Published:Updated:

வரிச் சலுகை இல்லை... சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம் தந்த பட்ஜெட்! வீடு வாங்க கடன் சலுகை நீட்டிப்பு..!

பட்ஜெட் 2021 - TAX

பிரீமியம் ஸ்டோரி

உலகெங்கிலும் கொரோனா தொற்றால் பொருளாதார மந்தநிலை இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார சுமையைக் குறைக்க, ‘கோவிட் வரி’ வரக்கூடும் என்று மக்கள் பயந்த நிலையில், இதுபோன்று எந்தப் புதுச்சுமையும் இல்லாமல் மத்திய பட்ஜெட் தாக்கலாகியிருக்கிறது.

ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி வாயிலாகப் பெறப்படும் வரி வருவாய்தான் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமான அடித்தளம். அதை கருத்தில்கொண்டே மத்திய அரசு தொடர்ந்து, இந்த இரண்டிலும் வருவாய் அதிகரிப்புக்கான கதவுகளைத் திறந்துகொண்டே இருக்கிறது. அது தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் 2021-22-லும் காணமுடிகிறது.

ஜி.கார்த்திகேயன் 
ஆடிட்டர்
ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர்

டி.டி.எஸ் - கூடுதல் சுமை

வரும் ஜூலை 1-ம் தேதியிலிருந்து ரூ.50 லட்சத்துக்கு மேல் கொள்முதல் செய்யப்படும் பொருள்களுக்கு 0.01%, டி.டி.எஸ் (Tax Deducted at Source) பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் பெரிய தொகையாக இல்லாவிட்டாலும், வரிதாரர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். காரணம், வரி வசூலுக்கு ஆதாரமாக இருக்கும் பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற் காகவே இது கொண்டுவரப்படுகிறது, இனி வருமான வரித் துறை இந்த நடவடிக்கையில் இறங்க இருக்கிறது. ஆனால், அது அவசியமற்றதாகவே கருதப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.டி மூலம் இதைக் கண்காணிக்க முடியும். பிறகு எதற்காக புதிய நடைமுறை என்கிற கேள்வி பலருக்கும் எழவே செய்கிறது.

சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம்

வருமான வரிவிதிப்பைப் பொறுத்த வரை, தனிநபர் வருமான வரம்பு உயர்த்தப்பட்டிருக்கலாம். கொரோனா ஊரடங்கு காலத்தில் சம்பளக் குறைப்பு, வேலை இழப்பு, தொழில் இழப்பு காரணமாக, கையில் பணப்புழக்கம் இல்லாமல், நடுத்தர மற்றும் சம்பளக் காரர்கள் தவித்துவரும் நிலை உள்ளது.

கொரோனா தொற்றுக்குப் பிறகு, அத்தியாவசியப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் உட்பட பல பொருள்களின் விலை கணிசமாக, காரணமின்றி உயர்ந்திருக்கிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில், வருமான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டிருந்தால், வரியாகச் செலுத்துவதில் மிச்சமாகும் பணத்தையும் மக்கள் செலவு செய்வார்கள். அதன் மூலமும் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதைக் கருத்தில் கொண்டாவது, தனிநபர் வருமான வரி உச்சவரம்பை அதிகரித்திருக்கலாம். ஆனால், அந்த அறிவிப்பு வரவே இல்லை. இது ‘மிடில் கிளாஸ்’ மக்களுக்கு ஏமாற்றமே.

5 சதவிகிதத்துக்கும் குறைவாக ரொக்கப் பணப் பரிவர்த்தனை உள்ள நிறுவனங்களுக்கு கட்டாய வரித் தணிக்கை (டாக்ஸ் ஆடிட்டிங்) வரம்பு ரூ.5 கோடி யிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு...

ஓய்வூதியம் மற்றும் டெபாசிட் வட்டி வருமானம் பெறும் 75 வயதாகும் முதியவர்கள், இனி வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை. அந்த நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. ஆனால், ஓய்வூதியம், வட்டி வருமானம் இரண்டும் ஒரே வங்கியிலிருந்து பெறப்பட வேண்டும் என்று அறிவித்திருப்பது, முதியவர் களுக்கு முழுப்பலன் அளிக்குமா என்று யோசிக்க வைக்கிறது. மேலும், வட்டி வருமானத்துக்கு டி.டி.எஸ் பிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், டாக்ஸ் ஃபைல் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகவே செய்யும். இதைத் தவிர்க்க மூத்த குடிமக்கள் முன்கூட்டியே 15 ஹெச் படிவத்தை வங்கியில் நிரப்பிக் கொடுப்பது அவசியம்.

