Published:Updated:

முடிவுக்கு வருகிறதா? - ‘ஒரே நாடு ஒரே வரி’

ஜி.எஸ்.டி
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எஸ்.டி

கூட்டாட்சித் தத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்கிற பொதுவான ஒரு பார்வையுடன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

முடிவுக்கு வருகிறதா? - ‘ஒரே நாடு ஒரே வரி’

கூட்டாட்சித் தத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்கிற பொதுவான ஒரு பார்வையுடன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

Published:Updated:
ஜி.எஸ்.டி
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எஸ்.டி

‘ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு வருவாய் குறைந்துவிட்டது... ஜி.எஸ்.டி பாக்கியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை’ என்று குமுறிக்கொண்டிருக்கும் மாநிலங்களை ஆற்றுப்படுத்தும் வகையில் ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ‘ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது’ என்கிற அந்தத் தீர்ப்பு, என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விவாதிக்கப்பட்டுவருகிறது.

ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க ப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்திருந்தது. அந்த இழப்பீடு முறையாக வழங்கப்படவில்லை என்று மாநிலங்கள் புகார் தெரிவித்துவருகின்றன. வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிற இழப்பீடு வழங்கும் காலத்தை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் வலியுறுத்திவருகின்றன. ஆனால், மத்திய அரசிடமிருந்து உரிய பதில் இல்லை. இந்தத் தருணத்தில், ஜி.எஸ்.டி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கடல்சார் போக்குவரத்துக்கு ஐந்து சதவிகித ஐ.ஜி.எஸ்.டி-ஐ (ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி) விதித்து 2017-ம் ஆண்டு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் அறிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘குஜராத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே’ என்று தற்போது தீர்ப்பளித்திருக்கிறது.

முடிவுக்கு வருகிறதா? - ‘ஒரே நாடு ஒரே வரி’
lakshmiprasad S

“சட்டப் பிரிவு 246ஏ-ன்கீழ், வரி விதிப்பு விவகாரத்தில் சட்டம் இயற்றுவதற்கு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இணையான அதிகாரம் உள்ளது. அந்த வகையில், இரு அரசுகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இணக்கமான தீர்வை ஜி.எஸ்.டி கவுன்சில் வகுக்க வேண்டும். பரிந்துரைக்கும் அதிகாரம் மட்டுமே ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு இருக்கிறது. அதன் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது” என்பதுதான் தீர்ப்பின் முக்கிய சாராம்சம். தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளன. ஓராண்டுக்காலமாக ஜி.எஸ்.டி குறித்து காட்டமான விமர்சனங் களை முன்வைத்துவந்த தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாநில உரிமைகளை நிலைநிறுத்தியிருக் கிறது” என்று கூறி வரவேற்றுள்ளார்.

இந்தத் தீர்ப்பு குறித்து கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் முக்கியமான கருத்தைத் தெரிவித்துள்ளார். “ஒரே நாடு ஒரே வரி என்கிற நடைமுறையிலிருந்து ஒட்டுமொத்த தேசத்தையும் விடுவிக்கிற ஒரு முக்கியமான தீர்ப்பாக இதைப் பார்க்கிறேன். இந்தத் தீர்ப்பின் மூலமாக, நேர்மறையான சில விஷயங்களை மாநிலங்களால் அமல்படுத்த முடியும்” என்பதுதான் அவரது கருத்து.

பாலச்சந்திரன்
பாலச்சந்திரன்

இந்தத் தீர்ப்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பாலச்சந்திரனிடம் கேட்டோம். “மாநில அரசுகளை மட்டம்தட்டுவதை மத்திய அரசு வழக்கமாகக்கொண்டிருக்கிறது. மாநிலங்களின் நிர்வாகரீதியிலான உரிமைகளையும், நிதி சம்பந்தமான அதிகாரங்களையும் குறைப்பதற்கான வேலைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இத்தகைய சூழலில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ‘நாங்கள்தான் சட்டாம்பிள்ளை... நாங்கள் வைத்ததுதான் சட்டம்’ என்ற மனநிலையுடன் இனி மத்திய அரசு செயல்பட முடியாது. ஜி.எஸ்.டி கவுன்சிலின் முடிவுகள் மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என்கிற தோற்றம் இதுவரை இருந்தது. ஜி.எஸ்.டி கவுன்சிலில் முடிவெடுத்துவிட்டால், அதுதான் இறுதி... அதைக் கட்டாயம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், ஜி.எஸ்.டி கவுன்சிலின் முடிவுகள் வெறும் பரிந்துரைகள்தான் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே, ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஏற்கலாம் அல்லது ஏற்காமலும் போகலாம். அதற்கான உரிமை அந்த அரசுகளுக்கு உண்டு. இனிமேல், மாநிலங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வரிகளை விதிக்கிற நிலை ஏற்படலாம். மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்” என்கிறார் பாலச்சந்திரன்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்

இது குறித்து வலதுசாரி, அரசியல் விமர்சகர் எஸ்.எஸ்.ஸ்ரீராமிடம் பேசினோம். “கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில்தான் ஜி.எஸ்.டி கவுன்சில் இயங்குகிறது. இந்த நிலையில், கூட்டாட்சித் தத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்கிற பொதுவான ஒரு பார்வையுடன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஜி.எஸ்.டி கவுன்சிலையோ, மத்திய அரசையோ உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறை சொல்லவில்லை. அனைத்து மாநிலங்களின் சம்மதத்துடன்தான் ஜி.எஸ்.டி முறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக நாடு முழுவதும் ஒரே வரி என்பது அமலானது. ஜி.எஸ்.டி கவுன்சிலில் உறுப்பினர்களாக இடம்பெற்றிருக்கும் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் சேர்ந்தே ஜி.எஸ்.டி கவுன்சிலில் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள். பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அப்படியிருக்கும்போது, ‘மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது... மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது’ என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை” என்கிறார் எஸ்.எஸ்.ஸ்ரீராம்.

இந்தத் தீர்ப்பின் விளைவாக, ‘ஒரே நாடு ஒரே வரி’ முறை முடிவுக்கு வருமா.... மாநிலங்களின் வரிவிதிக்கும் அதிகாரம் அதிகரிக்குமா என்ற கேள்விகளுக்கு விடைகாண சில காலம் காத்திருக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism