அரசியல்
அலசல்
Published:Updated:

“நீங்க மட்டும் யோக்கியமா?”

“நீங்க மட்டும் யோக்கியமா?”
பிரீமியம் ஸ்டோரி
News
“நீங்க மட்டும் யோக்கியமா?”

ஓவியம்: ஜீவா

டீக்கடையில் அமர்ந்து ‘காரசார’ அரசியல் பேசும் `நீங்க மட்டும் யோக்கியமா?’ பகுதியின் இந்த அத்தியாயத்தில், காவிக்கும் கதருக்கும் இடையேயான வார்த்தைப்போரைப் படித்து, சிரிப்போம், டீ குடித்துக்கொண்டே!

காவி: என்னப்பா டீக்கடை கோவாலு... நல்லா இருக்கியாய்யா... இந்தா குங்குமப்பூ வடை சாப்பிடு!

டீக்கடை கோவாலு: வாய்யா காவி... எங்க ஒரு வாரமா ஆளையே காணோம்... வெரைட்டியா பலகாரம்லாம் வாங்கிட்டு வந்திருக்க... என்ன விசேஷம்?

காவி: அட... நம்ம காசி தமிழ்ச் சங்கமத்துக்குப் போயிருந்தேன்யா. அங்கே தந்தாங்க. வேட்டி சட்டை போட்டுக்கிட்டு எங்க மோடி ஜி என்னமா திருக்குறள் சொன்னாரு தெரியுமா?

டீக்கடை கோவாலு: ஓஹோ... காசியில ஜி `சுட்ட வடை’யா... இன்னுமா உளுத்துப்போகாம இருக்கு!

காவி: யோவ்... வந்ததும் வராததுமா இந்த நக்கல்தான வேணாங்குறது. உங்களை மாதிரி தமிழை வெச்சு லோக்கல் அரசியல் பண்ணாம... வட நாட்டுக்கே போய் வளர்க்குறோம்ல அதான் உனக்குப் பொறுக்கலை.

டீக்கடை கோவாலு: யோவ்... நீங்க தமிழை வளர்த்த லட்சணத்தைத்தான் அங்க இருந்த `ஃபிளெக்ஸ் போர்டே’ சொல்லுச்சே... திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் சேவை மையத்தை `சகயோக்’ ஆக்கி... பழங்குடி தினத்தை `ஜன்ஜட்டியா’ ஆக்கி... தமிழ்க்காரனுக்கும் புரியாம, இந்திக்காரனுக்கும் படிக்க முடியாம... நல்லா வளர்த்தீங்கய்யா.

காவி: சரி விடுய்யா... வடை ஆறுது. எங்கய்யா நம்ம கதரு... அவருக்கொண்ணு கொடுப்போம்.

டீக்கடை கோவாலு: அந்தாளையும்தான் ரொம்ப நாளா காணோம்... அட ஆயுசு நூறு, இந்தா வாராரு பாரு.

காவி: என்னய்யா கதரு... மண்டையில கட்டு... சட்டையெல்லாம் வேற கிழிஞ்சிருக்கு!

டீ.கோ: என்னாச்சுய்யா எங்கயாச்சும் விழுந்துட்டியா... ஆஸ்பத்திரிக்குப் போனியா?

கதர்: அதெல்லாம் இல்லைய்யா... சத்தியமூர்த்தி பவனுக்குப் போயிட்டு வந்தேன்யா. அங்க...

காவி: போதும்யா... `கோஷ்டிப்பூசல்’ல உன்னையும் கொத்து பரோட்டா போட்டுட்டாய்ங்கனு புரிஞ்சுருச்சு... ஹாஹாஹா!

கதர்: யோவ் நீங்க மட்டும் யோக்கியமா... அங்க மட்டும் என்ன வாழுதாம்... நாங்க வீரமா வீதியில அடிச்சுக்குறோம். நீங்க அசிங்கமா `ஆடியோவுல’ சந்தி சிரிக்கிறீங்க... ஹாஹா...

டீ.கோ: யோவ் கதரு... `அந்த’ ஆடியோவ நீயுமா கேட்ட. அதான் காதுலயும் சேர்த்துக் கட்டு போட்டுருக்கியாக்கும்... ஹா ஹா...

காவி: யோவ்... அது எங்க கட்சிக்குள்ள அக்கா, தம்பியா பேசிக்கிட்டதுனு அப்போவே சொல்லிட்டோம்ல... பின்ன என்ன?

“நீங்க மட்டும் யோக்கியமா?”

கதர்: அடங்கொப்புரானே... உங்க வீட்ல அக்கா தம்பிங்கல்லாம் இப்பிடித்தான் பேசிப்பாங்களா... வெக்கமே இல்லாம எப்பிடிய்யா இப்புடி முட்டுக்கொடுக்குற?

காவி: விடுய்யா... அதுக்குத்தான் எங்க அண்ணாமலை ஜி கடுமையான நடவடிக்கைல்லாம் எடுத்துருக்காருல்ல...

கதர்: எது... `ஒப்புக்கு ஆறு மாசம் நீக்குவோம். நம்பிக்கை வந்தா திரும்பச் சேர்த்துப்போம்’ங்குற ஆஃபர் நடவடிக்கையா?

டீ.கோ: அப்போ `பெண்களைத் தப்பா பேசுனா நாக்கு இருக்காது’னு அண்ணாமலை மேடையில சொன்னதுல்லாம்...

கதர்: அது வேற வாயி... தி.மு.க பண்ணினாத்தான் பொங்குவாங்க.

காவி: யோவ்... சும்மா நிறுத்துங்கய்யா. தி.மு.க சைதை சாதிக் எங்க கட்சிப் பெண்களையெல்லாம் தப்பாப் பேசுனாரு. அதை நீங்க யாராச்சும் தட்டிக் கேட்டீங்களாய்யா... நாங்கதானே போராட்டம் நடத்துனோம்?

கதர்: அந்தப் போராட்டத்துலயும் சம்பந்தப்பட்ட குஷ்பு, காயத்ரி, நமீதா, கௌதமியை வரவிடாம தடுத்து, ஒன் மேன் ஷோ அரசியல் பண்ணினது நீங்களும், உங்க கட்சித் தலைவரும்தானய்யா!

காவி: பேசுங்கய்யா...பேசுங்க... 2026-ல இருக்கு உங்களுக்கெல்லாம். யார் தயவும் இல்லாம நாங்க தனிச்சு தேர்தல்ல நின்னு, தமிழ்நாட்டை எங்க கோட்டையா மாத்திக் காட்டுவோம்.

கதர்: ஏன்யா... எப்பிடிய்யா இதைச் சிரிக்காம சொல்ற?

டீ.கோ: எல்லாம் குஜராத் தேர்தல்ல மெஜாரிட்டியில ஜெயிச்ச மெதப்புதான். எப்பிடிய்யா ஜெயிச்சீங்க?

கதர்: ஒரு பக்கம் இலவசத்தால நாடே சீரழிஞ்சுடுச்சுனு ஒப்பாரி வெக்கிறது, அப்புறம் தேர்தல்னு வந்ததும் இலவச வாக்குறுதிகளை வாரி இறைச்சு டகால்ட்டி வேலை காட்டுறதுதான் காரணம்.

காவி: நாங்க இலவசங்களைக் கொடுத்து ஜெயிச்சுட்டோம் சரி... நீங்க ஏன்யா தோத்தீங்க?

கதர்: கோயில்ல பூஜைய வெச்சுக்கிட்டு, குழாயடில உருண்டா என்ன பண்றது?

காவி: யோவ்... நீ `பாரத் ஜோடோ’ யாத்திரையைத்தானே சொல்ற? ஹா...ஹா...

டீ.கோ: மைண்ட் வாய்ஸ்னு நினைச்சுக்கிட்டு பெருசு சத்தமா பேசிடுச்சுபோல...

கதர்: (ஐயய்யோ... அதிருப்தி அணினு சொல்லி கலாய்ப்பானுங்களே... சமாளிப்போம்) அது சரி... தமிழ்நாட்டுல எப்பிடிய்யா ஜெயிப்பீங்க?

காவி: ஒவ்வொரு சாதிக்காரங்களுக்கும் வரிசையா கட்சியில பெரிய போஸ்ட்டிங் கொடுப்போம். அந்த சாதிக்காரங்களோட தலைவருக்கெல்லாம் விழா எடுப்போம், ஸ்டாம்ப் வெளியிடுவோம்...

கதர்: மீதியை நான் சொல்றேன்... `எந்த மசோதாவுக்கும் கையெழுத்து போடாத ஆளுநர்கிட்டயே மாநில அரசைப் பத்தி கம்ப்ளெயின்ட் பண்ணுவோம். நீட், ஆன்லைன் ரம்மி தற்கொலைக்கெல்லாம் காரணம் முதலமைச்சர்தான்னு பழியைப்போட்டு மக்கள்கிட்டயும் பர்ஃபார்மன்ஸ் பண்ணுவோம்.

காவி: அப்புறம், கட்சியை உடைச்சு ஆளுங்களை எங்க பக்கம் இழுத்துப்போம். ஸ்கூல் பிரச்னை, சிலை பிரச்னை, கோயில் பிரச்னையையெல்லாம் எடுத்து கலவரம் பண்ணுவோம்... அப்புறம் சட்டம்-ஒழுங்கு கெட்டுடுச்சுனு ஆளுநருக்கு ஒரு அறிக்கை போடுவோம்.

டீ.கோ: யோவ் காவி... எங்ககூடச் சேர்ந்து நீயும் உண்மையையெல்லாம் கக்கிட்டு இருக்கய்யா. ஹா... ஹா...

கதர்: யோவ் டீக்கடை... ஏன்யா சொன்னே... பேசாம ரெக்கார்டு போட்டுருந்தீன்னா நாமளும் ஆடியோ ரிலீஸ் பண்ணி ஃபன் பண்ணியிருக்கலாம்ல...

காவி: ஆத்தி... உங்ககூட கொஞ்சம் நேரம் பேசுனாக்கா... நானும் எனக்கு இருக்குற ஒரே கட்சியையும் விட்டுப்புட்டு பழைய மாதிரி ரௌடியா ஜெயிலுக்குப் போகவேண்டியதுதான். ஆளை விடுங்கடா சாமி!

கதர்: வந்த வேலை முடிஞ்சுது. நீ வடையச் சாப்புடுய்யா டீக்கடை!