டாக்ஸ்
டாக்ஸ்

வீடு வாங்க வாய்ப்பு

வாங்கக்கூடிய விலையில் அதாவது, ரூ.45 லட்சத்துக்குள், 2022 மார்ச் 31-ம் தேதி வரை வாங்கப்படும் வீட்டுக் கடன் களுக்கு ரூ.1.5 லட்சம் கூடுதல் வட்டி வரி விலக்கு (பிரிவு 80EEA) அளிக்கப்பட்டிருக்கிறது. இது கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும். மேலும், சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்கிற கனவில் உள்ள நடுத்தர மக்களுக்கு நிம்மதி அளிக்கும். இந்தச் சலுகைக் காலத்தைப் பயன்படுத்தி, புது வீட்டை சொந்தமாக்கிக் கொள்வது மகிழ்ச்சியளிக்கும்.

இனி தப்பமுடியாது...

வருமான வரி போர்ட்டலில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள ‘ப்ரீ ஃபில்டு ஃபார்ம்’ (pre-filled form) அதாவது, முன்கூட்டியே நிரப்பப்படும் படிவத்தில் சம்பளம், மூலதன ஆதாயம் (Capital gain), டிவிடெண்ட், வட்டி வருமானம், டி.டி.எஸ் போன்ற விவரங்கள் வரி தாரர்களின் தளத்தில் தாமாகவே முன்கூட்டியே நிரப்பப் பட்டுவிடும். இதனால் வரி செலுத்தும்போது, தகவல்கள் விடுபட வாய்ப்பு இல்லை. இந்த நடவடிக்கைகளால், வருமான வரித்துறைக்கு வசூல் அதிகரிக்கும்.

டிவிடெண்ட் தொகைக்கு வருமான வரிப் பிடித்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். டிவிடெண்ட் வருமானத்தின் மீதான, முன்னரே செலுத்தப்படும் வரி பொறுப்பானது, டிவிடெண்ட் அறிவித்த பின் அல்லது டிவிடெண்ட் செலுத்திய பின்னரே எழும். வருமான வரிக் கணக்குகளை மறுதணிக்கை செய்யும் காலம் ஆறு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டிருப்பது வரிதாரர்களது சுமையைக் குறைக்கும்.

வரி அதிகாரிகளுக்கும் சாமானியர் களுக்கும் இடையிலான தொடர்புகளை முகமற்றதாக மாற்றுவதற்கான முயற்சிக்கு ஏற்ப, ஐ.டி.ஏ.டி-க்கு (Income Tax Appellate Tribunal) மேல்முறையீடு செய்ய முகமற்ற மதிப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சம் வரை மொத்த வருமானம் மற்றும் சர்ச்சைக்குரிய வருமானம் ரூ.10 லட்சம் வரை உள்ளவர்களுக்கு இந்த முறையில் தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு தன்னுடைய வருமானத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக நேரடியாக வரிகளைக் கொண்டுவராமல் மறைமுகமாகக் கொண்டுவந்திருக்கிறது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது அடுத்த பட்ஜெட்டில் தெரிந்துவிடும்.

என்.ஆர்.ஐ-களுக்கு சலுகைகள்..!

என்.ஆர்.ஐ (வெளிநாட்டு வாழ் இந்தியர்) குடிமக்கள், இரட்டை வரி விதிப்பு முறைக்கு ஆளாவதைத் தவிர்க்க, புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. என்.ஆர்.ஐ தனிநபர் நிறுவனம் தொடங்க ஒரு வருடத்தில் 120 நாள்கள் இந்தியாவில் இருப்பது போதுமானது. முன்பு இது 182 நாள்கள் என்று இருந்தது.

பிட்ஸ்

ஃப்ராங்க்ளின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த சிறு முதலீட்டாளர் களுக்கு அடுத்த 20 நாள்களுக்குள் ரூ.9,122 கோடி திரும்ப வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு