பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

வருமான வரி கணக்குத் தாக்கல்... விரைவில் அனைவருக்கும் பொதுவான படிவம்..!

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரி

வருமான வரி

வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவத்தைப் பயன்படுத்தும் முறையை மத்திய நிதி அமைச்சகம் முன்வைத்துள்ளது. இது பயன்படுத்த மிக எளிதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

டாக்டர் அபிஷேக் முரளி, ஆடிட்டர் & பிரசிடென்ட், 
அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்
டாக்டர் அபிஷேக் முரளி, ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்

இப்போது, வருமான வரி கணக்குத் தாக்கலுக்குப் பல்வேறு பிரிவினருக்கேற்ப 7 படிவங்கள் நடைமுறையில் உள்ளன. அறக்கட்டளைகள், லாப நோக்கமில்லா நிறுவ னங்கள் (Trusts and non-profit organisations) தவிர, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் மற்ற அனைவரும் இந்த ஒரே மாதிரியான படிவத்தைப் பயன்படுத்த முடியும்.

இப்போதைய நிலையில், ஐ.டி.ஆா் படிவம் 1 (Sahaj - சகஜ்), ஐ.டி.ஆா் படிவம் 4 (Sugam - சுகம்) ஆகியவை எளிய படிவங்களாக உள்ளன. இவற்றை சிறிய மற்றும் நடுத்தர வருமானப் பிரிவில் உள்ள வருமான வரி செலுத்து வோர் பயன்படுத்தி வருகிறார்கள்.

ரூ.50 லட்சம் வரை சம்பளம் பெறும் தனிநபா்கள், ஒரே ஒரு வீடு, வட்டி உள்ளிட்ட வருமானம் பெறுவோர் ஐ.டி.ஆர் படிவம் 1 -ஐ பயன்படுத்த வேண்டும். ரூ.50 லட்சம் வரை வருமானம் உள்ள மற்றும் வணிகம், நிபுணத்துவம் (business and profession) மற்றும் அனுமான வரிவிதிப்பு (Presumptive taxation) மூலமான வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும் பத்தினர் ஐ.டி.ஆர் படிவம் 4-ஐ பயன்படுத்த வேண்டும்.

வருமான வரி கணக்குத் தாக்கல்... 
விரைவில் அனைவருக்கும் பொதுவான படிவம்..!

ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் மூலம் வாடகை வருமானம் பெறுபவர்கள் அல்லது மூலதன ஆதாயம் இருந்தாலும், ஐ.டி.ஆர் படிவம் 2-ஐ பயன்படுத்த வேண்டும். வணிகம், நிபுணத்துவ வருமானம் கொண்டவர்கள் ஐ.டி.ஆர் படிவம் 3-ஐ பயன்படுத்த வேண்டும்.

வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை (Limited Liability Partnership -LLP) மற்றும் கூட்டு நிறுவனம், கூட்டமைப்பு (ஏஒபி) நடத்து பவர்கள் ஐ.டி.ஆர் படிவம் 5-ஐ பயன்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் ஐ.டி.ஆர் படிவம் 6-யும் அறக்கட்டளைகள், பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஐ.டி.ஆர் படிவம் 7-யும் பயன் படுத்த வேண்டும்.

ஒரே படிவமுறை நடை முறைக்கு வந்தாலும், ஏற்கெனவே உள்ள ஐ.டி.ஆர் 1 மற்றும் ஐ.டி.ஆர் 4 படிவங் கள் நடைமுறையில் இருக் கும். தனிநபா்கள் விருப்பப் பட்டால் ஒரே படிவ முறை யைத் தோ்வு செய்து கொள்ளலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) தெரிவித்துள்ளது.

இதற்கான வரைவு பொது ஐ.டி.ஆர் படிவத்தை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்து தொடர்புடையவர்கள், தங்களின் கருத்துகளை டிசம்பர் 15-ம் தேதிக்குள் தெரிவிக்க சி.பி.டி.டி கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து ஐ.டி.ஆர் படிவங்களையும் இணைப்பது மூலம் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் தனிநபர்கள் மற்றும் வணிகம் சாராதவர்களின் நேரம் கணிசமாக மிச்ச மாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.டி.ஆர் 2, ஐ.டி.ஆர் 3, ஐ.டி.ஆர் 5 மற்றும் ஐ.டி.ஆர் 6 படிவங்களைப் பயன்படுத்தியவர்கள் புதிய பொதுவான படிவத்தைத்தான் பயன்படுத்த வேண்டி வரும்; பழைய படிவங்களைப் பயன்படுத்த முடியாது. புதிய பொதுவான படிவத்தில் ஒருவருக்கு வெளிநாட்டிலுள்ள சொத்துகள், வெளிநாட்டு நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களின் வட்டி வருமானம், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் மெய்நிகர் சொத்துகள் ஆகியவற்றைக் குறிப்பிட தனி பிரிவு உள்ளது.

‘‘முன்மொழியப்பட்டிருக்கும் வரைவு ஐ.டி.ஆர் படிவம், சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு எளிமையாக இருக்கும். வரி செலுத்துவோர் தங்களுக்குப் பொருந்தாத படிவங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை” என மத்திய நேரடி வரிகள் வாரியம் கருத்து தெரிவித்துள்ளது. பொதுவான வடிவத்தில், அடிப்படை விவரங்கள், மொத்த வருமானத்தைக் கணக்கிடுதல், வரியைக் கணக்கிடுதல், வரியைச் செலுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகள் பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது.

வரியைக் கட்டுபவர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்து கேட்கப்பட்டு பொதுவான ஐ.டி.ஆர் படிவம் அறிவிக்கப்படும். அதன்பிறகு, அது வருமான வரித் துறையில் அதன் இணைய தளத்தில் வெளியிடப்படும். அதன்பிறகே வரிதாரர்கள் அதைப் பயன்படுத்தி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும்.

இந்தப் பொதுவான வரிக் கணக்கு படிவம் பற்றிய உங்களின் கருத்துகளை dirtpl4@nic.in, dirtpl1@nic.in ஆகிய இ-மெயில் முகவரிகளுக்கு 2022 டிசம்பர் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.