Published:Updated:

இந்த மாதத்துக்குள் வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால்..? - அனைத்து வரிதாரர்கள் கவனத்துக்கு...

TAX FILING

பிரீமியம் ஸ்டோரி
ண்டுதோறும் ஜூலை 31-க்குள் செய்யப்பட்டு வந்த வருமான வரித் தாக்கல் கொரோனா பேரிடர் காரணமாக டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, சம்பளதாரர்கள் உள்ளிட்ட இதர வரிதாரர்கள் 2019-20-ம் நிதியாண்டுக்கு 31.12.2020-க்கு முன் வரித்தாக்கல் செய்துவிட வேண்டும் (31.01.2021 வரை கடைசி தேதி என்பது கணக்குத் தணிக்கைக்கு உட்பட்ட வரிதாரர்களுக்கு உரியது).

வரித் தாக்கலுக்குரிய தேதிக்குள் (அதாவது, டிசம்பர் இறுதிக்குள்) வரித் தாக்கல் செய்யாமல், அதற்குப் பிறகு வரித்தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். அபராதமே இல்லாமலே வரித் தாக்கல் செய்ய நீங்கள் நினைத்தால், உடனடியாக அந்தக் காரியத்தில் இன்றே இறங்குவது அவசியம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

யாரெல்லாம் வரி தாக்கல் செய்ய வேண்டும்?

ரூ.5 லட்சத்துக்குமேல் வருமானம் உள்ளவர்கள்தாம் வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது தவறான தகவல். வரி வரம்புக்கு மேல் ஒட்டுமொத்த வருமானம் உள்ள அனைவரும் வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பதே சரியான தகவல்.

வரி வரம்பு என்பது 60 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், 60 வயதை அடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், 80 வயதை எட்டியவர் களுக்கு ரூ.5 லட்சமும் ஆகும். இந்த வரம்புக்குமேல் ஒட்டுமொத்த வருமானம் உள்ள அனைவரும் வரி தாக்கல் செய்வது கட்டாயம்.

வரிக் கணக்கீட்டை எப்படிச் செய்வது?

ஒருவரது சம்பள வருமானம் 3,10,000 என வைத்துக்கொள்வோம். இவருக்கான வீட்டு வாடகைப்படி சலுகை + ஸ்டாண்டர்டு டிடெக் ஷன் + தொழில் வரி = 65,000 ரூபாய். நிகர சம்பள வருமானம் = 2,45,000 ரூபாய். நிகர சம்பள வருமானத்துடன் இவருக்கு வங்கி வட்டியாக 9,000 ரூபாய் வருமானமும் உள்ளது. இதையும் சேர்த்தால் இவரது ஒட்டுமொத்த வருமானம் 2,54,000. இது வரி வரம்புக்கு மேற்பட்ட ஒட்டுமொத்த வருமானம் என்பதால், இவர் கட்டாயம் வரி தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரிக் கழிவுகள்...

80-C முதல் 80-U வரையான வரிக் கழிவுகளைக் கழிப்பதற்கு முன் உள்ள வருமானம்தான் ஒட்டுமொத்த வருமானம். அதற்குத்தான் வரி தாக்கல் தொகையைக் கணக்கிட வேண்டுமே தவிர, வரிக் கழிவுகளைக் கழித்த பிறகு உள்ள தொகைக்குக் கணக்கிடுவது தவறு. (பார்க்க, அட்டவணை 1 & 2). அதாவது, இவரது ஒட்டுமொத்த வருமானமாக உள்ள 2,54,000 ரூபாயில், பிரிவு 80 TTA-யின் படி, இவரது வட்டி வருமானத்துக்கு வரிச்சலுகை உண்டு. அதன்படி 2,54,000 ரூபாயில் வட்டி வருமானம் 9,000 ரூபாயைக் கழித்து விட்டால், இவரது வரிக்கு உரிய வருமானம் 2,45,000 ரூபாயாகத்தான் இருக்கும். இந்தத் தொகைக்கு இவர் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இவர் வரி செலுத்துவதிலிருந்து மட்டும்தான் விடுபடலாமே தவிர, வரி தாக்கலிலிருந்து விடுபட முடியாது.

இந்த மாதத்துக்குள் வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால்..? - அனைத்து வரிதாரர்கள் கவனத்துக்கு...

புதிய விதி

2019-20-ம் நிதியாண்டில் வரி தாக்கலுக் கான விதிகள் மேலும் விரிவடைந்துள்ளன. அடுத்துவரும் மூன்று வகை பணப் பரிவர்த்தனை உடையவர்கள், அவர்களது வருமானம் வரி வரம்புக்குக் கீழே இருந்தாலும் வரி தாக்கல் செய்ய வேண்டும்.

1. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நடப்புக் கணக்குகளில் 2019-20-ம் நிதி ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள்.

2. தனக்காகவோ பிறருக்காகவோ வெளிநாட்டுப் பயணத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தவர்கள்.

3. மின் கட்டணமாக மொத்தத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்தவர்கள்.

மேற்கண்ட ஏதேனும் ஒரு பணப் பரிவர்த்தனை செய்திருந்தால், 60 வயதுக்கு உட்பட்டவரின் வருமானம் வரி வரம்புக்குக்கீழ். அதாவது, ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தாலும், 60 வயதுக்கு மேற்பட்டவரின் வருமானம் ரூ.3 லட்சத்துக்குக் குறைவாக இருந்தாலும், 80 வயதினரின் வருமானம் ரூ.5 லட்சத்துக்கு கீழ் இருந்தாலும்கூட வரி தாக்கல் செய்தாக வேண்டும்.

இந்த மாதத்துக்குள் வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால்..? - அனைத்து வரிதாரர்கள் கவனத்துக்கு...

இதர வருமானம்..!

1. வீட்டுச் சொத்து வருமானம். 2. வட்டி வருமானம். 3. குடும்ப பென்ஷன் மூலம் வருமானம். 4. வருமானவரி ரீஃபண்ட் தொகை. 5. மேற்கண்டவை அல்லாத இதர வருமானம் ஆகியவை இதர வருமானமாக உள்ளன. இவற்றுள் வருமான வரி ரீஃபண்ட் தொகையை மறக்காமல் குறிப்பிடுவது அவசியம். ஏனெனில், இதுபற்றிய விவரம் வருமான வரித்துறையிடமே இருக்கும். வங்கிகள் அஞ்சலகம் மூலம் பெறும் வட்டி வருமானமும் படிவம் 26 AS-க்கு வந்துசேர்ந்து விடும்.

வீட்டுச் சொத்து வருமானம் என்பது வாடகைக்கு விடப்பட்ட வீட்டுக்குக் கிடைக்கும் வாடகை. இதில் உள்ளாட்சி வரி, 30% நிரந்தரக் கழிவு போன்றவற்றைக் கழித்தது போக நிகர வருமானம் இதர வருமானத்தில் பிளஸாக இருக்கும். வாடகைக்கு விடப் படாத, வீட்டுக் கடன் வாங்கி கட்டிய அந்த வீட்டிலேயே குடியிருந்து கொண்டு, கடனுக்கு வட்டி கட்டி வந்தால் வருமானம் மைனஸாக இருக்கும்.

இவற்றுள் முக்கியமானது குடும்ப பென்ஷன். ஏனென்றால், தற்போதைய நிலையில் ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.17,67,000 வரை பெறக்கூடிய இனம் குடும்ப பென்ஷன். இதில் அதிகபட்சக் கழிவு ரூ.15,000 போக, நிகரத் தொகை வரி தாக்கலில் சேர்க்கப்பட்டு வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குடும்ப பென்ஷன் மட்டுமே பெறுபவர் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.

அபராதம் உஷார்..!

வருமான வரித் தவறுகள் 49 வகையாக உள்ளன. அதிகபட்ச அபராதம் ரூ.5 லட்சமாக உள்ளது. சில தவறுகள் சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்வதாகவும் உள்ளன. எனவே, விடுபாடு, குறைபாடு இல்லாமல் வரிக் கணக்கை நிறைவு செய்து வரி தாக்கல் செய்வது அவசியம்.

ஒரு குறிப்பிட்ட வருமானத்தை இதுவரை தெரிவிக்காமலே இருந்துவிட்டோமே என்பதற் காக இதற்கு மேலும் தெரிவிக் காமல் இருப்பது நல்லதல்ல. ஏனெனில், நமது வருமான வகைகளைத் தெரிந்து கொள்ள வும், உறுதிசெய்து கொள்ளவும் பல்வேறு தகவல் முனையங் களைக் கொண்டுள்ளது வருமான வரித் துறை. எனவே, வருமான வரித் துறையை ஏமாற்ற நினைப்பது சிறுபிள்ளைத் தனம்.

சகாஜ் - I படிவம்

வரி தாக்கல் செய்வதற்கான படிவங்கள் ஏழு வகையாக உள்ளன. அவற்றில் உரிய படிவம் எது என்பது புரியாமல் வரி தாக்கல் செய்பவர்கள் கணிச மான எண்ணிக்கையினராக உள்ளனர்.

சகாஜ் – I படிவம் 50 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வருமானத் துடன், கீழ்காணும் வருமான வகைகள் கொண்டவர்களுக்கு உரியது. 1. சம்பளம் அல்லது பென்ஷன் வருமானம். 2. (ஒரு) வீட்டு வாடகை வருமானம். 3. இதர வருமானம்.  

வரிதாரர் தன் மனைவி மற்றும் மைனர் பிள்ளைகளின் வருமானம் மேற்கண்ட வகைப்பட்டதாக இருந்தால் அதையும் சேர்த்து தாக்கல் செய்ய இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம், சென்ற ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சகாஜ்-I படிவம் சென்ற 2018-19-ம் நிதியாண்டுக்கு மட்டுமே. அதேபோல, இந்த ஆண்டு சகாஜ்-I படிவம் 2019-2020-ம் நிதி ஆண்டுக்கு உரியது.

எனவே, சென்ற ஆண்டைவிட இப்போதைய படிவம் வித்தியாசமாக உள்ளதே என்று குழம்ப வேண்டாம். சரியான படிவத்தில், முழுமையான வருமான விவரங்களுடன், உரிய தேதியான 31.12.2020-க்குள் வரி தாக்கல் செய்துவிடுவது நல்லது!

நோட்டீஸ் வந்தால்..!

ருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வந்தால், பதற்றமடையத் தேவையில்லை. உரிய கால அவகாசத்தில் பதில் அளித்தாலே போதும். பிரிவு 142(1)-ன்கீழ் நோட்டீஸ் வர மூன்று காரணங்கள் இருக்கலாம். 1. வரி தாக்கல் செய்யாமல் இருந்தால், அதைச் செய்ய அறிவுறுத்தலாம்.2. வரி தாக்கல் செய்தவர்களிடம் மதிப்பீடு செய்வதற்குத் தேவையான தகவல்கள் கோரப்படலாம். 3. சொத்து மற்றும் கடன் விவரங்கள் கேட்கப்படலாம். இப்பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகும் வரிதாக்கல் செய்யாமல் இருந்தால் இத்தகைய இனங்கள் தேசிய மின் மதிப்பீட்டு அமைப்பின் கட்டாய நுட்பமான சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுவிடும். இது கடந்த 17.09.2020 அன்று வருமான வரித்துறை விடுத்துள்ள அறிவிப்பாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு