Published:Updated:

நெருங்கிவரும் டாக்ஸ் ஃபைலிங்! - கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

2019-20-ம் நிதியாண்டுக்கு டாக்ஸ் ஃபைலிங் செய்வதற்குக் கடைசித் தேதி 30.11.2020 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

பிரீமியம் ஸ்டோரி
நிறைவடைந்த 2019-20-ம் நிதியாண்டின் கடைசிப் பகுதியில் கொரோனாவின் தாக்கம் குறுக்கிட்டதால், வரி சேமிப்பு நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மத்திய அரசு மூன்று மாத கூடுதல் அவகாசம் வழங்கியது. இந்த மாதம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது இந்த ‘கிரேஸ்டைம்.’

இதுநாள் வரை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இருந்தவர்களும்கூட எஞ்சியுள்ள நாள்களில் வருமான வரிப் பிரிவு 80 சி முதல் 80 யூ வரையான வரி சேமிப்பு இனங்களைப் பூர்த்தி செய்து, வருமான வரியைக் குறைத்துக்கொள்ளலாம்.

நெருங்கிவரும் டாக்ஸ் ஃபைலிங்! - கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், சம்பளத்திலேயே பிடித்தம் செய்யப்படும் வரி சேமிப்பு இனங்களான பி.எஃப்., மருத்துவக் காப்பீட்டு பிரீமியம், ஆயுள் காப்பீட்டு பிரீமியம், பி.எல்.ஐ பிரீமியம், வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி, என்.பி.எஸ்., சி.பி.எஸ் ஆகியவை இந்தக் கூடுதல் அவகாசத்துக்கு உட்பட்டவையல்ல. அதாவது, ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை தரப்பட்ட மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் மேற்கண்ட இனங்களை 2019-20-ம் நிதியாண்டின் வரி சேமிப்புக்குப் பயன்படுத்த முடியாது.

சம்பளத்துக்கு வெளியே, அவரவர் கையிலிருந்து செய்யப்படும் செலவு, சேமிப்பு முதலானவை மட்டுமே கூடுதல் அவகாசச் சலுகை பெறும் தகுதிகொண்டவை. அதாவது, தொழில் வரி, இன்ஷூரன்ஸ் பிரீமியம், பி.பி.எஃப்., சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ருதித் திட்டம், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீடு, ஆனுயிட்டி பிரீமியம், ஐந்தாண்டு பேங்க் டெபாசிட், கல்விச் செலவு, கல்விக் கடன் வட்டி, வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி, என்.பி.எஸ்., நன்கொடை, மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்யப்படும் செலவு, தீவிரநோய்ச் சிகிச்சைக்கான செலவு, உபரியான மருத்துவக் காப்பீடு முதலியவை அவகாசச் சலுகை பெறும் தகுதிகொண்டவை.

டாக்ஸ் ஃபைலிங்
டாக்ஸ் ஃபைலிங்

கொரோனாவுக்கான பி.எம்.கேர்ஸ் (PM CARES) நிவாரண நிதிக்குச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஒரு நாள் சம்பளத்தை, பிரிவு 80ஜி–யின்கீழ் 2019-20-ம் நிதியாண்டு வரிச் சலுகைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ப்ளஸ்ஸும் மைனஸும்

இவை அனைத்தும் நீட்டிப்பு செய்யப்பட்ட வரி சேமிப்புக் கணக்கில் பெறக்கூடிய சாதகமான சலுகைகள். இதற்கு எதிர்மறையான நிகழ்வும் உண்டு. அதாவது, நிதியாண்டு என்பது ஏப்ரல் முதல் தேதி முதல் மார்ச் 31 வரைதான். ஆனால், அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, மார்ச் முதல் பிப்ரவரி வரையிலான சம்பளத்தை ஒரு நிதியாண்டில் பெறுவார்கள். மற்றவர்கள் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான சம்பளத்தை ஒரு நிதியாண்டில் பெறக்கூடும். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், ஒரு நிதியாண்டுக்கான வருமான வரி என்பது அந்த நிதியாண்டுக்குள் பெற்றுக்கொண்ட சம்பளத்துக்கு மட்டுமல்ல, அந்த நிதியாண்டுக்குள் பெற வேண்டிய சம்பளம், போனஸ், கமிஷன், சன்மானம், சம்பளத்துக்கு பதில் தரப்படும் மொத்தத் தொகை, ஆனுயிட்டி, பென்ஷன், விடுப்புச் சம்பளம் ஆகிய அனைத்துக்கும் சேர்த்துக் கணக்கிடப்படவேண்டும் என்பதே ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே, மார்ச் மாத இறுதியில் கொரோனா குறுக்கிட்ட காரணத்தால், மேற்கண்ட வருவாய் இனங்களில் எதுவாயினும் மார்ச் 31-க்குள் தரப்படாமல் பின்னர் தரப்பட்டிருந்தாலும், இன்று வரை தரப்படாமல் நிலுவையில் இருந்தாலும், அதையும் வருமான வரிக் கணக்கில் சேர்த்துக்கொண்டு தான் வருமான வரியைக் கணக்கிட வேண்டும் என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

டாக்ஸ் ஃபைலிங்
டாக்ஸ் ஃபைலிங்

இதில் விடுபடல் ஏதும் இருந்தால், விடுபட்ட தொகைக்கும் சுயமதிப்பீட்டு (Self Assessment) முறையில் வருமான வரியை வங்கி மூலம் செலுத்த வேண்டும். அவ்வாறு பணம் செலுத்தும்போது பணம் செலுத்தும் செலானில் மதிப்பீட்டு ஆண்டை (Assessment Year) குறிப்பிட வேண்டும். 2019-20-ம் நிதியாண்டுக்கு, `மதிப்பீட்டு ஆண்டு 2020-21’ எனக் குறிப்பிடுவது முக்கியம்.

இந்த நடைமுறைகளைச் செய்து முடித்த பிறகுதான் வரிக் கணக்கைச் சரிபார்க்க வேண்டும்.

புதுப்பிக்கப்பட்ட 26 ஏ.எஸ் படிவம்

வங்கிச் சேமிப்பை சரிபார்க்க ‘பாஸ்புக்’ இருப்பதுபோல், வரிக் கணக்கைச் சரிபார்க்க வருமான வரித்துறையின் வலைதளத்தில் உள்ளதுதான் 26 ஏ.எஸ் (26As) படிவம். அதாவது வரிதாரர் ஒருவர் தனது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி, தாமே சுயமாகக் கணக்கிட்டுச் செலுத்திய (Self Assessment Tax) வரி, அட்வான்ஸ் டாக்ஸ் முதலானவை சரியாக இருக்கின்றனவா என்பதை 26 ஏ.எஸ் படிவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதில் தவறு ஏதும் இருந்தால் சம்பளம் தரும் அதிகாரி மற்றும் தொடர்புடைய வருமான வரித்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விடுபடல் அல்லது தவறாகப் பதிவாகியிருப்பதைச் சரிசெய்து பதிவு செய்துகொள்ளலாம். இந்தப் படிவமானது இந்த மாதத்தில் (2020 ஜூன்) மேம்படுத்தப்பட்டுள்ளது. பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி விவரங்களுடன், வருமான வரி ரீஃபண்ட், வரித்துறை அனுப்பிய நோட்டீஸ், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பணப் பரிவர்த்தனைகளும் படிவம் 26 ஏ.எஸ்-ல் பட்டியலிடப்படுகின்றன. இந்தத் தகவல் அனைத்தும் ஒருவரின் ‘பான்’ எண் அடிப்படையில் திரட்டப்படுபவை. எனவே, டாக்ஸ் ஃபைலிங் செய்வதற்கு முன்னர் நன்கு பரிசீலித்து, அதன் பிறகே ஃபைல் செய்வது நல்லது.

டாக்ஸ் ஃபைலிங் செய்வதற்கு முன்னர், இந்தத் தகவல்களையெல்லாம் நன்கு புரிந்துகொண்டு, வரி விடுபாடு இருக்குமானால் விடுபட்ட தொகையை வருமான வரிக்கணக்கில் செலான் மூலம் செலுத்தி, வரிக்குறை நீங்கிய டாக்ஸ் ஃபைலிங் செய்வது அவசியமானது.

கடைசித் தேதி!

டாக்ஸ் ஃபைலிங்
டாக்ஸ் ஃபைலிங்

2019-20-ம் நிதியாண்டுக்கு டாக்ஸ் ஃபைலிங் செய்வதற்குக் கடைசித் தேதி 30.11.2020 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2017-18-ம் நிதியாண்டு வரை படிவம் 16, மே மாதம் வழங்கப்பட்டது. எனவே, அதிலிருந்து இரண்டு மாதம் கழித்து ஜூலை 31, டாக்ஸ் ஃபைலிங் செய்ய கடைசித் தேதியாக இருந்தது. தற்போது 2019 -20-ம் நிதியாண்டுக்கு படிவம் 16, ஜூன் மாதம் தரப்பட வேண்டும். அதன் பிறகு வழக்கமான அவகாசம் இரண்டு மாதம், கொரோனா காரணமாக வரி சேமிப்புக்குத் தரப்பட்ட கூடுதல் அவகாசம் மூன்று மாதம் எனில் நவம்பர் 30 கடைசித் தேதி ஆகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு