரியை பொதமக்கள் கணக்கிடு வதற்கான வசதி, சென்னை மாநகராட்சி இணைய தளத்தில் தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறது.

சொத்து வரி உயர்வு எப்படி கணக்கிடப்பட்டிருக்கிறது?
பொதுவாக, சொத்து வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது எனில், சொத்துகளின் மதிப்பு அடிப்படையில் ஒவ்வொரு பகுதிக்கும் அடிப்படை வீதி மதிப்பு வெளியிட்டுள்ளது. உங்களுடைய சொத்து அமைந்துள்ள பகுதிக்கான அடிப்படை வீதி மதிப்பு சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. அந்த விவரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக, தி.நகர், பிரகாசம் தெரு பகுதியில் 700 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புக்கான சொத்துவரி கணக்கீடு இனி...
பிரகாசம் தெருவுக்கான சொத்து வரி மதிப்பு ஒரு சதுர அடிக்கு 1.25 ரூபாய்.
கட்டுமான பரப்பு X அடிப்படை வீதி மதிப்பு - 700 X 1.25 = 875
ஆண்டு மதிப்பு = 875 X 12= 10,500
மதிப்பு கட்டடத்துக்கு மட்டும்தான் நிலத்துக்கு அல்ல, 10% கழிவு = 10,500 - 1,050= 9,450
கட்டடத்தின் தேய்மானம் 10% கழிவு = 9,450 - 945 = 8,505
நிலத்தின் மதிப்பு உயர்வு காரணமாக 10% சேர்க்க வேண்டும் = 8,505 + 1,050 = 9,555
700 சதுர அடி அளவுள்ள கட்டடத்துக்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி 1.75 மடங்கு.
எனவே, புதிதாக மதிப்பிடப்பட்ட ஆண்டு சொத்து மதிப்பு ரூ.16,722
இதில் கட்டடத்தின் வயது காரணமான கழிவு 5% எனில், கழிவுக்குப் பிறகான ஆண்டு சொத்து மதிப்பு ரூ.15,886
இதில் அரையாண்டு சொத்து வரி 12.40%. அதன் அடிப்படையில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை ரூ.1,970 கட்ட வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் & செப்டம்பர் மாதங்களில் சொத்து வரி கட்டப்பட வேண்டும்.