Published:Updated:

வருமான வரி...  புதிய முறை Vs பழைய முறை - உங்களுக்கு ஏற்றது எது?

ஆண்டுச் சம்பளம் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சத்துக்குள் இருக்குமெனில், பழைய வரிமுறையைத் தேர்வு செய்வதே நல்லது.

பிரீமியம் ஸ்டோரி
மாதச் சம்பளதாரர்களுக்கு கொரோனாவுக்கு அடுத்தபடியாக பயமுறுத்தும் விஷயமாக நடப்பு நிதியாண்டு (2020-21) இருக்கிறது. நிறுவனங்கள் இப்போதே அவர்களது சம்பளத்தில் வருமான வரியைப் பிடிக்க (TDS) ஆரம்பித்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் சம்பளதாரர்கள்.
வருமான வரி...  புதிய முறை Vs பழைய முறை - உங்களுக்கு ஏற்றது எது?

“உங்களது சம்பளத்தில் எவ்வளவு வரிப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை இம்மாத இறுதிக்குள் தெரிவித்துவிடுங்கள். இல்லாவிட்டால், அதிகபட்ச வரி விகிதமான 30 சதவிகிதத்தை வரியாகப் பிடித்துவிடுவோம். பிற்பாடு, இதுகுறித்து நீங்கள் கவலைப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல!’’ - இதுமாதிரியான உத்தரவுகளைப் பெரும்பாலும் எல்லா நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு அறிவித்திருக்கின்றன.

வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் டி.டிஎஸ் பிடிப்பது அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு, புதிய வரிமுறை மற்றும் பழைய வரிமுறை இரண்டும் நடைமுறையில் இருப்பதால், நிறுவனங்கள் முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டன.

பழைய வரிமுறையும் புதிய வரிமுறையும்

மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கான தனிநபருக்குரிய வருமான வரியைக் கணக்கிட இரண்டு விதமான வரிமுறையை (Tax regime) ஏற்கெனவே மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. ஒன்று, பழைய வருமான வரிமுறை; மற்றொன்று, புதிய வருமான வரிமுறை. இந்த இரண்டு வரிமுறைகளிலும் வருமான வரி விகிதங்கள் வெவ்வேறாக உள்ளன. (அதன் விவரம் அட்டவணை 1-ல் விரிவாகத் தரப்பட்டிருக்கிறது.)

வருமான வரி...  புதிய முறை Vs பழைய முறை - உங்களுக்கு ஏற்றது எது?

சம்பளதாரர்கள் இந்த இரண்டு வரிமுறைகளில் தங்களுக்கேற்ற ஒரு முறையைத் தேர்வு செய்து, முன்னதாகவே ஒவ்வோர் ஆண்டும் வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அதன்படியே வருமான வரி கணக்கிடப்பட வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி...  புதிய முறை Vs பழைய முறை - உங்களுக்கு ஏற்றது எது?

‘‘புதிய வரிமுறையில் வருமான விகிதங்கள் குறைவாக உள்ளதே. நமக்கு இதுதான் லாபமாக இருக்கும்” என்று குறைவான வரி விகிதத்தை மட்டும் நம்பி, அதைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்காது. காரணம், வருமான வரிச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள மொத்த வருமானம் (Total Income) என்னும் வார்த்தை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மொத்த வருமானம் என்பது...

பழைய வருமான வரி முறையோ, புதிய வருமான வரிமுறையோ எதுவாக இருந்தாலும் உங்கள் வருமான வரியைக் கணக்கிட வேண்டுமெனில், நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, உங்களது மொத்த வருமானம்தான். வருமான வரிச் சட்டத்தில் மொத்த வருமானத்துக்கு எனத் தனி வரையறை உண்டு. இந்த மொத்த வருமானத்துக்கேற்ப உங்கள் வருமான வரி கணக்கிடப்படும்.

வருமான வரி...  புதிய முறை Vs பழைய முறை - உங்களுக்கு ஏற்றது எது?

சம்பளதாரரைப் பொறுத்தமட்டில், மொத்த வருமானம் எனப்படுவது உங்கள் ஆண்டு சம்பளத்திலிருந்து வீட்டு வாடகைப்படிக்கான விலக்கு (HRA Exemption), நிலைக் கழிவு, (Standard Deduction) வீட்டுக் கடன் மீதான வட்டி, (Interest on Housing loan) பிரிவு 80சி முதல் 80யூ வரையிலான முதலீடு போன்ற முக்கியமான வருமான வரிச் சலுகைகள் மற்றும் விலக்குகளைக் கழித்த பிறகு, கிடைக்கும் தொகையாகும்.

இது தவிர, வேறேதும் வருமானங்கள் இருப்பின் (நிரந்த வைப்புத் தொகையின் வட்டி, நிறுவனப் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் மூலமான மூலதன ஆதாயம் போன்றவை) அவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பழைய வரிமுறையில் இப்படி வருமான விலக்காக அறிவிக்கப்பட்டிருந்த பலவற்றை நீக்கிவிட்டுத்தான் புதிய வரிமுறையில், வரி விகிதத்தைக் குறைத்து அறிவித்திருக்கிறார்கள். இப்படி நீக்கப்பட்டவற்றின் பட்டியல் நிலைக் கழிவு, வீட்டு வாடகைப்படி, 80சி முதல் 80யூ வரையிலான பல செலவுகள் மற்றும் முதலீடுகள், வீட்டுக் கடன் மீதான வட்டி (நிதியாண்டில் ரூ.2,00,000 வரை) என்று நீண்டுகொண்டே போகிறது.

எனவே, புதிய வரிமுறையில் கிட்டத்தட்ட சம்பளதாரரின் ஆண்டு மொத்த சம்பளமும் (Annual gross salary) மொத்த வருமானமாகக் கணக்கிடப்படுகிறது. இதனால் வரிவிகிதம் குறைவாக இருந்தும் கட்ட வேண்டிய வரி அதிகமாக இருப்பதால், புதிய வரிக் கொள்கையானது சம்பளதாரர்களுக்கு லாபகரமாக இல்லை.

வருமான வரி...  புதிய முறை Vs பழைய முறை - உங்களுக்கு ஏற்றது எது?

உதாரணமாக, ஒருவருக்கு ஆண்டுச் சம்பளம் ரூ.8,00,000 எனவும் அவர் 80சி-யில் செய்துள்ள முதலீடு ரூ1,50,000 எனவும், நிலைக்கழிவு ரூ.50,000 எனவும் எடுத்துக்கொண்டால் பழைய வருமான வரிக் கொள்கையின்படி, அவரது மொத்த வருமானம் ரூ.6,00,000 (ரூ.8,00,000-50,000-1,50,000) ஆகும். எனவே, அவருக்கான வருமானவரி ரூ.22,500 மட்டுமே. ஆனால், புதிய வரிமுறைப்படி, அவரது மொத்த வருமானம் ரூ.8,00,000 ஆகும். இதற்கான வருமான வரி அதன் குறைவான வரி விகிதத்திலும் ரூ.45,000 ஆக உள்ளது.

உச்சவரம்பு உண்டா?

அரசு ரூ5,00,000 வரைக்கும் வருமான வரி இல்லையென்று அறிவித்திருக்கிறது. இதை ஒரு நிபந்தனையுடன் அமல்படுத்துகிறது. மொத்த வருமானம் ரூ5,00,000-க்குள் இருந்தால் வருமான வரி கட்ட வேண்டியதில்லை. அதற்குக் காரணம், வரி விலக்கு வரம்பல்ல. பிரிவு 87ஏ-யின் கீழ் அளிக்கப்படும் வரித் தள்ளுபடி ஆகும். இந்த வரித் தள்ளுபடி ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருப்பவர்களுக்கு மட்டும்தான். அதாவது, இந்தப் பிரிவின்படி, ஒருவருடைய மொத்த வருமானம் ரூ5,00,000-க்குள் இருந்தால் அவர் கட்ட வேண்டிய வரி முழுவதும் வரி விலக்காகக் கருதப்பட்டு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த வரித் தள்ளுபடி, பழைய, புதிய இரு வரி முறைக்கும் பொருந்தும். மொத்த வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டினால், வழக்கமான முறையில் வரி கணக்கிடப்படும். இவர்களுக்கு இந்தப் பிரிவின்படி வருமான வரி விலக்கு கிடைக்காது. (பார்க்க அட்டவணை-2) (இந்தக் கணக்கீட்டில் 4% ஆரோக்கியம் மற்றும் கல்வித் தீர்வை சேர்க்கப்படவில்லை)

ஒருவரது ஆண்டு சம்பளம் ரூ.5,00,000-க்குள் இருக்குமெனில், அவர் தனது வருமான வரியை எந்த வரிமுறையின்படியும் கணக்கிடலாம். அவர், வருமான வரி கட்ட வேண்டியிருக்காது. பிரிவு 87ஏ-யின்படி முழுவதும் வரி விலக்காகி விடும்.

ஒருவரது ஆண்டுச் சம்பளம் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சத்துக்குள் இருக்குமெனில், அவர் பழைய வரிமுறையைத் தேர்வு செய்வதே நல்லது. உதாரணமாக, ரூ.5,80,000 ஆண்டு சம்பளம் உடைய ஒருவருக்கு புதிய வரி முறைபடி ரூ.20,500 வருமான வரி கட்ட வேண்டும். ஆனால், பழைய வரி முறையைத் தேர்வு செய்திருந்தால், ரூ.18,500 மட்டுமே வரி கட்ட வேண்டியிருக்கும். ரூ.2,000 மிச்சமாகும். 

அதேபோல், ரூ.7,50,000 வரை ஆண்டு சம்பளம் வாங்கும் ஒருவர் பிரிவு 80சி-யில் ரூ1,50,000, பிரிவு 80சிசிடி-யில் ரூ.50,000 முதலீடு மற்றும் ரூ.50,000 வரி விலக்கு பெறும்பட்சத்தில், அவர் பழைய வரிமுறையைத் தேர்வு செய்தாலும் வரி எதுவும் செலுத்தத் தேவை இருக்காது. டி.டி.எஸ் பிடிக்கத் தேவையிருக்காது. ஆனால், அவரே புதிய வரிமுறையைத் தேர்வு செய்யும்பட்சத்தில் ரூ.32,500 வரி கட்ட வேண்டும். 

புதிய வரிமுறையால் வரி விகிதக் குறைப்பு என்பது பார்ப்பதற்கு லாபகரமாகத் தெரிந்தாலும் 1,50,000 ரூபாயை 80சி-யிலும், 50,000 ரூபாயை 80சிசிடி-யிலும் முதலீடு செய்தே பழக்கப்பட்டுப்போன ரூ.15 லட்சம் வரை சம்பளம் பெறும் சம்பளதாரர்களுக்கு, அவற்றை மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ள முடியாது. இவர்களுக்கு பழைய வரிமுறையே பயனுள்ளதாக அமையும்.   

எந்தவொரு முதலீடு செய்யாதவர்களுக்கும் வீட்டுக் கடன் இல்லாதவர்களுக்கும், சம்பளத்தின் ஒரு பகுதியாக வீட்டு வாடகைப்படி, கன்வேயன்ஸ் போன்ற அலவென்ஸ்களை வாங்கதவர்களுக்கு மட்டுமே புதிய வரிமுறை பயனுள்ளதாக அமையும் என்பதை நினைவில்கொள்வது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு