டாக்டர் அபிஷேக் முரளி , ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்
நம்மில் பெரும்பாலானோர் நிதி ஆண்டு முடிந்ததும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தாலும், சில வருமான விவரங்களைக் குறிப்பிட மறந்துவிடுகிறோம். பின்னர், இது வருமான வரித் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப் படும்போது தேவையில்லாத மன உளைச்சலும் நேரமும் செலவாகிறது.

புதுப்பிக்கப்பட்ட வருமானவரிக் கணக்குத் தாக்கல்..
இந்த நிலையில், 2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுப் பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்குத் தாக்கல் (Updated Income Tax Return Filing) என்கிற திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன்படி, தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் (Assessment Year) முடிவிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விடுபட்ட வருமானத்தைக் கணக்கில் காட்டி வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய முடியும்.
இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால், எளிதில் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, நிதி ஆண்டு 2020-21–ஐ எடுத்துக்கொள்வோம். நிதி ஆண்டு 2020-21 என்பது 2020 ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி 2021 மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவு பெற்றதாகும். இந்த நிதி ஆண்டுக்கான (2020-21) மதிப்பீட்டு ஆண்டு 2021-22 ஆகும். அதாவது, 2021 ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி 2022 மார்ச் 31 ஆகும். இந்த மதிப்பீட்டு ஆண்டு முடிவிலிருந்து அதாவது, 2022 ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி, இரண்டு ஆண்டுகள் 2024 மார்ச் 31-ம் தேதி வரைக்கும் புதுப்பிக்கப்பட்ட வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது பிழைகள் அல்லது தவறுகளைச் செய்யும் வரி செலுத்துவோருக்கு இந்தப் புதிய விதிமுறை உதவும்.

கவனிக்க வேண்டிய அம்சங்கள்...
புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சங்கள் வருமாறு:
புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கான படிவம் ஐ.டி.ஆர்-யு (ITR-U) ஆகும். இந்தப் படிவத்தில், வருமான வரி செலுத்து வோர் வரிக் கணக்கைப் புதுப்பித்து தாக்கல் செய்வதற்கான நோக்கத்தையும், புதுப்பிக்கப் பட்ட வருமானத்தையும் தெரிவிக்க வேண்டும்.
2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டு களுக்கான புதுப்பிக்கப்பட்ட வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய, வருமான வரி செலுத்துவோர் இப்போது ஐ.டி.ஆர்-யு படிவத்தைப் பயன்படுத்தலாம்.
வரி செலுத்துவோர் தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் ஐ.டி.ஆர் படிவத்தைத் தாக்கல் செய்து, கூடவே புதிய ஐடிஆர்-யு படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மொத்த வரி குறைக்கப்பட வேண்டும், இழப்புகள் வருமானத்துக்கு எதிராக ஈடுசெய்யப்பட வேண்டும் (Losses to be offset against income), கூடுதலாகக் கட்டிய வரியைத் திரும்பப் பெறுவது (Refund) அல்லது திரும்பப் பெறும் வரித் தொகையை அதிகரிக்க ஐ.டி.ஆர்-யு படிவத்தைத் தாக்கல் செய்ய முடியாது.
கூடுதல் வருமான வரி
புதுப்பிக்கப்பட்ட வரிக் கணக்கை, தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் முடிவிலிருந்து ஒரு வருடத்துக்குள் (12 மாதங்கள்) தாக்கல் செய்தால், வரி செலுத்துவோர் கூடுதலாக 25% வரி மற்றும் வட்டியைச் செலுத்த வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட வரிக் கணக்கை, தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் முடிவிலிருந்து ஒரு வருடத்துக்குப் பிறகு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்து 24 மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்தால், வரி செலுத்துவோர் கூடுதலாக 50% வரி மற்றும் வட்டியைச் செலுத்த வேண்டும்.
கூடுதல் வரியைச் செலுத்தத் தவறினால், புதுப்பிக்கப்பட்ட வரிக் கணக்கு தாக்கல் செல்லாததாகக் (Invalid) கருதப்படும்.
புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய காரணங்கள்...
வரி செலுத்துவோர், புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காரணங் களைத் தெரிவிக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, முந்தைய ஆண்டு வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதது, வருமானத்தை சரியாகக் காட்டாதது, தவறான பிரிவின் கீழ் வருமானத் தைக் குறிப்பிட்டது, அடுத்து வரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லும் இழப்பை (carried forward loss) தவறாகக் குறிப்பிட்டது, தவறான விகிதத்தில் வரி கட்டியது போன்ற காரணங்களாக இருக்கலாம்.
வரிதாரர் ஒரு நிதியாண்டுக்கு ஒருமுறை மட்டுமே புதுப்பிக்கப்பட்ட வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். எனவே, அதை மிகவும் கவனமாக மேற் கொள்வது அவசியம்!