Published:Updated:

சம்பளதாரர்கள் வரித் தவறு செய்யாமலிருக்க வருமானவரித் துறையின் அறிவிப்புகள்!

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரி

வருமான வரி

சம்பளதாரர்கள் வரித் தவறு செய்யாமலிருக்க வருமானவரித் துறையின் அறிவிப்புகள்!

வருமான வரி

Published:Updated:
வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரி

இந்திய வருமானவரித் துறை, இதுவரை இல்லாத அளவுக்கு சம்பளதாரர்களுக்கான வருமான வரி தொடர்பான முக்கியமான விவரங்களைத் தற்போதைய சுற்றறிக்கையில் விரிவாகவும் விளக்கமாகவும் வெளியிட்டுள்ளது. தவிர, பல முக்கியமான அம்சங்களுக்கான வரையறையையும் (Definition) விரிவாகத் தெரிவித்துள்ளது.

இவற்றை நன்கு புரிந்துகொள்வது, கடந்த நிதியாண்டுக்கு மட்டுமன்றி, வரப்போகும் நிதியாண்டுகளுக்கும் பெரிதும் பயன்படும். வரித் தவறுகளைத் தவிர்க்க உபயோகமாக இருக்கும். அந்த வரையறைகளைப் பார்ப்போம்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

சம்பளதாரர் என்பவர் யார்?

வேலை கொடுத்தவர், வேலை பெற்றவர் என்ற உறவுமுறை உள்ள அனைவரும் சம்பள தாரர்களே. ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி, மார்ச் 31 முடிய ஒரு சம்பளதாரர் பெற்றுக்கொண்ட (Drawn) சம்பளத்துடன், பெற வேண்டிய (Due) சம்பளமும் சேர்ந்தது ஒரு நிதியாண்டுக்கான சம்பளம். கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாதபோதும் தற்போதைய நிறுவனம் அல்லது முந்தைய நிறுவனம் கொடுத்த அல்லது தரப்போகிற சம்பளமும், நிலுவைத் தொகையும் ஒரு நிதியாண்டுக்கான சம்பளம் என்ற கணக்கில் அடங்கும் (பிரிவு 15).

சம்பள வகைகள் யாவை?

கூலி (wages), அன்யூட்டி (Annuity) அல்லது பென்ஷன், பணிக்கொடை, ஃபீஸ், கமிஷன், வாழ்க்கை வசதி (அதாவது, வேலை தந்த நிறுவனம் தன் ஊழியருக்கு வழங்கும் வீட்டு வசதி, வாகன வசதி முதலானவற்றுக்கான பணமதிப்பு - Perquisite), சம்பளத்துடன் தரப்படும் அல்லது சம்பளத்துக்குப் பதிலாகத் தரப்படும் லாபத் தொகை (profits in lieu of or in addition to salary) சம்பள முன்பணம், விடுப்பு ஊதியம், நிறுவனம் தன் ஊழியரின் இ.பி.எஃப் கணக்கில் செலுத்துகிற 12% சம்பளத்துக்கும் அதிகமான தொகை, ஆண்டு இறுதியில் உள்ள இ.பி.எஃப் இறுதித் தொகைக்கு (தற்போதைய நிலையில்) 9.5 சதவிகித்துக்குமேல் தரப்படும் வட்டி, மத்திய அரசு மற்றும் இதர மாநில அரசுகள், நிறுவனங்கள் தன் ஊழியர்கள் தன்னுடைய பி.எஃப் கணக்கில் அனுமதிக்கப் பட்ட வரம்புக்குமேல் செலுத்தும் சந்தாவுக்குத் தரப்படும் வட்டி முதலானவை சம்பளம் என்ற வரையறைக்கு உட்பட்டு, வரிப் பிடித்தம் (TDS) செய்யப்படும். ஆனால், பென்ஷன் கம்யூடேசன் செய்த பகுதித் தொகை சம்பளமாகக் கணக்கிடப்படாது. அதாவது, ஒருவர் ரூ.30,000 என்று இருந்த தன்னுடைய பென்ஷனில் ரூ.10,000 கம்யூடேசன் செய்து விட்டால், மீதி உள்ள ரூ.20,000 பென்ஷனுக்கே வரிப் பிடித்தம். ஆனால், 30,000-க்கான அகவிலைப்படி முழுவதும் வரிப்பிடித்தத்துக்கு உட்படும். ஃபேமிலி பென்ஷன் ‘சம்பளம்’ என்று வரையறைக்கு உட்படாது. எனவே, வரிப் பிடித்தம் (TDS) கிடையாது. இதர வருமானமாகக் கொள்ளப்படும்.

சம்பளதாரர்கள் வரித் தவறு செய்யாமலிருக்க வருமானவரித் துறையின் அறிவிப்புகள்!

சம்பளத்துக்குப் பதிலாக லாபம் (Profit in lieu of salary) கிடைத்தால்...

ஒரு சம்பளதாரர் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் முன்பே பெறுகிற / பெறப் போகும் தொகை அல்லது வேலை முடிவு பெற்றதும் பெறுகிற அல்லது பெறப் போகும் தொகை, ஊழியர் தன் வேலையிலிருந்து நீக்கம் (Termination) செய்யப்படுதல் அல்லது ஒப்பந்த நடைமுறை மாற்றம் காரணமாக வெளியேறும்போது பெறும் தொகை, சம்பளதாரர் தான் சந்தா செலுத்தாத (நிறுவன) பி.எஃப் கணக்கு மூலம் பெறுகிற தொகை மற்றும் வட்டி, முதலானவை (பிரிவு 17(2).

மேற்கண்ட விவரங்கள் அனைத்தையும் வரி செலுத்தக் கடமைப்பட்ட அனைவரும் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.

வரித் தாக்கல்...

சென்ற நிதியாண்டுக்கு வரித் தாக்கல் செய்ய வேண்டிய தருணத்தில் கொரோனா தாக்கம் இருந்த காரணத்தால், வரி செலுத்தியதுக்கு ஆதாரமான படிவம்-16 வழங்குவதற்கான அவகாசம் 31.7.2021 வரை நீட்டிக்கப்பட்டது. வரித் தாக்கலுக் கான கடைசி தேதியும் 31.12.2021 வரை என்பதாக இருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்ட நிலையில், ஜூன் 15-க்கு முன்பே படிவம்-16 தரப்பட்டுவிடும். வரித்தாக்கல் கடைசி தேதி 31.7.2022 ஆக இருக்கவே நிறைய வாய்ப்புகள் உள்ளன.

வீட்டுக் கடனுக்கு வரிச் சலுகை...

வீட்டுக் கடனுக்குத் தரப்படும் வட்டிக்கு பிரிவு 24(b)-யின் படியான சலுகைக்கு முக்கியமான நிபந்தனை எதுவென்றால், எந்த நிதியாண்டில் கடன் பெறப்பட்டதோ, அந்த நிதியாண்டு முடிவடைந்த அடுத்த ஐந்து ஆண்டுக்குள் வீடு கட்டி முடிக்கப்பட்டுவிட்டது என்பதற்கான (completion certificate) சான்று சமர்ப்பிப்பதுதான். இந்தச் சான்றைக் கட்டுமான நிறுவனரிடமிருந்து பெறலாம் அல்லது சம்பளதாரர் தாமே சுயசான்று (Self-Declaration) தரலாம்.

* கட்டிய வட்டிக்கு மட்டுமன்றி, கட்ட வேண்டிய வட்டிக்கும் வரிச் சலுகை பெறலாம்.

* வீட்டுமனைக்கு கடன் வாங்கி சொந்தப் பணத்தில் வீடுகட்டி இருந்தாலும் இந்தச் சலுகை உண்டு.

* முன்னதாக பெற்ற ஒரிஜினல் வீட்டுக் கடனைத் திருப்பி செலுத்த புதிய கடன் பெற்றிருந்தாலும் வட்டிச் சலுகை உண்டு.

* கடன் தந்த நபர் அல்லது நிறுவனத்திடமிருந்து கட்டப் பட வேண்டிய வட்டிக்குச் சான்று ஒன்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

* சம்பளம் தரும் அதிகாரி, கடன் தந்தவரின் ஆதார் / பான் எண், பெயர், முகவரி செலுத்த வேண்டிய வட்டிக்கு ஆதார ஆவணம் பெற வேண்டும்.

வரிக்கு உட்படாத வருமானம்...

பணிக்கொடை, பென்ஷன் கம்யூடேசன், ஓய்வு பெறும்போது கிடைக்கும் விடுப்புச் சம்பளம், விருப்ப ஓய்வின்போது கிடைக்கும் பணப்பலன் முதலானவை ‘சம்பள வருமானம்’ என்ற வரையறைக்கு உட்படாது. எனவே, வரிக் கணக்குக்குள் வராது என்றாலும், மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி (Local body) ஊழியர்கள் முதலானவர் களுக்கும், இதர சம்பளதாரர் களுக்கும் இதில் வேறுபாடு உண்டு.

பணிக்கொடை

அரசுப் பணியினர், ரயில்வே, அஞ்சல்துறை, மின்வாரியம், உள்ளாட்சி ஊழியர்களுக்கு தற்போதைய அதிகபட்ச பணிக் கொடை ரூ.20 லட்சம். அகவிலைப்படி 50 சதவிகிதத்தைத் தாண்டினால் இவர் களுடைய பணிக் கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாகவும் அகவிலைப்படி 100 சதவிகி தத்துக்கும் அதிகமானால் பணிக்கொடை ரூ.30 லட்ச மாகவும் உயரும். இது எவ்வளவு தான் உயர்ந்தாலும் ஒட்டுமொத்த பணிக் கொடைக்கும் வருமான வரி கிடையாது.

ஆனால், பணிக் கொடைச் சட்டம் 1972-க்கு உட்பட்ட ஊழியர் மற்றும் மேற்கண்ட பணிக்கொடைச் சட்டத்துக்கு உட்படாதவர்களுக்கும், பணிக் கொடைக்கான வரி விலக்கு (நிபந்தனையுடன்) ரூ.20 லட்சம் மட்டுமே. இதற்கு மேல் பணிக் கொடை பெறுபவர்கள் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள தொகையை ‘சம்பள வருமானம்’ என்ற கணக்கில் கொண்டு வந்து வரி கட்ட வேண்டும்.

இதே போல், மத்திய - மாநில அரசு ஊழியர், உள்ளாட்சி, சட்டபூர்வ கார்ப்பரேஷன் ஊழியர் பெறும் கம்யூடேசன் முழுவதும் வரிக்கு உட்படாது.

மற்ற சம்பளதாரர்களில் பணிக் கொடை பெறுவோர்க்கு மூன்றில் ஒரு பங்கு தொகையும் பணிக் கொடை இல்லாத ஊழியர் களுக்கு கம்யூடேசனில்இரண்டில் ஒரு பங்கு தொகையும் மட்டுமே வரி விலக்கு பெறும் என்பது முக்கியமான விஷய மாகும்.

வரித் தாக்கல் படிவம்

தற்போது 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான ( நிதியாண்டு 2021-22) வரித்தாக்கல் படிவம் 1 முதல் 6 வெளியிடப்பட்டு விட்டது. சென்ற ஆண்டுக்கான அதே படிவங்கள்தான் இந்த ஆண்டும் உள்ளன. அந்த வகையில் ரூ.50 லட்சம் வருமானத்துக்கு உட்பட்ட மூலதன ஆதாயம் முதலானவை இல்லாத சம்பளதாரர்கள் படிவம்-1 (சஹாஜ்)-ல் வரித் தாக்கல் செய்யலாம்.

முக்கியமாகக் கவனிக்க வேண்டியது...

முந்தைய பகுதிகளில் சொன்னது போல, 2021-22-க்கான சம்பள வருமானம் என்பது அரசு ஊழியர்களுக்கு மார்ச் 21 முதல் பிப்ரவரி 22 வரையான சம்பளம் ஆகும். இதர சம்பளதாரர்களுக்கு ஏப்ரல் 21 முதல் மார்ச் 2022 முடிய உள்ள சம்பளமாக இருக்கும். நிர்வாக காரணங்களாலோ தனிநபர் தவறு காரணமாகவோ, இந்த நிதியாண்டின் கடைசி மாதச் சம்பளம் இதுவரை தரப்படாமல் இருந் தாலும், அந்த சம்பளத்துக்கு உரிய வரியை செலான் மூலம் செலுத்திவிட்டுத்தான் வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

முன்னதாக சுமார் 60 பக்கங்களுக்கு உட்பட்டு இருந்த வருமான வரி சுற்றறிக்கை, இப்போது 127 பக்கங்களாக அதிகரித்துவிட்டது. காரணம், வரிதாரர்களுக்கு விரிவான விளக்கம் தர வேண்டும் என்ற நோக்கம்தான். அவற்றின் முக்கிய அம்சங்களில் சிலதான் மேலே உள்ளவை. கடைப்பிடிப்பது வரிதாரர் கடமை.

75 வயதினர் வரித் தாக்கல் செய்வதில் விலக்கு!

2021 பட்ஜெட்டில் 75 வயதான மூத்த குடிமக்களுக்கு வரித் தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிபந்தனை என்னவெனில், 2021-22 நிதியாண்டின் எந்த ஒரு தேதியிலாவது 75 வயதை அடைந்திருக்க வேண்டும். பென்ஷன் வருமானத்துடன் வட்டி வருமானம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான். வட்டி என்பது எந்த வங்கியில் பென்ஷன் பெறுகிறாரோ, அந்த வங்கி தரும் வட்டியாக மட்டும் இருக்க வேண்டும். இத்தகைய இந்திய மூத்த குடிமக்கள் தன் பெயர், பென்ஷன் ஆணை எண் முதலான விவரங்களுடன் இதர வருமானம் இல்லை என்பதற்கான ‘சுய உறுதிமொழி’ ஒன்றையும் வங்கியில் சமர்ப்பித்து விட்டால், அந்த 75 வயதினர் தன்னிடம் பிடித்தம் செய்யப்பட வரிக்கு வரித் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்பது சலுகை.

வருமானவரித் துறையின் தற்போதைய அறிவிப்பு என்னவெனில், இத்தகைய மூத்த குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட படிவம் 12BBA வரிச் சலுகைக்கான ஆதாரம் மற்றும் உறுதிமொழியையும் வங்கிகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வருமான வரித்துறை கேட்கும்போது சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதாவது, சலுகைக்கு உரியவர் மூத்த குடிமகனாக இருந்தாலும் ஆய்வுக்கு உட்படுவார் என்பதாக உள்ளது. எனவே, இதர வருமானம் உள்ள மூத்த குடிமக்கள் சலுகையைத் தவிர்த்துவிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism