Published:Updated:

விலைவாசியை மேலும் அதிகரிக்கும் ஜி.எஸ்.டி வரி..!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

விலைவாசியை மேலும் அதிகரிக்கும் ஜி.எஸ்.டி வரி..!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

‘‘நாட்டில் மக்களுக்கு ரொட்டித் துண்டு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் ஏன் கேக் சாப்பிடக் கூடாது?’’ - இது, பிரான்ஸ் நாட்டின் அரசி கேட்டதாகக் கூறப்படும் பிரபலமான வரலாற்று வாசகம். இப்படித்தான் நாட்டின் நிலைமை தெரியாமல், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆட்சியை நடத்திக்கொண்டுள்ளன.

கொரோனாவுக்கு முன்பாகவே நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமற்றதாக மாற ஆரம்பித்து, கொரோனா வந்த பிறகு, பலருடைய வாழ்க்கையிலும் வறுமை நிரந்தரமாகக் குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. கார் வைத்திருந்தவர் களேகூட, நடந்து செல்ல வேண்டிய நிலை என்பதுதான் நிதர்சனம். இத்தகைய சூழலில், ‘நின்றால் வரி... நடந்தால் வரி...’ என்ற அளவுக்கு மக்களை வதைக்க ஆரம்பித்துள்ளன மத்திய மற்றும் மாநில அரசுகள். பல விஷயங்களில் இந்த அரசுகள் முரண்பட்டாலும், மக்களின் தலையில் வரி என்கிற பெயரில் கைவைப்பதில் மட்டும் ஒன்றுபட்டு நிற்கின்றன.

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) நடைமுறைக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிந்த நிலையில், கடந்த வாரம் சண்டிகரில் நடைபெற்ற 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகாவது வரி குறையும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்தக் கூட்டத்தில் பலவிதமான பொருள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதம் இஷ்டம்போல உயர்த்தப்பட்டிருப்பது, பலரையும் கொதிக்கச் செய்திருக்கிறது. வீட்டில் சாதாரணமாகப் பயன்படுத்தும் கத்தி, கரண்டிக்கெல்லாம்கூட 18% ஜி.எஸ்.டி வரி போட்டிருக்கிறார்கள்.

மக்களுக்கான நலத்திட்டங்களைக் குறை இல்லாமல் நடத்த வரி என்பது அவசியம்தான். ஆனால், ‘பூவுக்கு வலிக்காமல் வண்டு தேனை எடுப்பதுபோல வரிவிதிப்பு இருக்க வேண்டும்’ என்று சாணக்கியரே சொல்லி வைத்திருக்கிறார். இந்த விஷயம் நிதி அமைச்சருக்கோ, ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினர்களாக இருக்கும் மாநில அமைச்சர்களுக்கோ தெரியாமல் இருக்காது.

மக்களின் அத்தியாவசியத் தேவைப் பட்டியலில் உள்ள பொருள்களுக்கான வரியை உயர்த்திய அதேநேரத்தில், சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் விளை யாட்டுகள், லாட்டரி, குதிரைப் பந்தயம் போன்றவற்றுக்கு 28% வரி விதிக்கும் முடிவை ஒத்திவைத்திருக்கிறார்கள். உண்மையில் தடை செய்யப்பட வேண்டிய விஷயங்களுக்கு வரிவிதிக்கக்கூட மனமில்லாமல், திருடர்களுக்குத் துணைபோய்க் கொண்டிருக்கிறார்கள்.

பணவீக்கம் அதிகமாகிக்கொண்டே செல்வதால், விலைவாசி உச்சத்தில் இருக் கிறது. இதைத் தடுக்க வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது ரிசர்வ் வங்கி. இந்த நிலையில், வரிகளை உயர்த்தினால்... விலைவாசி மேலும் அதிகரிக்கத்தானே செய்யும். மக்கள் பிரதிநிதிகள் என்கிற பெயரில், விலையுயர்ந்த கார்கள், படாடோப வாழ்க்கை, விதவிதமான கொண்டாட்டங்கள் என்று மக்கள் பணத்தில் நடத்தப்படும் செலவுகள் எகிறிக்கொண்டே உள்ளன. மணி மண்டபங்கள், வானுயர்ந்த சிலைகள், பெரும்பெரும் கட்டடங்கள் என்றெல்லாம் செய்யப்படும் தேவையற்ற செலவுகளைப் பட்டியலிட்டால், இன்னும் நூறாண்டுகளுக்குக்கூட வரியை உயர்த்தத் தேவையிருக்காது. முதலில், இதைச் செய்ய முன்வருமா மத்திய-மாநில அரசுகள்?!

- ஆசிரியர்