Published:Updated:

முறையாக வசூலிக்கப்படாத வணிக சொத்து வரி! அரசுக்கு இழப்பு 100 கோடி

Corporation of Chennai
Corporation of Chennai

சட்டவிரோதமாக அனுமதிபெறாத இடங்களில் வணிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுவருகிறது.

மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிகள்தான் அரசுக்குத் தேவையான நிதிகளைத் திரட்டுவதற்கான வழிகோலாக அமைகிறது. ஏற்கெனவே வரிவிதிப்பு முறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவருகின்றன. இந்நிலையில், ``சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறைகேடான முறையில் வீடுகளில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களிடமிருந்து வணிகத்திற்கான சொத்து வரி, மின்சார வரி வசூலிக்கப்பட்டிருந்தால் அரசுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஏற்பட்டிருக்கும்" என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

CMDA
CMDA

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குடியிருப்புகள், வீடுகள் கட்டுவதற்கான அனுமதியைச் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் வழங்கிவருகிறது. இந்த அமைப்புகளிடமிருந்து அனுமதிபெற்று வீடுகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், இவ்வாறு அமைக்கப்படும் வீடுகளில் சில காலம் ஆனதும் வீட்டின் அமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து வீட்டின் முன்பகுதியில் மளிகைக் கடைகள், மருந்தகங்கள், சிறிய அளவிலான ஓட்டல்கள் போன்றவற்றைச் சட்டவிரோதமாக அமைத்து அதன்மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

இந்த முறைகேடுகளின் காரணமாக வணிக நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கக்கூடிய சொத்து வரி, மின்சார வரி போன்றவை முறையாக வசூலிக்கப்படுவதில்லை.

Apartments
Apartments
விகடன்

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், ``வரி வசூலிப்பதற்காக அதிகாரிகளை அரசாங்கம் நியமித்துள்ளது. ஆனால், இந்தத் துறையில் நீடித்துவரும் ஊழல் காரணமாக வரி வசூலிப்பது முறைப்படி நடைபெறுவதில்லை. அதேபோல், முதலில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் அனுமதி வாங்காத கட்டடங்களின்மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி என்ன செய்கிறது என்றால், அவர்களிடமிருந்து வரியை மட்டும் வசூலித்து, இந்தச் சட்டவிரோத நடவடிக்கையைச் சரிசெய்து விடுகிறது. இதுவே சி.எம்.டி.ஏ-வுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் இடையே நிகழ்ந்துவரும் பெரும் முரண்பாடாக உள்ளது” என்றார்.

தமிழ்நாடு தொழில் முறை நகரமைப்பு வல்லுநர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சதானந்த், ``அரசிடமிருந்து எதன் அடிப்படையில் அனுமதி வாங்கினோமோ, அதனடிப்படையில்தான் கட்டடங்களைக் கட்டவேண்டும். ஆனால், சிறுகடைகள் எல்லாமே கிட்டத்தட்ட 90 சதவிகிதம், முறையாக அனுமதி வாங்காத கட்டடங்களில்தான் இயங்கிவருகின்றன. இந்தக் கடைகள்தான் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்பவையாகவும் உள்ளன. விதிமுறைகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் மக்களின் தேவைகளுக்கு அடிப்படையாகப் பல கடைகள் உருவாகிவிடுகின்றன. அதனால், இவற்றை உடனடியாகத் தடுத்து நிறுத்திவிடவும் முடியாது.

Jayaraman
Jayaraman

அதேபோல் இங்கு வீடு, கடைகள் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படும்போதும்கூட, வெறும் கடமைக்காகத்தான் நடைபெறுகிறதே தவிர, அரசு அலசி ஆராய்ந்து அனுமதிகளை வழங்குவதில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறைகள்தான் தேவையான ஒன்று. மாநகராட்சியும் அவ்வப்போது இந்த முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால், அதுவும் முழுவீச்சில் நடப்பதில்லை. குறிப்பாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறைகேடான முறையில் வீடுகளில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களிடமிருந்து, வணிகத்திற்கான சொத்து வரி, மின்சார வரி வசூலிக்கப்பட்டிருந்தால் அரசுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஏற்பட்டிருக்கும்” என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள், `இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைதான். இதற்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், சென்னைப் பெருநகரம் முழுவதும் இது மாதிரியான சட்டவிரோதமான கட்டடங்கள் நிறைந்திருப்பதால், உடனே இதில் நடவடிக்கை எடுப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன’ என்றனர்.

Shops
Shops

இந்த முறைகேடான இடங்களில் கடைகளை அமைப்பதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புகள் ஒருபுறம் இருக்க.... மறுபுறம், இவற்றிற்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகளையும் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது.

Vikatan
பின் செல்ல